உள்ளூர் செய்திகள்

தெய்வீக கதைகள் - 5

அற்புதக்குச்சிகிராமம் ஒன்றில் வைத்தியர் ஒருவர் மனைவியுடன் வசித்தார். வைத்தியருக்கு காட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஏனெனில் அங்கு ஏதாவது அரிய பொருள் கிடைத்தால் அதைக் கொண்டு பெரிய மனிதராக வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்படி காட்டில் குடிசை அமைத்து மனைவியுடன் குடியேறினார். அங்கு ஏதாவது அரிய பொருள் கிடைக்கிறதா என தேடல் வேட்டையில் இறங்கினார். கணவர் என்ன தேடுகிறார் என மனைவிக்குத் தெரியாது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைப்பது அவளின் அன்றாட பணியாக இருந்தது. இப்படியே பல ஆண்டு தேடுதலிலேயே கழிந்தது. இருவருக்கும் வயதானது. ஆனாலும் வைத்தியர் தேடும் படலத்தை நிறுத்தவில்லை! ஒருநாள் வழக்கம் போல அலைந்து விட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். மனைவியைக் காணவில்லை. எங்கு போயிருப்பாள் என்ற குழப்பம், பயம் ஏற்பட்டது. ஆனால் என்ன அதிசயம்! மனைவிக்குப் பதிலாக அழகான இளம்பெண் ஒருத்தி குடிசையில் நின்றிருந்தாள். இதுவரை அந்த பெண்ணை பார்த்ததே இல்லை. இவள் யாராக இருக்கும் எனக் குழம்பினார். அவரைக் கண்டதும் வெட்கப்பட்ட அவள் வணங்கினாள். வைத்தியருக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. 'வம்பாக இருக்கிறதே! ஏதாவது சிக்கலில் அகப்பட்டு விட்டோமா?' என்ற பயத்தில் 'யாரம்மா நீ' எனக் கேட்டார்.'என்னைத் தெரியவில்லையா... உற்றுப்பாருங்கள். நான்தான் உங்கள் மனைவி' என்றாள். வைத்தியருக்கு தலை சுற்றியது. 'உனக்கு என்னாச்சு' எனக் கேட்டார்.''நீங்கள் வழக்கம் போல பகலில் தேடச் சென்று விட்டீர்களா? காட்டில் திரிந்து விட்டு வரும் போது பசியோடு இருப்பீர்களே என கூழ் காய்ச்சலாம் என எண்ணினேன். பெரிய சட்டியில் கூழைக் காய்ச்சிய போது அதை கலக்குவதற்காக துடுப்பை (கலக்கும் மரக்குச்சி) தேடினேன். ஆனால் அது இருக்கும் இடம் தெரியவில்லை. அதற்கு மாறாக மெல்லிய கரண்டிதான் கிடைத்தது. பரவாயில்லை அதனை வைத்துச் சமாளிக்கலாம் என எண்ணி கூழைக் கலக்கினேன். என் அதிர்ஷ்டமா அல்லது துரதிருஷ்டமா தெரியவில்லை. அந்த கரண்டி உடைந்து போனது. கூழைக் கலக்காவிட்டால் அடி பிடித்து விடுமே... என்ன செய்வதென யோசித்தேன். சரி! ஆனது ஆகட்டும் என குடிசையின் அருகில் பருமனான பெரிய மரக் குச்சி கிடப்பதைக் கண்டேன். அதை எடுத்துக் கொண்டு அடுப்பில் இருந்த கூழைக் கலக்கினேன். என்ன ஆச்சரியம்! கூழ் மொத்தமும் கருப்பாக மாறியது. கூழ் வீணாகி விட்டதை எண்ணி வருந்தினேன்.வேறு பாத்திரத்தில் உங்களுக்காக புதிதாக கூழைக் காய்ச்சத் தொடங்கினேன். கருப்பாக இருந்த கூழை வீணாக்க மனம் இடம் தரவில்லை. நானே குடித்து முடித்தேன். சற்று நேரத்தில் என் நரை, திரை, முதுமை எல்லாம் மறைந்தன. இளம்பெண்ணாக மாறி விட்டேன்'' என்றாள். மனைவி சொன்னதைக் கேட்ட கணவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. வைத்தியர் என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டார். இப்படி அதிசய பொருளை பெற வேண்டும் என்று தானே இத்தனை நாளாக காத்திருந்தோம் என்ற அவசரத்தில், ''எங்கே அந்தக் குச்சி? இதைத் தானே நான் தேடினேன்'' என்றார். அதற்கு அவள், ''அவசரம் வேண்டாம்! நான் சொல்வதை கேளுங்கள். அந்தக் குச்சியைத் தான் இரண்டாவது முறை கூழ் காய்ச்சிய போது இரண்டாக ஒடித்து அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே'' என்றாள்.வைத்தியருக்கு நெஞ்சு அடைத்தது. மயங்கி விழுந்தார். இத்தனை ஆண்டுகளாக தேடிய முயற்சி வீணாகி விட்டதே என வருந்தினார். இப்படித்தான் நாம் அரிதான மனிதப் பிறவியைப் பெற்றும் அதை முறையாகப் பயன்படுத்தாமல் வீணாக்குகிறோம். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைக்கிறார்.-தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com