தெய்வீக கதைகள் - 9
கடவுள் எங்கே?குருகுலத்தில் வேதம் படிக்கும் சீடன் ஒருவன், “கடவுள் எங்கே இருக்கிறார்'' என குருநாதரிடம் கேட்டான். 'அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதும் அவரே” என்றார்.மறுநாள் அந்த சீடன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்று தொலைவில் யானை ஒன்று வருவதைக் கண்டனர். திடீரென அந்த யானை பாகனுக்குக் கட்டுப்படாமல் ஓடியது. பயத்தால் அனைவரும் ஓடினர். ஆனால் குறிப்பிட்ட சீடன் மட்டும் நகரவில்லை. காரணம் கடவுளைப் பற்றி குருநாதர் சொன்னது அவனது நினைவிற்கு வந்தது. யானைப்பாகனும் அவனை ஒதுங்கிப் போகும்படி உரக்கச் சொல்ல ஆனால் அவன் ஒதுங்கவில்லை. எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்றால் யானைக்குள்ளும் அவர் இருக்கிறாரே... அதனால் தீங்கு ஏற்படாது என நினைத்தான். ஆனால் மதம் பிடித்த யானையோ அவனை துாக்கி வீசியது. காயத்துடன் தப்பினான். மற்றவர்கள் நடந்ததை குருநாதரிடம் விவரித்தனர். அப்போது குறுக்கிட்ட அவன், '' குருவே...எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதாகச் சொன்னீர்களே! யானைக்குள் அவர் இருந்த போதிலும் ஏன் இப்படி நடந்தது” எனக் கேட்டான். ''இப்போதும் சொல்கிறேன். எல்லா உயிர்களிலும் இருப்பவர் அவரே. பாகன் வடிவில் உன்னை ஒதுங்கச் சொன்னதும் அவரே'' என்றார். உண்மையை உணர்ந்த சீடன் தலை குனிந்தான். இதைப் போலவே மற்றொரு குருநாதர் சீடர்களுடன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். நீண்ட துாரம் நடந்ததால், “ குருவே! எங்களுக்கு பசிக்கிறது'' என்றனர். “இதோ இங்குள்ள மரத்தின் பழங்களை உண்ணுங்கள்'' என்றார். அவர்களும் அந்த பழங்களை சாப்பிட்டனர். சூரியன் மறைய இருட்டத் தொடங்கியது. அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர நீண்ட துாரம் நடக்க வேண்டியிருந்தது. “இப்படி இருட்டில் காட்டு வழியாக குருநாதர் அழைத்துச் செல்கிறாரே! பசியும், தாகமும் அதிகமாக இருக்கிறதே. இரவு சாப்பாடு எப்போது கிடைக்குமோ...'' என வருந்தியபடியே நடந்தனர். அப்போது “ ஜாக்கிரதையாக வாருங்கள். இங்கு புலி, கரடி என மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். தீவட்டியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடங்கள்'' என்றார் குருநாதர். ஒருவழியாக ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அவர்களுக்குத் தேவையான உணவு தயாராகிக் கொண்டிருந்தது. “கடவுள் அருளால் நல்லபடியாக வந்துவிட்டோம்'' என்றார் குருநாதர். “பசி வயிற்றை கிள்ளுகிறது. முதலில் சாப்பிடலாம்'' என்றனர் சீடர்கள். “சற்று பொறுங்கள்! கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுவோம்'' என்றார். சீடர்கள் கோபத்துடன், ''கடவுளுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' எனக் கத்தினர். “நாம் வந்த பாதையில் காட்டு விலங்குகள் வந்து இருந்தால் நம் நிலைமை என்னாகும்? ஒரு மிருகத்தையாவது பார்த்தோமா... இல்லையே... கடவுள் தான் நம்மைக் காப்பாற்றினார். அதனால் தான் சொல்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்வோம்'' என்றார் குருநாதர்.“ விலங்குகள் திரியும் காட்டில் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது கடவுளின் அருளால் தான்'' என சீடர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இப்படித்தான் ஒருமுறை கடவுளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றான் ஒருவன். அப்போது அவன், “ பிறப்பு என்றால் என்ன?'' எனக் கேட்டான். “பிறந்து பார்; அப்போது தெரியும்'' என்றார். “வாழ்வு என்றால் என்ன?” எனக் கேட்டான். “வாழ்ந்து பார் புரியும்'' என்றார். அவன் மீண்டும், '' இறப்பு என்றால்...?'' எனக் கேட்டான். சிரித்துக் கொண்டே, ''இறந்து பார்; அப்போது புரியும்''என்றார் கடவுள். “எல்லாவற்றையும் நான் செய்து பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் எதற்கு?” எனக் கோபத்தோடு கேட்டான். ''அனுபவம் என்பதே நான் தான்'' எனச் சொல்லி விட்டு கடவுள் மறைந்தார். -தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com