பச்சைப்புடவைக்காரி - 30
பல நாள் திருடன்…என் முன்னால் அமர்ந்திருந்த போலீஸ்காரரைப் பார்த்தேன். “நாற்பது வருஷமா நான் போட்டுக்கிட்டிருக்கற காக்கி உடுப்புக்கு அர்த்தமில்லாம போயிருச்சிய்யா. இனிமேல் நான் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன?”அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் பருகச் செய்தபின் கதையைச் சொன்னார்.“நான் பாண்டியன். பி 5 ஸ்டேஷன்ல ஏட்டையாவா இருக்கேன். எங்க சரகத்துல பாலன்னு ஒரு திருட்டுப்பய இருக்கான். பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டிருக்கறவங்க செல்போன லபக்கிருவான். ஏ.டி.எம்., வாசல்ல நின்னுக்கிட்டு உதவி பண்றேன் பேர்வழின்னு அப்பாவிங்க பணத்த அபேஸ் பண்ணிருவான். ஒருதரம் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கான்யா. இந்தக் களவாணிப்பய தாலியத் திருடிட்டுத் தப்பிச்சிட்டான். தாலி திருடு போனது நல்ல சகுனம் இல்லன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணத்த நிறுத்திட்டாங்க. நான்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கால்ல விழுந்து என் கைப்பணத்தக் கொடுத்து மத்த ஆளுங்ககிட்டயும் வசூல் பண்ணி வேற தாலிய வாங்கிக் கொடுத்து கல்யாணத்த நடத்தினேன். நான் ஒத்தப் பொண்ணப் பெத்தவன்யா. அவளுக்குக் கல்யாணம் பாத்துக்கிட்டிருக்கேன். பச்சைப்புடவைக்காரி என்னப் பெத்த ஆத்தா. அவ பாத்துப்பா. ஆனா அந்தக் களவாணிப் பய பாலனோடக் கண்ணக் குத்தாம விட்டிருக்காளே, ஏன்யா?”“பாலன ரெண்டு தட்டு தட்டி கேஸ் போட்டு தண்டனை வாங்கித் தரலாமே?”“இதுவரைக்கும் அவன் மீது பத்து கேஸ் போட்டோம். ஆனா எந்தக் கேசும் கோர்ட்ல நிக்க மாட்டேங்குது. பெரிய வக்கீல வச்சி வாதாடி எப்படியாவது வெளிய வந்துடறான். கேச நான் சரியா நடத்தலன்னு என் இன்கிரிமெண்ட்டையும் ப்ரமோஷனையும் நாலஞ்சு தரம் நிறுத்தி வச்சிட்டாங்க.“எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்குங்க. அதுக்குள்ள அந்தக் களவாணிப் பயலுக்கு ஆறு மாசமாவது ஜெயில் தண்டனை வாங்கித் தரணும்” “பச்சைப்புடவைக்காரி ஆட்சில யாருமே தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அந்தத் தண்டனையப் பத்தி நமக்குத் தெரியணும்னு நெனச்சா அவ சொல்வா''தொடர்பு விவரங்களைக் கொடுத்து விட்டு பாண்டியன் சென்று விட்டார்.அன்று மாலை கோயிலுக்கு நடந்தே சென்றேன். பாலனைப் போல் பல திருடர்கள் இந்தச் சமுதாயத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நல்லவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். ஏன் இந்தக் குளறுபடி? கோயில் வாசலில் ஒரு போலீஸ்காரர் என்னை நோக்கி வந்தார்.“உங்கள மேடம் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க”“எந்த மேடம்?”“எங்க டி.எஸ்.பி., மேடம். உங்ககிட்ட ஏதோ விசாரணை பண்ணனுமாம்”“வாரண்ட் இருக்கா? எப்.ஐ.ஆர்., போட்டிருக்கீங்களா? நான் என் வக்கீலை பாக்கணும்”பயத்தில் உளறினேன். போலீஸ்காரர் என் கையைப் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றார். போலீஸ் ஜீப்பில் சாய்ந்தபடி கம்பீரமாக நின்றிருந்த அந்த பெண்ணைப் பார்த்ததும் அவள் யாரென தெரிந்தது. காலில் விழுந்தேன். “என்னை வணங்கினால் மட்டும் போதாது. முழுமையாக நம்பவும் வேண்டும்”“எனக்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள் தாயே?”“வசனமெல்லாம் என்னிடம் வேண்டாம். என் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறதா என்ன? என்னை அடிக்கடி நேரில் பார்க்கும் நீயே அப்படி நினைத்தால் மற்றவர்கள் என்னவெல்லாம் நினைப்பார்கள்?”“மன்னித்து விடுங்கள் தாயே!”“பாலன் தண்டனை அனுபவிப்பதைப் பார்த்தால்தான் உன் மனம் அமைதியுறும் அல்லவா?”“உங்களைப் பார்த்த மாத்திரத்தில் மனம் அமைதியாகி விட்டது. அதை நான் பார்க்கலாம் என்றால் எனக்குக் காட்டுங்கள்”“அங்கே பார்”பாலன் சென்னையில் ஒரு பரபரப்பான சாலையில் நின்றிருந்தான். யாரிடம் எதைத் திருடலாம் என அவன் கண்கள் நோட்டமிட்டபடி இருந்தன. அப்போது ஒரு கார் அங்கே வந்தது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் இறங்கினாள். அவள் கையில் அழகான கருப்புப் பை இருந்தது.அதில் நகை, பணம், செல்போன், கிரெடிட் கார்ட் எல்லாம் இருக்கும் என கணக்குப் போட்டான் பாலன். அதை அடித்துவிட்டால் இன்னும் ஒரு மாதம் ஓய்வெடுக்கலாம் என நினைத்தான். அந்தப் பெண் ஒதுக்குப்புறமாக நின்றிருந்தாள். அவளிடம் பையை அபேஸ் செய்து விட்டு பின்புறம் இருந்த குட்டிச் சுவரைத் தாண்டினால் அடுத்த தெருவிற்கு ஓடலாம். சுற்றி இருப்பவர்கள் சுதாரிப்பதற்குள் பையிலுள்ள பொருளை எடுத்துவிட்டு பையை கடாசி விட்டு ஓட நினைத்தான் பாலன்.அந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அவளின் கையில் இருந்த பையைப் பறித்துக்கொண்டு ஓடினான் பாலன். ஓடிய படியே பையைத் திறந்து பார்த்தான். அதில் உபயோகமான பொருள் செல்போன் மட்டும் தான் இருந்தது. அடுத்த தெருவில் இருந்த குப்பைத் தொட்டியில் பையை வீசி விட்டு ஓடி மறைந்துவிட்டான் பாலன்.அடுத்த சில நொடியில் பெரிய வெடிச்சத்தம் கேட்டது. பாலன் அபகரித்த பையில் வெடிகுண்டு இருந்திருக்கிறது. அது வெடித்துவிட்டது. குண்டு வெடிப்பில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர். அது தலைப்புச் செய்தியானது. காவல் துறையினர் அந்தப் பக்கம் இருந்த எல்லா சிசி டிவி கேமராக்களை அலசி ஆராய்ந்தனர். குப்பைத் தொட்டிக்குள் பாலன் பையை வீசிய காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது. அடுத்த இரண்டு நாளில் பாலன் கைது செய்யப்பட்டான். “நான் திருடன்தான். வெடிகுண்டைப் பற்றி எனக்கு தெரியாது” என்று சொன்ன பாலனின் வாதம் எடுபடவில்லை.“அந்த வழக்கு மூன்று வருடம் நடக்கும். குண்டுவெடிப்பில் காயப்பட்ட இரண்டு பேர் இறப்பார்கள். அதனால் பாலனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். இப்போது உனக்குத் திருப்தியா? என் ஆட்சியில் குளறுபடிகள் எதுவும் இல்லையே”“ஏட்டையா பாண்டியனிடம்...''“இதைச் சொல்லவேண்டாம். அவர் நல்லவர். அவருக்கு இனி மேல் நல்ல காலம் பிறக்கப் போகிறது. அதை உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்”வெள்ளிக்கிழமை. ஏட்டையா பாண்டியன் என்முன் அமர்ந்திருந்தார்.“பாலன் செஞ்ச எந்த பாவமும் வீணா போகாது. அவனுக்கு நாம நெனச்சதவிடப் பெரிய தண்டனை கிடைக்கும் அத விடுங்க, ஏட்டய்யா. உங்க மக கவிதா நர்சா வேலை பாக்கறாங்கள்ல?”“ஆமாங்க”“ஒரு நல்ல டாக்டர் அவள விரும்புவாரு. உங்ககிட்ட பொண்ணு கேட்டு வருவாரு. ஜாதி பேதம் பார்க்காம கல்யாணம் செஞ்சி கொடுங்க. உங்க மக பெரிய வாழ்க்கை வாழப் போறா. ஒத்தக் காசு லஞ்சம் வாங்காம நேர்மையா வாழ்ந்த உங்களுக்குப் பச்சைப்புடவைக்காரி தர பரிசு அதுதான். வயசான காலத்துல பேரன் பேத்தியோட சந்தோஷமா வாழப்போறீங்க.”கண்ணில் நீர் மல்க கைகூப்பி விடை பெற்றார் பாண்டியன்.-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com