உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 33

விதிவிலக்கு தரமாட்டேன்எனக்கு சம்பந்தம் இல்லாத வழக்கில் மாட்டிக் கொண்டேன். ஒன்றரை மணி நேரம் காக்க வைத்து விட்டு வழக்கை அடுத்த மாதம் நீதிபதி ஒத்தி வைத்தார்.கோபத்துடன் வெளியேறினேன். என்னாயிற்று பச்சைப்புடவைக்காரிக்கு? தவறே செய்யாதவர்கள் கூட தண்டனை அனுபவிக்க வேண்டும் என தர்ம சாஸ்திரத்தை மாற்றி எழுதிவிட்டாளோ? என யோசித்தபடி நடந்தேன். அப்போது என் பெயரை சொல்லி யாரோ அழைத்தார்கள்.வழக்கறிஞர் உடையில் கம்பீரமாக ஒரு பெண் நின்றிருந்தாள்.“என்னை எதற்குக் கூப்பிட்டீர்கள்?” என்னையும் மீறி குரலில் கோபம் வந்துவிட்டது.“நீ எப்போதும் என் அன்பைப் பற்றி எழுதுவதால் உனக்கு ஏதாவது சலுகை காட்டுவேன் என நினைக்கிறாயோ? நான் யாருக்கும் விதிவிலக்கு தரமாட்டேன்”“துன்பத்தில் தவிக்கும் எனக்கு ஆறுதலாக ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால்...”“நீ துன்பத்தில் தவிக்கவில்லை. கோபத்தில் தகித்துக் கொண்டிருக்கிறாய். இன்றைய நீதிமன்றக் காட்சி வெறும் முன்னோடிதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் உச்சகட்ட காட்சி அரங்கேறப் போகிறது. அதை உன்னால் தாங்க முடியுமா என தெரியவில்லை” கதறியபடி அவள் காலில் விழுந்தேன். “கர்மக் கணக்கைவிட வலியது அன்பின் கணக்கு. உன் மனதில் இருக்கும் அன்பின் அளவு குறைந்ததால்தான் இந்தத் துன்பம் வந்தது. இனியும் வரப்போகிறது. அன்பின் அளவை அதிகப்படுத்து. அதிக சேதாரம் இல்லாமல் இதில் இருந்து மீளலாம்”பதில் சொல்வதற்குள் பச்சைப்புடவைக்காரி மறைந்தாள்.காரை கவனமாக ஓட்டினேன் என்றாலும் என் மனம் நிலையில் இல்லை. ஒரு சாலை சந்திப்பில் நான் இடது புறம் திரும்பியிருக்கவேண்டும். ஏதோ ஞாபகத்தில் நேரே சென்று விட்டேன். பின் திடீரென நினைவு வந்து இடது பக்கம் திருப்பினேன். அடுத்த நொடி யாரோ அலறும் குரல் கேட்டது. காரை நிறுத்தி இறங்கிப் பார்த்தேன்.இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் என் காரில் அடிபட்டு கீழே கிடந்தாள். கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் என்னை வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டினர். ஒருவன் என்னை அடித்தே விட்டான்.அவனைப் பதிலுக்கு அடிக்க வேண்டும் என மனம் துடித்தது. 'கர்மக் கணக்கைவிட அன்பின் கணக்கு வலியது' என்ற பச்சைப்புடவைக்காரியின் வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.ஒரு போலீஸ்காரர் வந்து கூட்டத்தை விலக்கினார். அடிபட்ட பெண் எழுந்து கொண்டாள். அவளுக்கு நாற்பது வயதிருக்கும். ஆங்காங்கே காயங்கள். ரத்தம் வந்து கொண்டிருந்தது. “மத்தத அப்புறம் பேசிக்கலாம். முதல்ல ஆஸ்பத்திரிக்குப் போவோம். காரில ஏறுங்க”“பக்கத்து வீட்டுப் பையனுக்குப் போன் பண்ணி என் வண்டியக் கொண்டு போகச் சொல்றேன்”அந்தப் பையன் ஐந்து நிமிடத்தில் வந்தான். நானும் அந்தப் பெண்ணும் மருத்துவமனைக்குச் சென்றோம். வெளிக்காயம்தான், விரைவில் ஆறிவிடும் என்றார் டாக்டர். அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொடுத்தேன்.அந்தப் பெண்ணை வீட்டில் இறக்கி விட்டேன். என் பர்சில் இருந்த மூவாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தேன்.“செலவுக்கு வச்சிக்கங்க. இதுக்கும் மேல செலவு ஆச்சுன்னா தகவல் சொல்லுங்க” என என் அலைபேசி எண்ணைக் கொடுத்தேன். அவளுடைய எண்ணையும் வாங்கிக் கொண்டேன்.“நீங்க என்ன தொழில்...'' தயக்கமுடன் கேட்டாள்.நானும் சொன்னேன்.மறுநாள் காலை அலைபேசி ஒலித்தது. அவள்தான்.“கீர்த்தி பேசறேன். ராத்திரி கொஞ்சம் உடம்பு வலி இருந்தது. மத்தபடி பிரச்னை இல்ல. வண்டியும் சரி பண்ணிக் கொடுத்துட்டாங்க. உங்கள ஒரு தரம் பாக்கணுமே?”எனக்கு பயமாக இருந்தது. பிரச்னை இல்லையென்றால் ஏன் பார்க்க வேண்டும்? “பணமெல்லாம் கேட்க மாட்டேன். நீங்க கொடுத்த பணத்துல மிச்சமிருக்கு”பின் எதற்காகப் பார்க்க வருகிறாள்?”“ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்கேன். நீங்க உதவி செய்யமுடியுமான்னு கேக்கத்தான். ஆக்சிடெண்ட்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல”மறுநாள் வரச்சொன்னேன். தெளிவாக இருந்தாள். ஓரளவு அழகாகவும் இருந்தாள். நெற்றியில் இருந்த சின்ன பிளாஸ்த்ரி என் குற்ற உணர்வைத் துாண்டியது. காயத்தால் தழும்பு வந்து இவள் முகத்தோற்றம் பாதிக்குமோ?“தனியா இருக்கேன், சார். அப்பா அம்மா செத்துடாங்க. விவாகரத்து ஆயிருச்சி. அன்பு காட்ட ஆள் இல்ல. நீங்க என்ன இடிச்சிக் கீழ விழ வைச்சாலும் என்னை அன்போட கூட்டிக்கிட்டுப் போனது, என்கிட்ட கனிவாப் பேசினது மனச உருக்கிருச்சி. நான் சி.ஏ., படிக்கணும்னு முயற்சி பண்ணேன். பாதிக் கிணறுதான் தாண்டினேன். ஒரு கம்பெனில அக்கவுண்ட்ஸ் வேலை பாத்துக்கிட்டிருந்தேன். மேனேஜர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். வேலையத் துாக்கியெறிஞ்சிட்டு வந்துட்டேன். ஒரு மாசமா வேலை தேடிக்கிட்டிருக்கேன். உங்களால உதவி...''“ரெஸ்யூமே கையில வச்சிருக்கீங்களா?”எடுத்துக் கொடுத்தாள்.எனக்குத் தெரிந்த நிறுவனத்தில் இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்தின் எம்.டி.,யிடம் பேசினேன். “வரச் சொல்லுங்க. முதல்ல நாற்பதாயிரம் ரூபாய் தரேன். அப்புறம் வேல பாக்கறதப் பொறுத்து பார்க்கலாம்”கீர்த்தியிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள் கண்களில் நீர்.“முன்னால வேல செஞ்ச இடத்துல 20,000 தான் கொடுத்தாங்க. அதுக்கே வேலை பிழிஞ்சி எடுத்திருவாங்க. தனியாளுதானே, சென்னைக்குப் போ, பெங்களூருக்குப் போ, நாற்பது, அம்பது சம்பாதிக்கலாம்னு சொன்னாங்க. நான் பச்சைப்புடவைக்காரியோட பக்தை, சம்பளம் எவ்வளவு குறைச்சலா இருந்தாலும் மதுரையை விட்டு வெளியப் போகக் கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். என்னால தினமும் அவளப் பாக்காம இருக்க முடியாது. “பச்சைப்புடவைக்காரிதான் உங்க காரால என்ன இடிக்க வச்சி எனக்கு நல்ல காலத்தக் காட்டியிருக்கா. நீங்க நல்லாயிருக்கணும் சார்”கீர்த்தியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன்.அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபோது என் காரை ஒட்டி இன்னொரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.“வழிய மறிச்சி நிறுத்தியிருக்கீங்களே?” கத்தினேன்.“வழியைக் காட்டுபவள் நான். நான் ஏனப்பா உன் வழியை மறிக்கப் போகிறேன்?”பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.“சேதாரம் இல்லாமல் தப்பித்து விட்டாய் போலிருக்கிறதே”“யாரிடம் கதை அளக்கிறீர்கள்? நான் அவதிப்பட்டதற்குக் காரணம் என் கர்மக் கணக்கு இல்லை. உங்கள் அன்பின் கணக்கு”“என்ன உளறுகிறாய்?”“உங்கள் அன்பைப் பற்றி எழுதுவதற்கு என் மனதில் இருக்கும் அன்பு போதாது என கணித்தீர்கள். நான் அன்பை அதிகமாகக் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினீர்கள். நான் தடம்புரண்டு விடக் கூடாது என என்னை எச்சரித்தீர்கள். அதே சமயம் வேலையில்லாமல் தவித்த கீர்த்திக்கு நல்ல வழியைக் காட்டினீர்கள். அவள் விரும்பியபடி மதுரையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டீர்கள்”“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டேன் என்கிறாயா?”“நீங்கள் எதற்கு கல்லை எறிந்து மாங்காயை விழச் செய்ய வேண்டும்? மாமரமும் நீங்கள்தான். மாங்காயும் நீங்கள்தான். கல்லும் நீங்கள்தான். அதை எறிபவளும் நீங்கள்தான். கல்லெறிவதைப் போல் நாடகமாடி சூழலில் இருந்த அன்பை அதிகமாக்கிய நீங்கள் பராசக்தி, அன்பரசி, அகிலாண்டேஸ்வரி''பெரிதாகச் சிரித்தபடி காற்றில் கலந்தாள் பச்சைப்புடவைக்காரி. -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com