உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 36

அன்பே தீர்வு“நான் கண்ணன். பேங்க் ஆபீசர். மனைவி மாலா. அர்ஜுன், ஆர்த்தின்னு ரெண்டு குழந்தைங்க. ஓரளவு நிறைவான வாழ்க்கை”அறிவுக்களை ததும்பும் முகமுடைய இந்த நாற்பது வயதுக்காரருக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்? என நினைத்தேன். “என் மனைவிக்கும் அவளோட தங்கைக்கும் ஆளுக்கு பத்து சென்ட் நிலம் என் மாமனார் கொடுத்தாரு . நானும் சகலையும் ஒரே சமயத்துல வீடு கட்ட ஆரம்பிச்சோம். பிரச்னையும் ஆரம்பிச்சிருச்சி.”“என்ன பிரச்னை?”“சகலை நெறைய லஞ்சம் வாங்குறவரு. லஞ்சப்பணமே அந்தாளுகிட்ட லட்ச லட்சமா இருக்கு. நானும் நெறையத் தான் சம்பாதிக்கறேன். இருந்தாலும் அவரோட போட்டி போட முடியுமா? பேங்க்ல வேலை பாக்கறதுனால ஹவுசிங் லோன் ஈசியா கிடைக்குது. ஆனா என் சகலை கையில இருக்கற லஞ்சப் பணத்த வாரி விடறாரு. எனக்கு பேங்க்ல அதிகபட்சம் முப்பது லட்சம்தான் லோன் தருவாங்க. கையில நாலஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. ஆனா சகலை 75 லட்ச ரூபாய்க்கு பட்ஜெட் போட்டிருக்காரு. “ஒண்ணுமில்ல, நேத்து என் சகலையும் மச்சினியும் பாத்ரூம்ல போடற குழாய், டைல்ஸ், பிட்டிங்க்ஸ் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்திருக்காங்க. என் பொண்டாட்டியும் அதே போல வாங்கணும்னு அடம் பிடிக்கறா. எங்க பாத்ரூம்ல ஏற்கனவே அதெல்லாம் போட்டாச்சு. போட்டதக் கழட்டிட்டுப் புதுசாப் போடணும்னு ஒத்தக்கால்ல நிக்கறா. அதுக்கு அம்பதாயிரம் ரூபாய் அதிகமாச் செல்வாகும்னா கேக்க மாட்டேங்கறா. “தங்கச்சி புருஷன் குமாஸ்தா. அவங்களே அவ்வளவு செலவழிக்கும்போது ஆபீசர் பொண்டாட்டியான நான் அதிக விலைக்கு வாங்க வேண்டாமாங்கறா? சகலைக்குப் போட்டியா நாங்களும் வீடு கட்ட ஆரம்பிச்சா எங்க கதை கந்தலாயிரும் சார்”சிறிது நேரம் புலம்பிவிட்டு கண்ணன் கிளம்பிவிட்டார். என்னவென்று பிரார்த்தனை செய்வது? அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபோது ஒரு பெண் என்னிடம் ஒரு சீட்டை நீட்டினாள்.“இவரு யாரு? எங்க இருப்பாரு?” சீட்டைப் பார்த்து அதிர்ந்தேன்.“என்னம்மா என் பேரக் காமிச்சி என்கிட்டயே நான் யாருன்னு கேக்கறீங்க?”“ஆமாம். நீ உன்னையே மறந்துவிட்டாய். ஞாபகப்படுத்துகிறேன். நீ என்னை மறந்துவிட்டால் நான் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையை மறந்துவிட்டால் அது உன்னையே மறப்பதற்குச் சமம்தானே”“தாயே” கதறியபடி அவளுடைய கால்களில் விழுந்தேன்.“இப்போது சொல். கண்ணனுக்காக எப்படி பிரார்த்திப்பாய்?”“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”“பிரச்னை கண்ணனின் மனைவி மாலாவிடம் மையம் கொண்டிருக்கிறது. அவள் மனம் அன்பால் நிறைய வேண்டும் என பிரார்த்தனை செய். நடக்கும்.”“அதற்காக லஞ்சப்பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் கண்ணனின் சகலையைச் சும்மா விடுவதா?”“தவறு செய்பவர்களைத் தண்டிப்பது என் வேலை. உன் வேலை அல்ல''என் கண்கள் பொங்கின.“லஞ்சம் வாங்குபவன் உரிய தண்டனையை உரிய காலத்தில் பெறுவான். இப்போது கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதுதான் முதல் வேலை”“கண்ணனின் பிரச்னை எப்படி தீரும்?”“அவன் மனைவியிடம் பொங்கும் அன்பால்”“எப்படி?”“அங்கே பார்”மறுநாள் அதிகாலையிலேயே கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. வேறு வழியில்லாமல் ஐம்பதாயிரம் கூடுதல் விலைகொடுத்து பாத்ரூம் குழாய்கள், மற்ற சமாச்சாரங்கள் வாங்க கண்ணன் சம்மதித்தான். பிளம்பரை அழைத்தாள் மாலா. அவன் அலைபேசியை எடுக்கவில்லை. இப்போது விட்டால் பிடிக்க முடியாது என்று அவரின் வீட்டிற்கே சென்று விட்டாள். அது ஒரு குடிசை வீடு. பிளம்பர் கனகராஜ் எனக் கூப்பிட்ட போது அவரது மனைவி வெளியே வந்தாள்.“பக்கத்துல போயிருக்காரும்மா. இப்போ வந்திருவார்.” என்றாள். அங்கே நின்றிருப்பதே மாலாவிற்கு சித்திரவதையாக இருந்தது. அரைகுறை ஆடையுடன் நின்றிருந்த இரு குழந்தைகள் மாலாவை பார்த்தபடி இருந்தன. மாலாவிற்குக் கோபம் வந்தது.“எவ்வளவு நேரமாம்மா காத்திருக்கறது? காலங்காத்தால அந்தாளு எங்க போய்த் தொலைச்சாரு?”பிளம்பரின் மனைவி எந்த உணர்ச்சியும் இல்லாத குரலில் சொன்னாள். “எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு கேக்க மாட்டேங்கறாரு. ஊருக்கே பாத்ரூம் கட்டிக் தர்றாரு. ஆனா இங்க எங்களுக்கு அந்த வசதி கிடையாது. ஆத்திரம் அவசரம்னா பக்கத்துல இருக்கற குளத்துக்குத்தான் ஓடணும். இப்போக்கூட அங்கதான் போயிருக்காரு. பெரிய இம்சைம்மா. அதுவும் பத்து நாளைக்கு முன்னால என் புருஷனுக்குச் சாப்பாடு ஒத்துக்காமப் போயிருச்சி. ஒரு நாள்ல பத்து தரம் குளத்துக்கு ஓட வேண்டியதாப் போச்சு. இப்படி வாழறதுக்கு பேசாம செத்துரலாமான்னு தோணிருச்சிம்மா. நீங்க போங்க, அவர் வந்தவுடன உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்”வீட்டுக்கு வரும் வரை மாலாவின் காதில் பிளம்பரின் மனைவி சொன்னது ஒலித்தபடி இருந்தது. “மன்னிச்சிருங்கம்மா. ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன். என்ன வேணும், சொல்லுங்கம்மா”“புதுவீட்டுக்கு ஏற்கனவே போட்டிருக்கற பிட்டிங்கஸக் கழட்டிட்டு இன்னும் கொஞ்சம் ஆடம்பரமா வாங்கலாம்னு யோசிச்சேன்”“செஞ்சிரலாம்மா.”“இல்ல, இப்போ என் மனச மாத்திக்கிட்டேன். நம்ப புது வீட்ல இன்னும் சின்ன பாத்ரூம் கட்டணும். எட்டுக்கு அஞ்சு சைஸ். இந்தியன் க்ளாசட் வைக்கணும். சாதாரண சுவர். சிமெண்ட் தரை. மேல கான்க்ரீட் கூரை. ஒரு குழாய் வைக்கணும். அதுக்கு என்ன செலவாகும்?”“நல்ல பொருளாப் போட்டு சிக்கனமாக் கட்டினா முப்பதாயிரம் ஆகும்மா. எதுக்கும்மா திடீர்னு பாத்ரூம்? வேலைக்காரங்களுக்கா?”“மத்தியானம் வாங்க. முப்பதாயிரம் தரேன். அத வச்சிக்கிட்டு நான் சொன்ன மாதிரி ஒரு பாத்ரூமா உங்க வீட்டுல கட்டிக்கங்க”“அம்மா…''“என் வீட்டுல பாத்ரூம் பிட்டிங்க்ஸ் ஆடம்பரமா இருக்கணும்னுதான் கணவரிடம் சண்டைபோட்டு அம்பதாயிரம் ரூபாய் வாங்கினேன். உங்க வீட்டுக்கு வந்தபோதுதான் அங்க பாத்ரூமே இல்லன்னு தெரிஞ்சது. உங்க வீட்ல நாளைக்கே வேலைய ஆரம்பிங்க”பிளம்பர் கண்ணீர் மல்க கைகூப்பினான். மாலாவுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி.“இனி மேல் கண்ணனுக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்க மாட்டாள் மாலா. இவளது வீடு எளிமையாக இருக்கும். அவனுடைய சகலையின் வீடு பிரம்மாண்டமாக இருக்கும். அதுவே அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கும். சகலை சிறை செல்வான். மாலாவே தங்கையின் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வாள். உனக்கு என்ன வேண்டும் சொல்”“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”.-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com