உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 42

கனிந்தது மனம்அலுவலக வாசலில் நான் வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தில் ஒரு பழக்கடை முளைத்திருந்தது.“இங்கயா வந்தா கடை போடுவாங்க? வேற இடம் கிடைக்கல?” என்றேன்.“எல்லா இடமும் என் இடம்தான். இந்தப் பிரபஞ்சமே நான் விரித்த கடைதான்” என்றாள் அந்த கடைக்காரி. அவளின் காலில் விழுந்தேன்.“உன்னைப் பார்க்க ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்ததுமே உன் மனதில் எதிர்மறை உணர்வுகள் அலைமோதும். அவள் சூழ்நிலை அப்படி. அவள் வீழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை மீட்க வேண்டும். மென்மையாகப் பேசு. ஆனால் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடு.”காத்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு ஐம்பது வயது இருக்கும்.“என் பெயர் பார்கவி. நான் ராம்குமார் மனநல மருத்துவமனையில நர்சாக இருக்கேன்”அவள் சொன்னதும் என் மனதில் இறுக்கம் வந்தது. அவள் மீது காரணமே இல்லாமல் வெறுப்பு வந்தது. “எனக்கு விவாகரத்தாயிருச்சி. ஒத்தப் பொண்ணு. உயிரக் கொடுத்து வளர்த்தேன். ஆனா அவ என்கிட்ட ஒட்டவே மாட்டேங்கறா. இங்கதான் ஒரு கம்பெனில வேலை பாக்கறா. ஆனா என்கூட இருக்காம வாடகை வீட்டுல இருக்கா. அவளுக்கு நான் என்னய்யா குறை வச்சேன்? அவ ஏன் என்ன வெறுக்கணும்?”எனக்குள் இருந்த தவிப்பு குறையவில்லை. பச்சைப்புடவைக்காரியை மனதில் நிறுத்தியபடி பார்கவியைக் கனிவோடு பார்த்தேன்..“உங்க வேலை கஷ்டமோ?”“ரொம்பக் கஷ்டம்யா. எங்க ஆஸ்பத்திரில இருக்கற நோயாளிகள்ல முரட்டுக் கேசுங்கள எல்லாம் என்னப் பாக்கச் சொல்லிருவாங்க. அவங்களத் திட்டணும். அடிக்கணும். உதைக்கணும். அப்போதான் சமாளிக்க முடியும்”“அவங்க மன நோயாளிங்கதானேம்மா.. கொஞ்சம் கனிவா…''“கனிவா? விளையாடறீங்களா? நான் வேலை செஞ்சிக்கிட்டிருக்கும்போது ஒருத்தன் என்ன ஓங்கி முதுகுல அடிப்பான். ஒரு பொம்பளை என் டிரஸ்ஸக் கிழிப்பா. இன்னொருத்தன் டிரஸ்ஸே இல்லாம என் முன்னால வந்து குதிப்பான்”“நீங்க எப்படி சமாளிப்பீங்க?”“முதல்ல சொல்லிப் பார்ப்பேன். அப்புறம் திட்டுவேன். அப்புறம் கையால அடிப்பேன். அதுக்கும் அடங்கலேன்னா அவங்கள அடிக்கறதுக்குன்னே ஒரு கம்பு வச்சிருக்கேன். அந்தக் கம்ப பாத்தாத்தான் அவனுங்க அடங்குவானுங்க”“பல வருஷங்கள் இதே வேலையில இருந்து உங்க மனசு கடினமாயிருச்சி. உங்க மனசுல வன்மம் அதிகமாயிருச்சி''“என்னய்யா சொல்றீங்க?”“பயப்படாதீங்கம்மா. நீங்க பாக்கற வேலை அப்படி. தீயணைப்புத் துறையில வேலை பாக்கறவங்களுக்குத் தீக்காயம் படற மாதிரி உங்க மனசுல உள் காயங்கள் வந்திருச்சி. மனசுல கொஞ்சம்கூட அன்பில்லாம போச்சு”“ஐயையோ! இப்போ என்ன பண்றது?”“முதல்ல ஒரு வாரம் லீவு போடுங்க. மனச அமைதியா வச்சிக்கங்க. முடிஞ்சா தினமும் கோயிலுக்குப் போங்க. ஒரு வாரம் கழிச்சி வேலைக்குப் போங்க. கூடிய மட்டுல வன்முறையக் குறைச்சிக்கங்க. உங்க தற்காப்புக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா அவங்க மன நோயாளிங்கங்கறத மறக்காதீங்க. ஒரு நோயாளிய முதல்ல பார்க்கும் போது அவருக்காகப் பச்சைப் புடவைக்காரிகிட்ட பிரார்த்தனை பண்ணிக்கங்க. இவர மென்மையாக் கையாள்ற அளவுக்கு என் மனசுல அன்பு இருக்கணும்னு வேண்டிக்கங்க. வன்முறை கூடாதுங்கறத ஒரு விரதமாவே வச்சிக்கங்க”“அதுக்கும் என் பொண்ணு என் கிட்ட திரும்பி வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?”“உங்களுக்கு இப்போ இருக்கற மனநிலையில நீங்க மனுஷ உறவுங்களக் கையாளவே முடியாது. உங்க பொண்ணு உங்க பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டா. நான் சொல்ற மாதிரி செய்யுங்க. நல்லது நடக்கும்னுதான் எனக்குத் தோணுது”பார்கவி சென்றவுடன் நானும் கிளம்பினேன். காருக்கு அருகில் பழக்கடை இன்னும் இருந்தது. பழக்காரியை விழுந்து வணங்கினேன்.“பார்கவி கடைத்தேறி விட்டாள். பத்து நாட்கள் கழித்து நடப்பதைப் பார்”பார்கவி பணியில் இருந்தாள். அன்று ஒரு வில்லங்கமான நோயாளி மருத்துவமனையில் இருந்தான். இளைஞன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவன். மனநலம் இல்லாதவன். அவன் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தான். அவனைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தார்கள். யாராவது நர்ஸ்கள் பார்க்கப் போனால் அவர்கள் மீது துப்புவான். தன்னைத் தானே நகத்தால் கீறிக் கொண்டு அந்த ரத்தத்தை நர்ஸ்கள் மீது தெளிப்பான். அதனால் எய்ட்ஸ் வந்துவிடுமோ என பயந்து யாருமே அறைக்குள் போகவில்லை. அவனைப் பார்த்துக்கொள்ளூம் பொறுப்பு பார்கவிக்கு தரப்பட்டது. வழக்கம் போல் தன் கம்பை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். திடீரென ஏதோ ஞாபகம் வந்தது. நர்ஸ்கள் அறைக்குத் திரும்பினாள். பச்சைப்புடவைக்காரியின் படத்தின் முன் நின்றபடி பிரார்த்தித்தாள். என்ன பிரார்த்தனை என்பதும் தெரிந்தது.“என் உயிரைப் பணயம் வைத்து அந்த நோயாளியைப் பார்க்கப் போகிறேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் அவனைக் காயப்படுத்தி விடக்கூடாது. அவனுடைய வேதனையைக் குறைக்கும் சக்தியை எனக்குக் கொடுங்கள் தாயே!” கையில் இருந்த கம்பைக் கடாசிவிட்டு எய்ட்ஸ் நோயாளியின் அறைக்குள் நுழைந்தாள். அறை முழுவதும் அவன் எறிந்த பொருட்கள் கிடந்தன. ஆள் பார்க்க அழகாக இருந்தான். உலகத்தில் உள்ள சோகமெல்லாம் அவன் முகத்தில் தெரிந்தது. பார்கவியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் அவள் அசரவில்லை.“உதவி செய்யத்தான் நான் வந்திருக்கிறேன். பிரச்னையை சொல். உன் பக்கத்தில் வருகிறேன். என் மீது துப்பாதே” பார்கவியின் வார்த்தைகள் அவனைச் சாந்தப்படுத்தின.“என்னால... மூச்சு விடமுடியல மூச்சுவிட்டா நெஞ்சு வலிக்குது சிஸ்டர்”பார்கவி துணிவுடன் அவன் அருகே சென்றாள். அவன் நெஞ்சில் தன் காதை வைத்துக்கொண்டாள்.“இப்போது மூச்சு விடு பார்க்கலாம்.” அவனுடைய ஒரு பக்க நுரையீரல் வேலை செய்யவில்லை என்பதை உடனே கண்டுபிடித்துவிட்டாள். அவசரச் சிகிச்சை விசையை அழுத்த, சில நிமிடங்களில் அங்கே பல ஊழியர்கள் குழுமினர். அந்த இளைஞனை அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள். உள்ளே ஒரு டியூப்பைச் சொருகி அவனைச் சுவாசிக்க வைத்தார்கள். அந்த இளைஞன் அமைதியானான். அவனுக்கு நினைவு திரும்பியவுடன் பார்கவியைப் பார்த்துக் கண்ணீர் மல்கக் கைகூப்பினான்அன்று மாலை மருத்துவமனைத் தலைவர் பார்கவியை அழைத்துப் பாராட்டினார்.“பார்கவி நீங்க செஞ்சது எல்லாம் சிசி டிவி கேமராவுல பாத்தேன். உங்க அன்பான அணுகுமுறையால ஒரு உயிரையே காப்பாத்திட்டீங்க. நீங்க செஞ்சது நாளைக்கு பேப்பர்ல வரப் போகுது”அந்தச் செய்தியைப் பார்த்தவுடன் பார்கவியன் மகள் வந்து விட்டாள். அந்த மருத்துவமனையின் நர்ஸ் கல்லுாரியில் பார்கவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாள். “அவளைக் கடைத்தேற்றி விட்டேன். உனக்கு என்ன வேண்டும் சொல்”“என் மனதில் இன்னும் வெறுப்பும் கோபமும் இருக்கிறது. அன்பில்லாதவர்களிடமும், ஆபத்தானவர்களிடமும், ஏன் என்னைக் கொல்ல வருபவர்களிடமும்கூட நான் அன்பு காட்ட வேண்டும். அந்த வரத்தை யாசிக்கிறேன்”“அந்த நிலைக்கு நீ வந்துவிட்டால் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே”நான் பதில் சொல்வதற்குள் பச்சைப்புடவைக்காரி மறைந்துவிட்டாள்.-தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com