உள்ளூர் செய்திகள்

சித்தர்களின் விளையாட்டு - 3

தேரையர்''மண்டை ஓட்டிற்கு உள்ளே இருந்த தேரையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கும் அளவுக்கு திறமை படைத்தவர்களா சித்தர்கள்? வலிமை உடையவராக இருந்தாலும் பரமேஸ்வரனின் பாதம் பணிந்தோர் வெற்றி அடைவர் என உலகமறிய செய்துவிட்டாரே அகத்தியர். 'சித்தர்கள் ஆற்றலுக்கு எம்பெருமானே காரணம் என்பதை நான் அறிவேன்' என வணங்கினாள் பார்வதி. மேலும், 'நம்பிக்கை இல்லாத நாரதருக்குத் தான் இதைச் சொல்கிறேன்' என்றாள்.பரமேஸ்வரன், ''சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்வார்கள். அதே சமயம் தங்களின் ஆயுளை அவர்கள் அறிந்தவர்கள். அவர்கள் செய்யும் விளையாட்டு எல்லாம் எம் திருவிளையாடல்தான். சித்த மருத்துவரான தேரையர் பற்றித் தெரிந்துக் கொள் பார்வதி... உனக்கு நான் சொன்ன வாழ்க்கை ரகசியம் எல்லாவற்றையும் தேரையர் அப்பட்டமாக சொல்லி விட்டார். ஆம்! அவர் சொல்லும் உபதேசத்தை பின்பற்றினால் எமன் ஒருவரையும் நெருங்க முடியாது. அகத்தியரிடம் இருந்து தமிழையும், தமிழ் மருத்துவத்தையும் கற்றுக் கொண்ட தேரையர் வைத்தியம், யோகாசனம் என பல துறைகளில் கைதேர்ந்தவர். பல பாடல்களை எழுதிய அவர், தன் குருநாதரைப் போல நீண்டகாலம் வாழ்ந்தார். புத்தப் பிட்சுகள் இவரை புத்தரின் மகனாகக் கருதி வணங்கினர். மலம், சிறுநீரை அடக்கக் கூடாது. உண்ணும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. நீரைக் காய்ச்சியும், தயிரில் நிறைய தண்ணீர் சேர்த்தும், சோற்றில் பால் ஊற்றியும் சாப்பிட வேண்டும் என்றார். நோயின்றி வாழ்வதற்காக இன்னும் பல மருத்துவ குறிப்புகளை அவர் கூறினார். தலைமுழுக்கு செய்த பின் வெந்நீரில் குளிக்க வேண்டும். பகலில் துாங்கக் கூடாது. இடதுகையின் கீழே தலையை வைத்து படுக்க வேண்டும். முதல்நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்தும், நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்தும், 45 நாளுக்கு ஒருமுறை மூக்கில் இடும் மருந்தும், வாரம் இரண்டுமுறை எண்ணெய் தேய்த்தும் குளிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுவது நீண்ட காலம் வாழச் செய்யும் வழிமுறைகள்.முருக பக்தரான தேரையர் எழுதிய யமகவெண்பா, தைலவர்க்கம் ஆகியவை சிறப்பான நுால்கள். பால சிவயோக அருள்பாலா, மெய்ப்பொருளே, ஞானதீபா, சுடர்மணியே, கதிரொளியே, சடாட்சரத்தின் மேலானவனே, தயாபரனே, தயாநிதியே என அகத்தியரால் பாராட்டப்பட்டவர். வாழ்க்கையின் அர்த்தம், நோயின்றி வாழும் முறை பற்றி அகத்தியர் இவருக்கு உபதேசம் செய்தார். மலை மீதிருக்கும் அரிய மூலிகைகள் பற்றி எடுத்துரைத்தார். இறந்தவரை எழுப்பும் மூலிகை ரகசியத்தை இவருக்கு அகத்தியர் சொல்லிக் கொடுத்தார். ஆனால் காலப்போக்கில் குருவை மிஞ்சிய சீடராக மாறினார் தேரையர். சித்த வித்தைகளை கற்றுக் கொண்டு காசிக்குச் சென்றார். அங்குள்ள சீடர்களுக்கு மருத்துவ முறைகளை கற்றுக் கொடுத்தார். உலோகங்களை உருக்கி மருந்து செய்ய ஆரம்பித்தார். பின் மலையை உருக்கி, பொன்னாக மாற்ற அனல் மூட்டினார். அப்போது அங்கு வசித்த சித்தர்கள், ரிஷிகள், முனிகள் எல்லாம் தேரையர் மூட்டிய தீயின் வெம்மை தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இப்படி அனைத்து இடமும் பொன்னாக மாறினால் இயற்கை சீற்றம் கொள்ளும். ஆகவே முயற்சியை கைவிடுமாறு தேரையரை வேண்டினர். ஆனால் அவரோ, “இல்லை! முடியாது! தங்கத்திற்காக மனிதர்கள் அலைகின்றனர். அதனால் எல்லாவற்றையும் பொன்னாக மாற்றப் போகிறேன்” என இறுமாப்புடன் சித்து வேலையில் ஈடுபட்டார். இதனால் மனிதர்கள் வாழ இடமில்லாமல் போகும் என வருந்தி தேரையரின் குருநாதரான அகத்தியரை வணங்கினர். “எல்லாவற்றையும் தங்கமாக மாற்றினால் இயற்கை அழியும். இதை தடுத்து நிறுத்துங்கள்” என வேண்ட, சீடன் மீது அகத்தியர் கோபம் கொண்டார். காசிக்கு சென்று அகத்தியர், “சீடனே, நீ செய்வது முறையல்ல... உலகம் சிவனால் படைக்கப்பட்டது, அனைத்தையும் உன் இஷ்டத்திற்கு பொன்விளையும் பூமியாக மாற்றினால் வாழ முடியாது. அட்டமா சித்தியின் எட்டாம் நிலையான ஈசத்துவம் பற்றி அறிய சமாதி மார்க்கத்தை கற்றுக் கொள்” என தேரையருக்கு அதைக் கற்பித்தார். அவரும் தன் தவறை உணர்ந்து, நர்மதை மலையில் தவமிருக்க தொடங்கினார். தவத்தில் ஈடுபட்டதால் பொன் ஆசை குறைந்தது. இயற்கையை மாற்றக் கூடாது என்பதை உணர்ந்தார். சமாதி நிலையில் இருந்த போது பால், பழம் மட்டும் சாப்பிடத் தொடங்கினார். தெற்கு நோக்கி புறப்பட்ட அவர் தோரணமலையை அடைந்தார். அங்கு 10 ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தார். சிவபெருமானுடன் மனோன்மணியை தரிசித்து மகிழ்ந்தார். குருநாதரான அகத்தியரும் அப்போது காட்சியளித்தார். பொன்னரங்கன் என்ற தன் பெயரை கைவிட்டு 'தேரையர்' என சீடர்களால் போற்றப்பட்டார். அவர் சமாதி நிலையில் ஆழ்ந்தால் கடல் பொங்குவதும், மலைகளில் உள்ள கற்கள் தங்கமாக மின்னுவதுமாக இருந்தன. தேரையர் இறுதியாக தோரணமலை முருகனின் பாதங்களில் தன்னை அர்ப்பணித்தார். மெய்மறந்து கேட்ட பார்வதி, “ கல்லை பொன்னாக்கும் வித்தையில் கைதேர்ந்த தேரையர், நம் மகனான முருகனின் பக்தனாக இருப்பதை எண்ணி, அவர் மீதுள்ள மதிப்பு அதிகமாகிறது. பெருமை வாய்ந்த தேரையர் சித்த மருத்துவத்திற்கு கிடைத்தது தங்களின் விளையாட்டே” என்றாள். “நீ இல்லையென்றால் நான் இல்லை. எல்லாம் நம் செயல்தான்” என புன்னகைத்தார் மகேஸ்வரன். கலகலவென சிரித்த நாரதர். “இது என்ன... மலைகளை எல்லாம் சித்தர்கள் பொன்னாக மாற்றினால் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களை படைத்து என்ன பயன்? சித்து விளையாட்டுகளை எடுத்துரைப்பது புதிய திருவிளையாடலுக்கா... நாராயண நாராயண ” என புன்னகைக்க “தேரையருக்கே இப்படி அதிசயிக்கிறாரே, போகரை பற்றி சொன்னால் இன்னும் வியப்பீர்கள்” என்றார். ''சித்தர்களெல்லாம் தங்களை சிவலிங்க வடிவில் வழிபட, தங்களை மறந்து விட்டு பழநியில் தண்டாயுதபாணியாக முருகனை வடிவமைத்த போகரையா சொல்கிறீர்கள். அதில் ஒன்றும் தவறில்லையே. தந்தையோ... மகனோ யாரை வணங்கினால் என்ன? விருப்பம் நிறைவேறினால் போதுமே. அதைத் தானே சொல்ல வருகிறீர்கள்'' என்றார் நாரதர்.-விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250