சித்தர்களின் விளையாட்டு - 5
போகரின் நவபாஷாண சிலை“பார்வதி... நம் சித்தர்களில் போகர் மிக முக்கியமானவர். கூடு விட்டு கூடு பாயும் கலையால் தன் செல்ல நாயை புலியாகவும், சீடனை புலிப்பாணியாகவும் மாற்றி பழநி மலையில் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். போகர் தான் அறிந்த மருந்து சூத்திரம் மூலம் நவபாஷாண சிலை ஒன்றை உருவாக்கினார். அதுவே பழநி தண்டாயுதபாணி எனப்படுகிறது. இன்றளவும் சீனர்கள் போகரை போற்றுகின்றனர். சீனாவில் இருக்க வேண்டிய நவபாஷாண முருகன் சிலை இந்தியாவிற்கு போய் விட்டதே என வருந்துகின்றனர். 'இன்னும் கேள். போகரின் செயல்கள் விந்தையோ விந்தை' என மகேஸ்வரன் தொடர்ந்தார். மண்ணை கல்லாக்குவது, கல்லை பொன்னாக்குவது என்பதெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலை. உலக நாடுகளில் தரம் குறைந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றும் ஆய்வுகள் நீண்ட காலமாக நடக்கிறது. இதை ரசவாதம் என்பர். இதில் நீர்த்தன்மை கொண்ட ரசம் என்ற உலோகத்தை பயன்படுத்தி பலவித வித்தைகளைச் செய்தனர். திருமந்திரப் பாடலில் திருமூலர் “செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்செம்பு பொன்னான திருவம்பலவே”என செம்பை பொன்னாக மாற்றும் உலோக கலையை சொல்கிறார். சஞ்சீவி தன்மை என்ற சாகா நிலையை அடைய நம் உடலில் உள்ள உறுப்புகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது சித்தர்களின் முடிவு. அதற்காக தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றும் மருத்துவக்கலையை உடலுக்கும் பயன்படுத்தலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான செய்முறையே ரசவாதம்.போகர் கற்றுக் கொடுத்த ரசவாதம் என்னும் இந்தக் கலையை சீனர், ஐரோப்பியரும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். சிலிக்கா என்ற கல்லையும், ஈயத்தையும் தங்கமாக மாற்ற பல சோதனைகள் செய்தனர். இந்தியர்களின் ரசவாதம் மிக பழமையானது. போகரைப் போல பல சித்தர்கள் தங்கத்தை தயார் செய்யும் கலைகளை கற்றுத் தேர்ந்தனர். கொங்கணர் பல உலோகங்களை உருக்கியும், போகர் காந்த ரசம் மூலமாகவும், அகத்தியர் பித்தளை, செம்பு, இரும்பை தங்கமாக மாற்றும் கலையை பாடல்களாக பாடியுள்ளனர். உலோகத்தின் இயல்பை பாதரசம் மூலம் மாற்றி, அத்துடன் குறிப்பிட்ட உலோக மூலக்கூறுகளை சேர்த்தால் தங்கமாகும் என போகர் அறிந்திருந்தார். அதற்காக தான் ஏற்கனவே அறிந்திருந்த நவபாஷாணத்தைக் கொண்டு பல உலோகங்களை ஒன்றாக்க முயற்சி செய்தார். பொதுவாக உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் இயல்பு இல்லாதவை. ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட வெப்ப நிலையில் உருக்கினால் மட்டுமே ஒன்றாக்க முடியும். எல்லா உலோகங்களையும் ஒரே வெப்ப நிலையில் உருகச் செய்வது கடினம். இரண்டு முதல் அதிக பட்சம் ஐந்து உலோகங்களை வேண்டுமானால் ஒன்றாக சேர்க்கலாம். ஆனால் போகரோ சாதாரண வெப்பநிலையில் உருகக் கூடிய உலோகத்தில் இருந்து ஆயிரம் டிகிரியில் உருகக் கூடிய உலோகம் வரை ஒன்றாக சேர்க்க ஆரம்பித்தார். உதாரணமாக கற்பூரம் உடனே பற்றிக் கொள்ளும். ஆனால் சாம்பிராணி, அடுப்புக் கரி சற்று தாமதமாக பற்றும். இந்த மூன்றையும் ஒரே வெப்பநிலைக்கு கொண்டு செல்ல முடியாது. அப்படி செய்தால் கற்பூரம், சாம்பிராணியும் முன்பே கருகிப் போகும். அது மட்டுமின்றி இதைச் செய்து முடிக்க பல ஆண்டுகளாகும். அதற்காக தொடர்ந்து பொறுமையுடன் மருந்து அரைக்க வேண்டும். போகர் தன் சீடர்களுடன் மலைக் குன்றில் நவ பாஷாணம் தயார் செய்த போது, மலை, காடுகளில் இருந்த சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் போகரின் அன்பைக் கண்டு சுற்றி சுற்றி வந்தன. சிங்கக்குட்டிகள் மாமிச உணவைக் கைவிட்டு கொல்லாமையை பின்பற்றின. யாசகம் வேண்டி ஒருமுறை போகர் வந்த போது துறவுக் கோலத்தில் இருந்த போகரைக் கண்ட மக்கள் கேலி செய்தனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அங்கிருந்த பூனை ஒன்றுக்கு வேத மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அந்த பூனையும் மந்திரம் ஜபிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அதிசயித்து போகரிடம் மன்னிப்பு கேட்டனர். அதை ஏற்றதோடு அவர்களின் வறுமையை போக்குவதாக கூறினார். அவர்களின் வீட்டிலுள்ள பித்தளை பாத்திரங்களை எடுத்து வரச் சொல்லி, ரசவாதம் மூலம் தங்கமாக மாற்றினார். பின்னர் அவர்களிடம், “அறியாமை என்னும் மனநோய், உடல் நோயையும் போக்க மருந்து தருகிறேன். தண்டாயுதபாணியான முருகனின் கையிலுள்ள தண்டம் நோய், துன்பத்தை போக்கும். எதிரிகளை அழிக்கும். இந்த உலகத்துக்கு தண்டாயுதபாணி சிலையை அர்ப்பணம் செய்கிறேன்” என்றார் போகர். திரவ உலோகமான பாதரசத்தை சிவனின் ஆற்றல் என்றும், கந்தகத்தை சக்தியின் ஆற்றல் என்றும், இரண்டும் சேர்வதால் கிடைப்பது சிவசக்தி என்னும் உயிர் மருந்தாகும். அதை அடிப்படையாக கொண்டு சாதாரண பொருட்களையும் அழியாத உலோகமாக மாற்றி போகர் சாதனைகள் செய்தார். ஆன்மிகம் ஒன்றே மக்களை நல்வழிப்படுத்தும் என்றார். தன் அறிவுக்கூர்மையால் சாதாரண வெப்பநிலையில் மூலிகைச்சாறு மூலம் ஒன்பது பாஷாணங்களை உருவாக்கினார். அவை ரசம், லிங்கம், பூரம், வீரம், தாளகம், கந்தகம், மனோசிலை, கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம். இந்த மருந்துகளை மூலிகைச் சாறு விட்டு அரைத்து நவபாஷாண சிலையை அமைத்தார். தேன், கல்கண்டு, வாழைப்பழம், திராட்சை, பேரிச்சை பழங்களால் அச்சிலைக்கு அபிஷேகம் செய்து பிரசாதத்தை சாப்பிடுபவர்கள் நோய் நீங்கி நிம்மதியாக வாழ்வர். பழநி தண்டாயுதபாணி சிலையே உலகின் மிகப் பெரிய சித்த மருந்தாக உருவெடுத்து நிற்கிறது. 200 கிலோ எடையுள்ள இந்த நவபாஷாண சிலை போகரால் வடிவமைக்கப்பட்டு இன்று நோய் தீர்ப்பதில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. வியப்பின் உச்சத்திற்கு சென்ற பார்வதி, “முழுமுதல் கடவுளே... போகரின் நவபாஷாண சிலையின் அற்புதத்தை அறிந்து மகிழ்கிறேன். இது தங்களின் திருவிளையாடல் என்பது எங்களுக்குத் தெரியும்'' என்றாள். மேலும் மகேஸ்வரன், “தண்டாயுதபாணி சிலை எப்போதும் சூடாகவே இருக்கும். அதனால் சிலையைச் சுற்றி நீர் வடிந்தபடி இருக்கும். சிலையில் உள்ள ருத்திராட்சத்தில் போகரின் கை வண்ணத்தால் பள்ளம், மேடுகள் கச்சிதமாக அமைந்திருக்கும். சந்தனம், ஜவ்வாது, மஞ்சள் என அனைத்தும் அந்த சிலையைச் சுற்றி நறுமணம் கமழும். ஒன்பது வருடம், ஒன்பது பாஷாணம், 4000க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்டு 81 சீடர்களுடன் இணைந்து போகர் செய்த நோய் தீர்க்கும் அற்புத மருந்து சிலை இது” என்றார். ''இன்று பக்தர்கள் பழநியில் கூடுவது இந்த அதிசயத்தை தரிசிக்கத் தானே. இது தெரியாமல் நாரதரும் கலகமூட்டுகிறார்” என சிரித்தபடி சொல்ல, “ மகேஸ்வரா... என்னை மன்னியுங்கள். தங்களின் வாயால் இந்த உண்மையை வரவழைக்க வேண்டும் அல்லவா... நானும் ஒரு முருகபக்தன் தான். என் கலகம் முருகனிடம் செல்லுபடியாகாது என்பதும் எனக்குத் தெரியும். சுவாமி... என் பிழையை பொறுத்தருள்க” என வேண்டினார் நாரதர். -விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250