சித்தர்களின் விளையாட்டு - 7
திருமூலர்“மகேஸ்வரா... முன்பு நந்தியின் சீடரான திருமூலரின் உடலை மறைத்து வைத்து, தாங்கள் ஆடிய திருவிளையாடலை விடவா, சித்தர்களின் விளையாட்டு சுவாரஸ்யமானது?” என நாரதர் கேட்க, பார்வதி வணங்கியபடி, “ஐயனே! இது என்ன விளையாட்டு? சிவனடியாரிடம் தாங்கள் செய்த விளையாடலா?”எனத் தெரியாதது போலக் கேட்டாள். மகேஸ்வரன் சிரித்துக் கொண்டே, “நாரதரே... என் அடியவரான திருமூலரின் உடலை மறைத்து வைக்காவிட்டால் திருமந்திரம் என்ற பொக்கிஷம் கிடைத்திருக்காதே” என்றார். உடனே அவரது பாதம் பணிந்த நாரதர், “ஐயனே! இதை தங்களின் வாயால் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கூறினேன். மன்னியுங்கள்” என பணிந்து நின்றார்.“திருமந்திரம் பாடிய திருமூலரை பற்றியா சொல்கிறீர்கள்! என்ன அற்புதம்! அன்பே சிவம் என போதித்த திருமூலரே பதி, பசு, பாசம் என்னும் தத்துவத்தை உலகிற்கு வழங்கினார், அவரைப் பற்றி சொல்லுங்களேன்” என்றாள் பார்வதியும் சுவாரஸ்யமாக. திருமூலரின் இயற்பெயர் சுந்தரநாதர். இவர் நந்தியின் எட்டு சீடர்களில் ஒருவர். பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரை தரிசிக்க விரும்பி தென்திசை நோக்கி வந்தார். போகும் வழியில் சிவன் கோயில்களை தரிசித்த அவர் இறுதியாக திருவாவடுதுறையில் தங்கினார். காவிரியில் புனித நீராடி, சிவனை வணங்கினார். அப்போது நதிக்கரையில் ஏராளமான பசுக்கள் கதறியபடி ஓரிடத்தில் நிற்பதைக் கண்டார். பசுக்களை தெய்வமாக வணங்கும் அவர், அவற்றை விலக்கிக் கொண்டு பார்த்தார். பசுக்களின் காவலனான மூலன் என்பவன் தரையில் பேச்சு மூச்சின்றி கிடந்தான். அருகில் அமர்ந்து நாடி பிடித்து பார்த்தார். எந்த சலனமும் இல்லை. மின்னல் தாக்கியதில் அவன் இறந்தது தெரிந்தது. இறந்தவனை எழுப்ப முடியாது என்பதால் சுந்தரநாதர் அந்த இடத்தை விட்டு எழுந்தார். ஆனால் சுந்தரநாதரைப் பார்த்த பசுக்கள் கண்ணீர் சிந்தின. மனமிரங்கிய அவர் “மாலை நேரம் வந்ததும் பசுக்கள் கொட்டிலுக்கு திரும்பும் வரை அவனது உடலில் புகுந்து கொள்வோம்” என முடிவு செய்தார். பரகாய சக்தி என்ற கூடுவிட்டு கூடுபாயும் கலையில் வல்லவரான அவர், அங்கிருந்த அரச மரத்தடியில் தன் உடலை கிடத்தினார். மூலனின் உடலுக்குள் புகுந்து எழுந்தார். அதைக் கண்டதும் மூலன் அருகில் சென்று நாவால் நக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பசுக்களை கொட்டிலில் சேர்த்த பின், தன் உடலைத் தேடி காவிரிக் கரைக்குச் சென்றார் சுந்தரநாதர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மூலனைத் தேடி வந்தாள் அவனது மனைவி. அவளின் கண்ணில் பட்டார் சுந்தரநாதர். “வீட்டுக்கு வராமல் இங்கே என்ன செய்கிறீர்கள்... தங்களைத் தேடித்தான் வந்தேன்” எனக் கூறி மூலன் உருவத்தில் நின்ற சுந்தரநாதர் அருகில் சென்றாள். சட்டென ஒதுங்கி, “பெண்ணே, என் பெயர் சுந்தரநாதர். நான் உன் கணவன் அல்ல. அவன் மூலன் இறந்து விட்டான். பசுக்களுக்காக அவனது உடலில் நான் புகுந்திருக்கிறேன். எனது உடல் காவிரி கரையோரத்தில் உள்ள அரசமரத்தடியில் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அதில் புகுந்து விடுவேன். என்னை தொந்தரவு செய்யாதே” என விலகி நடந்தார். அவளுக்கு ஏதும் புரியவில்லை. தன் கணவருக்கு புத்தி பேதலித்து விட்டது என கருதிய அவள் அழத் தொடங்கினாள். அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடினர். “என்ன நடந்தது? உன் மனைவி ஏன் இப்படி கத்துகிறாள்” என கேட்க நடந்ததை விவரித்தார் சுந்தரநாதர். யாரும் அதை நம்பவில்லை “நாம் காவிரிக்கரைக்கு போவோம், மரத்தடியில் உள்ள உன் உடலைக் காட்டு” என சொல்ல சுந்தரநாதரும் கிளம்பினார். அங்கே உடலைக் காணவில்லை. “ஏன் பொய் சொல்கிறாய்? உன் உடல் எங்கே” எனக் கேட்டனர். சுந்தரநாதர் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார். இது மகேஸ்வரனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். ''சுவாமி... இது என்ன விளையாட்டு. தவசீலரான என் உடலை விட்டு விட்டு, எப்படி வேறொருவர் உடம்பில் வாழ முடியும். இது என்ன சோதனை?” எனக் கண்ணீர் விட்டார். அப்போது அசரீரியாக, “இவர் நீங்கள் நினைப்பது போல மூலன் அல்ல. சுந்தரநாதர் என்னும் என் பக்தன். விதிப் பயனால் மூலன் இயற்கை எய்தி விட்டான். இந்த உடலில் குடியிருந்து திருமூலராக உலகிற்கு நல்வழி காட்ட இருக்கும் இவரை அமைதியாக செல்ல விடுங்கள்” என வானில் ஒலித்தது. அனைவரும் திருமூலரை வணங்கினர். “ஐயனே! திருமூலராக நான் என்ன செய்ய வேண்டும். இப்போதே கட்டளையிடுங்கள்” என வேண்டினார். “திருமூலரே... எங்கு உன் உடலை வைத்தாயோ, அங்கேயே தவம் செய்” என சுவாமி கட்டளையிட்டார்.திருவாவடுதுறையில் காவிரிக் கரையில் அரசமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். மருத்துவம், அறிவியல், ஆன்மிகத்தை கலந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் தவ வாழ்க்கை நடத்தி திருமந்திர பாடல்களை பாடினார்'' என முடித்தார் மகேஸ்வரன். “ஞானம், யோகம், வாழ்வியலை கற்றுக் கொடுக்கும் நல்ல நுால் திருமந்திரம். இந்த கலியுகத்திலும் நல்லவர்கள் வாழ்கிறார்கள் என்றால் அது திருமந்திரத்தை பின்பற்றுவதால் தான். திருமூலருடன் திருக்கூத்தை (சிவனின் நடனம்) கண்டு களித்தவர் பதஞ்சலி முனிவர். திருமூலரின் திருமந்திரமும், பதஞ்சலியின் யோகசூத்திரமும் நோயற்ற வாழ்வின் ரகசியத்தை விளக்கும் யோக நுால்கள்” என தன் பங்குக்கு பார்வதியும் சொன்னாள். ''திருக்கூத்து என்பது அர்த்தநாரீஸ்வரரின் ஆனந்த தாண்டவம் தானே மகேஸ்வரா... சிதம்பரத்தில் தங்களின் நடனத்தைக் காணும் பாக்கியம்தான் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறதே எப்படி... சிதம்பர ரகசியம் என்றால் என்ன?'' என நாரதர் கேட்க மகேஸ்வரனும் புன்னகைத்தார்.“நாரதரே... அதுதான் ரகசியம் என நீரே சொல்லி விட்டீரே... அதை நீரே கண்டுபிடிக்கலாமே” என பரமேஸ்வரன் சிரித்தார். அதைக் கண்ட பார்வதியும் புன்னகைத்தாள்.--விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250