உள்ளூர் செய்திகள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 24

திருவிடைக்கழிஅலுவலகம் செல்ல நேரமாகி விட்டது, நல்ல முடிவைச் சொல் என மனைவி தேவந்தியிடம் சொல்லிவிட்டு பேரன் யுகன் கிளம்பினான். ''என் அக்கா மாமியார், மாமனாருக்கு திருக்கடையூருல 60ம் கல்யாணம் நடக்கப் போகுது. அடுத்த வாரம் வெள்ளி அன்று முகூர்த்தம். அக்கா மாமியாராச்சே, போகாம இருந்தா நல்லா இருக்குமா பாட்டி” என விஷயத்தைச் சொன்னாள் தேவந்தி.அன்று மாலையில் யுகன் வந்ததும், “நுாறு ஆயுசு உனக்கு. இப்ப தான் உன்னை நெனச்சேன். நீயே வந்துட்டே. 60ம் கல்யாணத்திற்கு நீயும் போக வேண்டாமா” எனக் கேட்டார் பாட்டி. ''ஓ! தேவந்தி சொன்னாளா… சனி, ஞாயிறா இருந்தா பரவாயில்ல. வாரநாள்ல லீவு போட முடியாது பாட்டி''''அமுதனை எங்கிட்ட விட்டுட்டு போங்க. பார்த்துக்குறேன். யுகா, நீ ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு தேவந்தியோட போயிட்டு வா. அப்படியே திருக்கடையூருக்கு 6 கி.மீ., தொலைவுல தான் திருவிடைக்கழி கோயில் இருக்கு. அங்கும் போயிட்டு வரலாம். முருகன் எத்தனையோ கோயிலில் காலடி பதித்தாலும் அவருக்கு பிடிச்ச ரெண்டு இடம் இருக்கு தெரியுமா? ஒன்று அவர் வள்ளியை மணந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெற அவர் தவமிருந்த திருவிடைக்கழி. அதுமட்டுமில்ல... முருகனும் சிவனும் ஒன்னா இருக்கும் திருத்தலம் இது” என்றார் பாட்டி.''என்னது, அப்பாவும் மகனும் ஒரே சன்னதியில இருக்காங்களா?''ஆமா, அதுவும் கருவறையில ஒன்னா இருக்காங்கன்னா பார்த்துக்கோ. அந்த இடம் எப்படி இருக்கும்னு. அதுமட்டுமில்ல நம்ம முருகன் பாவ விமோசனம் பெற்றது இங்க தான். திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலமும் இதுதான். ஆண்டுதோறும் புரட்டாசி முதல் வெள்ளியன்று பாதயாத்திரை நடக்கும் கோயில் இது. சோழ மன்னர் முசுகுந்தர் கட்டிய கோயில். ஒரு காலத்தில் 'மகிழ்வனம்' என்றும் 'குராபள்ளி' என்றும் அழைக்கப்பட்டது”“ஆமா பாட்டி, என்ன பாவம் செய்தார் முருகன்”''சொல்றேன். சூரபத்மனுடன் முருகன் போரிடும் போது அசுரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன் பிதுர்கடன் செய்வதற்காக போரில் இருந்து பின்வாங்கினான். தரங்கம்பாடி கடலில் மீன் வடிவம் எடுத்து ஒளிந்தான். அவனைக் கண்டுபிடித்து முருகன் அழித்தார். சிவபக்தனான அசுரனின் மகனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் ஏற்பட்டது. அதற்காக தவம் செய்து பாவத்தை போக்கிக் கொண்டார். அதன் பின் முருகனின் வேண்டுகோளை ஏற்று சிவனும் இத்தலத்தில் தங்கினார். முருகனை திருமணம் புரிவதற்காக தெய்வானை இங்கு தவம் செய்தாள். பின்னர் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திற்கு சென்றாள். தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு பாவம் கழிந்ததாலும் இத்தலத்திற்கு திருவிடைக்கழி எனப் பெயர் வந்தது'' ''முருகனுக்கே பாவம் நீங்கிய இடமா... அப்படின்னா... அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் பாவம், திருவிடைக்கழி போனால் போகும் தானே...”“பாவம் மட்டுமில்ல... கிரக தோஷம், ராகுதோஷம் போயிடும். இங்குள்ள பிரதோஷ நாயகர், சந்திர சேகரர், சோமாஸ்கந்தர் என அனைவரும் கையில் வஜ்ரவேலுடன் இருக்கிறார்கள். கோயிலின் நான்கு எல்லையில் அய்யனார் சன்னதியும், மயிலுக்கு பதிலாக யானை வாகனமும் உள்ளது. தெய்வானை இங்கு தவக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். முருகப்பெருமான் தவம் செய்த குரா மரத்தடியில் உள்ள பலிபீடத்திற்கு அபிஷேகம் செய்வது விசேஷம். குராமரத்தின் கீழ் தியானம் செய்தால் நிம்மதி உண்டாகும். “இந்தக் கோயிலுக்கு பாதயாத்திரை வர்றதா சொன்னியே பாட்டி”“சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழிக்கு செல்லும் 50 கிமீ., துாரம் தான் அந்த பாதயாத்திரை. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி முதல் வெள்ளி அன்றும் புறப்படுவாங்க. மறுநாள் சனிக்கிழமை இரவில் திருவிடைக்கழி கோயிலை அடைவாங்க. ஞாயிறன்று பால் காவடி எடுத்து குரா மரத்தடியில் அபிஷேகம் செய்வாங்க”“ ஒரே நாளில 50 கி.மீ., துாரம் பாதயாத்திரை போறது நல்ல விஷயம் தானே?”“யாத்திரை செல்லும் போது கடவுளைப் பற்றி பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் எந்த கோயிலுக்கு போனாலும் நடந்தே தான் போவாங்க. இதனால மனசும், உடலும் வலிமை பெறும். யாத்திரையின் போது பல தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்”“பரவாயில்லையே பாட்டி... ஆன்மிக விஷயங்களை மனசை தொடுற மாதிரி சொல்றியே. எங்கள மாதிரி நீயும் படிச்சிருந்தேன்னா எப்படி இருக்கும் தெரியுமா...''“போடா போ. இந்தப் பிறவியோட முருகன் திருவடியை நான் சேரணும். அதுதான் என் வாழ்நாள் லட்சியம்” எனக் கண் சிமிட்டினார் பாட்டி.“நல்லது பாட்டி. போன வாரம் மலை, இந்த வாரம் சமதளம், அடுத்த வாரம் எங்க பாட்டி?”“ஏன் பாறையா இருக்கக் கூடாதா?” பாட்டி சொன்னதைக் கேட்டதும் எந்த பாறையா இருக்கும் என யோசிக்கத் தொடங்கினான் யுகன்.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882