சொல்லச் சொல்ல இனிக்குதடா - 36
திருமுருகன் பூண்டி“பாட்டி... போன வாரம் சிலேட்டில் எழுதி காட்டியதில் இருந்து எப்போதும் 'திருமுருகன்பூண்டி' நினைப்பு மனசில ஓடுது. ” என்றான் யுகன்.“நல்லதா போச்சு. இப்பவே சொல்றேன்” என பாட்டி கலகலவென சிரித்தார்.“முருகனின் தந்தையான சிவன் திருமுருகன் பூண்டியில் நிறைய திருவிளையாடல் நடத்தி இருக்கிறார்” எனத் தொடங்கினார் பாட்டி.“ஒருமுறை கேரள மன்னர் சேரமான் பெருமானிடம் பரிசு பெற்று திருமுருகன்பூண்டிக்கு அருகில் வந்து கொண்டிருந்தார் சுந்தரர். வழியில் அவினாசி அருகில் அவர் துாங்கிய போது பூதகணங்கள் மூலம் பரிசுப் பொருள்களை கொள்ளையிடச் செய்தார் சிவன். கவலைப்பட்ட சுந்தரர் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் முறையிட்டார். 'அதோ அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்கு போய் முறையிடு' என்றார் விநாயகர். இவரை கூப்பிட்டு பரிசு திரும்ப கிடைக்க வழி கேட்டதால் அவருக்கு கூப்பிடு விநாயகர் எனப் பெயர் வந்தது”''சரி பாட்டி... சிவனிடம் முறையிட்டாரா? பரிசு கிடைச்சுதா?”“திருடர்கள் வாழும் ஊரில் பக்தர்களை காக்காமல் நீ கோயில் கொண்டு என்ன பயன்? என கோபத்துடன் பாடினார். பரிசு பொருட்களை பூதகணங்கள் மூலம் சுந்தரரிடம் ஒப்படைத்தார் சிவன். இதற்கு சாட்சியாக இக்கோயிலில் வில் ஏந்திய வேடன் வடிவில் சிவன் சிற்பம் உள்ளது. அதற்கு எதிரில் பரிசை பறி கொடுத்த நிலையிலும், அதை திரும்பப் பெற்ற நிலையிலுமாக சுந்தரருக்கு இரு சிற்பங்கள் உள்ளன. திருமுருகன் பூண்டி சிவனிடம் முறையிட்டால் இழந்த பொருள் கிடைக்கும்”“அப்ப இது சிவன் கோயிலா பாட்டி? முருகனுக்கு என்ன சிறப்பு?”“முதன்மை கடவுள் சிவன் தான்.மூலவர் திருமுருகநாத சுவாமி, திருமுருக நாதர், முருகனதீஸ்வரர் என முருகனைக் கொண்டு பெயர் அமைய காரணம் இருக்கு. சூரனை கொன்ற முருகனுக்கு தோஷம் ஏற்பட்டது. இதை போக்க சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் 'திருமுருகநாதர்' என சுவாமிக்கு பெயர் வந்தது. ஊரும் திருமுருகன்பூண்டி என்றானது. இதன் அடையாளமாக முருகன் சன்னதியின் கருவறையில் மேற்கு நோக்கியபடி சிவலிங்கம் இருக்கு. முருகனிடம் வேலும் மயிலும் இல்லை; அவற்றை கோயிலுக்கு வெளியே விட்டு விட்டு சிவனை வழிபட்டார். அத்துடன் இங்கு வீர ராஜேந்திரன், குலோத்துங்க சோழ தேவன், விக்ரமசோழ தேவன், வீரநஞ்சையராய உடையார் போன்றோரின் கல்வெட்டுகளும் இருக்கு”“சரி பாட்டி, கோயில் எங்க இருக்குன்னு சொல்லவே இல்லையே”''திருப்பூர் மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது. அவிநாசியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் 7 கி.மீ., இந்த கூப்பிடு விநாயகர் கோயில் அவிநாசிக்கு பக்கத்தில் இருக்கு. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 7 கி.மீ., இங்கிருந்து இன்னொரு ஏழு கி.மீ., துாரத்தில் தேவாரத் தலமான அவிநாசி கோயிலை தரிசிக்கலாம்”“ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல தான் இருக்கு. அப்போ போயிட்டு வர வசதி தான்”“யுகா... இந்தக் கோயிலுக்கு துர்வாச முனிவர் தேவ லோகத்தில் இருந்து மாதவி மரத்தை கொண்டு வந்தார். அம்மனுக்கு முயங்கும் பூண்முலை யம்மை, ஆடை நாயகி, மங்களாம்பிகை என பல பெயர்கள் உண்டு. முருகனின் சன்னதி கருவறைக்கு செல்லும் வழியில் இடப்புறமாக உள்ளது. முருகன் வழிபட்ட சிவலிங்கம் சிறியதாக உள்ளது. முருகன் சன்னதிக்கு இடது புறம் உள்ள படிகளின் மீது ஏறிச் சென்றால் மட்டுமே இதை தரிசிக்கலாம்”“ஓஹோ”“அருணகிரிநாதர் இங்கு ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார்”“அருணகிரிநாதருக்கு முருகன் மீது கொள்ளை விருப்பம் போல. அதனால்தான் என்னவோ சந்த நயத்தோடு திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், வேல் விருத்தம்னு எத்தனையோ பாடல்களை பாடி இருக்கார். அவருக்கு மட்டும் இல்லை யுகா. பலருக்கும் முருகன் என்றாலே நம்ம வீட்டு பையன் மாதிரி அன்பு பொங்கும். ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்றேன் கேளு. ஒருமுறை காளமேகப்புலவரிடம் ஆணவம் கொண்ட ஒரு புலவர், ஐயா நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே உம்மால் முருகனை புகழ்ந்து பாட முடியுமா என்று கேட்டாராம். அதற்கு காளமேகப்புலவர் முருகன் அருளால் நிச்சயம் முடியும். வேலில் தொடங்கவா இல்லை மயிலில் தொடங்கவா என்று கேட்டாராம். உடனே அந்தப் புலவர் நீர் வேலிலும் தொடங்க வேண்டாம் மயிலிலும் தொடங்க வேண்டாம் செருப்பில் தொடங்கி விளக்குமாரில் முடியும் பார்க்கலாம் என்று வேண்டுமென்றே குதர்க்கமாக சொன்னாராம். அங்கிருந்த அனைவரும் இறைவனைப் பற்றி பாட செருப்பும் விளக்குமாறும் தேவையா என்று பதறினார்களாம். ஆனால் காளமேகப் புலவர் கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல் தன்னுடைய புலமையை இப்படி ஆழமாக நிரூபணம் செய்தாராம். ஆணவம் கொண்ட அந்தப் புலவர் கேட்டபடியே முருகனைப் புகழ்ந்து ஒரு பாடலை பாடினார். செருப்புக்கு வீரர்களை சென்றிருக்கும் வேலன்பொறுப்புக்கு நாயகனை புல்ல - மதிப்புக்குதன் தேன் பொழிந்த திரு தாமரை மேல்வீற்றிருக்கும் வண்டு விளக்குமாறு...”இதுதான் அந்த பாடல். இதில் செரு என்றால் போர்க்களம் என்று அர்த்தம். போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக்கொள்ள துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டு அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு உன்னை கேட்கிறேன் என்று பாடலை முடித்து இருந்தார். இங்கே விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லும்படி என்று புரிந்து கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் காளமேகப்புலவரையும் ஓரிரு திருப்புகழ்களில் சிறப்பித்து இருப்பதால் அவருக்குப் பின் வந்தவர் அல்லது அவருடைய சமகாலத்தவராக காளமேகப் புலவர் இருந்திருக்க வேண்டும்.”“பாடல் ரொம்ப அருமையா இருக்கு பாட்டி. அடுத்த வாரம் எந்த ஊரை பற்றி சொல்லப் போறேன்னு சொன்னா நல்லா இருக்கும்'' எனக் கேட்டான் யுகன். “அதுக்கு முன்னால வள்ளலார் பற்றியும் சொல்றேன் கேளு. சிறுவனான வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். ஒருநாள் கண்ணாடியில் காட்சியளித்தார் திருத்தணி முருகன். அவர் மீது 'சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என பாடல் பாட அருள்புரிந்தார் முருகன். திருத்தணி முருகன் மீது வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் மொத்தம் 525. சென்னை கந்தகோட்டத்து முருகன் மீதும் தீராத பக்தி கொண்ட அவர் 'தெய்வமணி மாலை' பாடினார். சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவி ஆன்ம நேய ஒருமைப்பாட்டை வளர்த்தார். 1874ல் தைப்பூசத்தன்று வடலூரில் அருட்பெரும் ஜோதியில் கலந்தார். இப்படி முருகன் அருள் பெற்ற அடியார்கள் நம் மண்ணில் வாழ்ந்திருக்காங்க”''முருகன் அடியார்களின் வாழ்வில் புது மாற்றம் நிகழ்த்தி இருக்கான் போல” என்றாள் தேவந்தி அதை ஆமோதிக்கும் விதத்தில். ''கந்தரலங்காரத்தில் வரும் சேல் பட்டு அழிந்தது செந்துார் வயல் பொழில் தேம் கடம்பின்மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே என்ற இந்தப் பாடலை தொடர்ந்து பாராயணம் செய்தால் தலையெழுத்தே மாறும்.“எப்பவும் உன் மூலமா நல்ல வார்த்தைகளைக் கேட்க சந்தோஷமா இருக்கு பாட்டி”''அப்ப, அடுத்த வாரம் பச்சைமலையை பத்தி பார்ப்போமா?” என பாட்டி கேட்க... “ஓ! பச்சைமலையை பார்த்தா மட்டும் இல்ல, உன் வாயால கேட்டா காதுக்கும் குளுமையா இருக்கும்” என்றான் யுகன்.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882