விதியை வெல்ல முடியும்
டிச.1 - யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள்ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரை பார்க்க காத்திருந்தார் ஒருவர். அவரை கவனித்த மஹாபெரியவர், 'சிலர் வெளிமுகமாகவும், சிலர் உள்முகமாகவும் கடவுளை தரிசிக்கின்றனர். இதோ அந்த துாணுக்கு அருகில் நிற்கிறாரே... அவர் உள்முகமாக தேடி கடவுளின் அருளை பெற்றவர்' எனச் சீடர்களிடம் சுட்டிக்காட்டினார். அவர்தான் யோகிராம் சுரத்குமார். திருவண்ணாமலையில் வாழ்ந்த இவருக்கு 'விசிறி சாமியார்' என்ற பெயரும் உண்டு. கங்கை நதிகக்கரையில் உள்ள நர்த்தரா என்னும் ஊரைச் சேர்ந்த ராம்தத்குன்வர், குஸும்தேவி தம்பதிக்கு டிச.1, 1918ல் பிறந்தவர் ராம்சுரத்குன்வர். 'ராமன் மீது அன்புள்ள குழந்தை' என்பது இதன் பொருள்.கிணற்றில் நின்ற குருவியின் மீது விளையாட்டாக கயிறை வீச, அது வலி தாங்காமல் உயிரை விட்டது. இவர் சிறுவனாக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது. இதனால் பிறப்பு, இறப்பு பற்றி அப்போதே சிந்திக்க ஆரம்பித்தார். அதற்கு விடை தேடி காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார். பின்னாளில் புண்ணிய பூமியான திருவண்ணாமலை பற்றி துறவிகள் மூலம் கேள்விப்பட்டதும் அங்கு வந்தார். குருநாதரின் மூலம் அந்த ரகசியத்தை அறிய விரும்பினார். இதற்காக ரமணரையும், அரவிந்தரையும் சந்தித்தார். பின் கேரளாவில் சுவாமி பப்பாராம்தாசை சந்திக்க அவர், 'ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தை உபதேசித்தார். ராமநாம ஜபத்தை தொடர்ந்து செய்ய மனதிற்குள் மாற்றம் நிகழ்ந்தது. குடும்பத்தை விட்டு வெளியேறி திருவண்ணாமலையை தஞ்சம் அடைந்தார். தன்னை ஒரு பிச்சைக்காரன் என அடையாளப்படுத்திக் கொண்டார். இவரது கையில் தேங்காய் சிரட்டை, விசிறி மட்டும் இருக்கும். கிரிவலப்பாதையிலும், சாலையோரத்திலும் தங்கிய இவர் அற்புதங்கள் பல நிகழ்த்தினார். இவர் முக்தி பெற்ற இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போது அந்த இடத்தில் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமம் செயல்படுகிறது.