உள்ளூர் செய்திகள்

சைப்யா

கவுசிக முனிவரின் மனைவி சைப்யா. முன்வினை காரணமாக கொடிய நோயால் அவதிப்பட்ட கவுசிகருக்கு பணிவிடை செய்தாள்.மனைவியின் மனஉறுதியை பரிசோதிக்க எண்ணினார் முனிவர். சைப்யாவை அழைத்து தன்னை ஒரு தாசி வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இதை எந்தப் பெண் தான் சகிப்பாள்? ஆனால் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு தாசியிடம் மன்றாடினாள். எந்த தாசியாவது தொழுநோயாளியுடன் சேர்வதற்கு சம்மதிப்பாளா? ஆனால் சைப்யா போராடி அவளைச் சரிகட்டினாள். இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என சைப்யாவிடம் சம்மதம் பெற்று விட்டு ஒத்துக் கொண்டாள் தாசி.கவுசிக முனிவரை ஒரு கூடையில் அமரச் செய்து நள்ளிரவில் தாசி வீடு நோக்கிப் புறப்பட்டாள். அந்த வேளையில், மாண்டவ்யர் என்ற முனிவரை கழுமரத்தில் ஏற்றும்படி அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டிருந்தார். கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்யர் உயிர் பிரியாமல் துடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியே சைப்யா கடந்து செல்லும் போது, கூடைக்குள் இருந்த கவுசிகர் காலை நீட்டினார். அது கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யரின் மீது பட்டது. ஏற்கனவே வலியால் துடித்த அவருக்கு வலி அதிகமாகவே, ''கழுவிலே கிடந்து அவதிப்படும் என்னை உதைத்த கவுசிகரே! சூரியன் உதிக்கும் போது உம் உயிர் போகும்'' என சபித்தார் மாண்டவ்யர்.இதை கேட்ட சைப்யா, ''தவறை மன்னியுங்கள்'' என மன்றாடினாள். மாண்டவ்யர் மனம் இரங்கவில்லை. சைப்யாவுக்கு கோபம் வந்தது. '' நான் பதிவிரதை என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காது'' என அவளும் சபதம் செய்தாள்.சைப்யாவின் பதிவிரத தர்மத்துக்கு கட்டுப்பட்டு சூரியன் உதிக்கவில்லை. இதைக் கண்டு பயந்த தேவர்கள் ஒன்று கூடி அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயாவை துாது அனுப்பினர்.சைப்யாவிடம், ''சூரியன் உதிக்காததால் பூலோகம் இருண்டு கிடக்கிறது. உயிர்களின் நன்மைக்காக உன் சபதத்தை விட்டு விடு'' என அனுசூயா வேண்டினாள்.''முடியாது! சூரியன் உதயமானால் என் கணவரின் உயிர் போய்விடும்'' என மறுத்தாள். ''கலங்காதே, உன் கணவரின் உயிரை மீட்பது என் பொறுப்பு'' என தைரியம் சொன்னாள்.சைப்யா மனம் இரங்கினாள். மறுநாள் சூரியன் உதித்தது. கணவர் கவுசிகர் பிணமானார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனுசூயா, ''பதிவிரதையான என் வேண்டுதலை ஏற்று கவுசிகர் இப்போதே உயிர் பிழைக்க வேண்டும்'' என மகாவிஷ்ணுவை நோக்கி வேண்டினாள். கவுசிகரும் கண் விழித்தார். நோயும் மறைந்தது. மனைவி சைப்யாவின் அன்பை உணர்ந்தார் கவுசிகர்.