உள்ளூர் செய்திகள்

கோபுரங்கள் சாய்வதில்லை

அஹோபில மடம் 44ம் பட்டம் அழகிய சிங்கர் வண்சடகோப வேதாந்த தேசிக யதீந்திர சுவாமிகள். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் மொட்டைக் கோபுரத்தை முழுமையாக்கி 13 நிலைகளுடன் நிர்மாணித்து கும்பாபிஷேகம் நடத்தியவர். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பிரியமான இவர் மனிதநேயம் மிக்கவர். இன்றும் தமிழக மக்களின் உள்ளங்களில் கோபுரமாக நிமிர்ந்து நிற்கிறார். அதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.இவர் ஒருநாள் அகோபில மடத்தின் வாசலில் உட்கார்ந்திருந்தார். தெருவில் கழைக்கூத்தாடி ம்புகளின் நடுவில் அந்தரத்தில் தொங்கும் கயிற்றில் நடந்தபடி இருந்தார். பார்ப்பவர்களுக்கோ திக் திக்... அவருக்கோ அதுவே வயிற்றுப் பிழைப்பு. சுற்றி நின்றவர்களில் சிலர் சில்லரை காசுகளை கூத்தாடியின் துணியில் எறிந்து விட்டு நகர்ந்தனர். விழுந்த காசுகளைப் பொறுக்கிக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி நகரத் தொடங்கினார் கூத்தாடி. அப்போது ''இங்க வாப்பா'' என அழைத்தார் சுவாமிகள். அருகில் நின்ற மடத்துச் சிப்பந்தியிடம் சால்வை, நுாறு ரூபாயை வாங்கி கூத்தாடிக்கு அன்பளிப்பாக கொடுத்தார். 'சாமி... இதெல்லாம் வேண்டாம். இத எடுத்துக்கிட்டுப் போனா போலீஸ்காரங்க திருடிட்டு வந்தியான்னு கேட்பாங்க” என மறுத்தார். உடனே மடத்து மேனேஜரைப் பார்த்தார் சுவாமிகள். அவ்வளவு தான் உடனடியாக லெட்டர் பேடை எடுத்து வரச் சொல்லி அதில், 'சால்வை, நுாறு ரூபாய் பணம் மடத்தின் சார்பாக தரப்பட்ட அன்பளிப்பு' என எழுதி மேனேஜர் கையெழுத்திட்டார். 'யார் கேட்டாலும் இதைக் காட்டு' என கருணையுடன் சுவாமிகள் சொல்ல, அதை பெற்றுக் கொண்டார் கூத்தாடி. அப்போது சிப்பந்திகளிடம், 'வயிற்றுப் பிழைப்புக்காக கூத்தாடி கயிற்றில் நடந்தான். ஆனால் பெரிதாக யாரும் காசு கொடுக்கவில்லை. அதனால் இந்த பணத்தை பரிசாக கொடுத்தேன். மற்றவர் துன்பத்தை போக்க நினைப்பவனே உண்மையான வைணவன்'' என்றார். ''வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜேபீடு பராயே ஜானெரெபரதுக்கே உபகார் கரே தொயெமன் அபிமான் ந ஆனெரெ”கோபுரங்கள் சாய்வதில்லை என்பது உண்மை தானே!