வைகுண்ட பதவி
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் செய்தான் முரன் என்னும் அரக்கன். அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அரக்கனை அழிக்க திருமால் சக்கராயுதத்துடன் புறப்பட்டார். சக்கர ஆயுதத்தின் முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இதனால் மாய வடிவம் எடுத்து போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் ஆகும் வரை போர் நடக்கும். போர் முடிந்ததும் திருமால் பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும் போர்க்களத்திற்கு செல்வார்.ஒருநாள் விதிமுறைக்கு மாறாக ஆஸ்ரமத்திற்கு வந்த முரன், அங்கு படுத்திருந்த திருமாலைத் தாக்கினான். அப்போது அவரின் உடலில் இருந்து ஒரு சக்தி, பெண் வடிவில் எழுந்தது. அந்த பெண்ணின் அழகைக் கண்ட அரக்கன் மயங்கினான். ஆனால் ஆயுதங்களுடன் விஸ்வரூபம் கொண்ட அந்தப்பெண் அசுரனை அழித்தாள். யோக நித்திரையில் இருந்து எழுந்த திருமால், ''உனக்கு ஏகாதசி என பெயர் சூட்டுகிறேன். திதிகளில் ஒன்றாகவும் உன்னை ஆக்குகிறேன். அரக்கன் முரனை அழித்த இந்த மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு வைகுண்ட பதவியும் அளிக்கிறேன்'' என வரம் அளித்தார்.