யார் இந்த ஜடாயு?
தண்டகம் என்னும் நாட்டை மன்னர் ஒருவர் ஆட்சி செய்தார். கர்வம் கொண்ட அவர், முனிவர் ஒருவரின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாக அணிவிக்க நரகம் செல்ல நேர்ந்தது. தண்டனைக்காலம் முடிந்த பின் மீண்டும் பருந்தாக பிறந்து காட்டில் வாழ்ந்தார். இந்நிலையில் அங்கிருந்த 'சுகுப்தி' என்னும் முனிவரைக் காண ராமனும், சீதையும் வந்தனர். அப்போது அந்த பருந்து அங்கிருந்தது. முனிவருக்கு பாதபூஜை செய்தார் ராமர். அதைக் கண்டதும் பருந்துக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. முன்வினை பாவத்தால் தானே, இப்படி இழிநிலை ஏற்பட்டது என வருந்தியது. பாவத்தைப் போக்க முனிவர் மீது பட்ட தீர்த்தத்தில் உருண்டு எழுந்து உடலை நனைத்தது. அதன் பலனாக பொன்னிற இறக்கை முளைத்தது. அதைக் கண்டு வியந்த சீதை 'ஜடாயு' என பருந்துக்கு பெயரிட்டாள். 'ஜடாயு' என்பதற்கு 'பொன்னிற இறகு கொண்ட பறவை' என்பது பொருள். பின்னாளில் சீதையைக் கடத்திய ராவணனுடன் போராடியது இந்த ஜடாயு தான். ராவணன் அதன் இறக்கைகளை வாளால் வெட்டிச் சாய்த்தான். அந்த வழியே வந்த ராமர், ஜடாயுவின் காதில் மந்திரம் ஜபித்து அதற்கு நற்கதி அளித்தார்.