கண்ணனின் தங்கை
யமுனை நதிக்கரையில் இருந்த மதுராபுரியை கம்சன் அரசாண்டு வந்தான். அவனது தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் அழிவு ஏற்படும் என்று அசரீரி வாக்கு ஒலித்தது. இதை அறிந்த கம்சன் தங்கையையும், அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மகாவிஷ்ணுவே தேவகியின் எட்டாவது மகன் கண்ணனாக அவதரித்தார். அதே சமயத்தில், யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில், வசுதேவரின் நண்பர் நந்தகோபனின் மனைவி யசோதைக்கு மாயாதேவி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவளும் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டவள். அப்போது வானத்தில் அசரீரி ஒலித்தது. “வசுதேவரே! கண்ணனை கோகுலத்தில் உள்ள உன் நண்பர் நந்தகோபனிடம் சேர்த்துவிடு!” என்றது. ஒரு கூடையில் கண்ணனை எடுத்துக் கொண்டு வசுதேவர் கோகுலம் சென்று நந்தகோபன் வீட்டில் சேர்த்தார். மாயாதேவியை அதே கூடையில் வைத்து சிறைக்கு கொண்டு வந்தார். கம்சன் தன் தங்கைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிந்து, அதைக் கொல்ல சிறைக்கு வந்தான். பச்சிளங் குழந்தையை கையில் துாக்கிய போது அவன் பிடியிலிருந்து நழுவிய மாயா விண்ணை நோக்கிப் பறந்தாள். “ஏ மூடனே! ஹம்சா! உன்னைக் கொல்லப் போகும் என் அண்ணன் கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான். உலக உயிர்களை எல்லாம் காக்க நான் மாயாதேவியாக பூமியில் அவதரித்திருக்கிறேன்” என்றாள். அவளே மாரி, காளி, பவானி, துர்கை என்ற திருநாமங்களில் வழிபடப்படுகிறாள்.