வேப்பிலைக்காரி
UPDATED : ஜூலை 15, 2025 | ADDED : ஜூலை 15, 2025
ஜமதக்னி முனிவரை கார்த்தவீரியன் என்பவன் கொன்றான். முனிவரின் மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். விதி விளையாடியது. பெருமழை பெய்து, சிதை அணைந்தது. மழை வெள்ளத்தில் ரேணுகாவின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயால் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்த அவள், வேப்ப இலையை ஆடையாக்கிக் கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சள் பூசிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். பார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள்.தவத்திற்கு இணங்கிய அம்பிகை காட்சியளித்து, தன் அம்சத்தை ரேணுகாவுக்கு வழங்கினாள். அது முதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள்.இதன் காரணமாக வெப்பு நோய்களான அம்மை, கொப்பளம், வயிற்றுவலி தீர மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை கட்டியும், கூழிட்டும், தீ மிதித்தும் வழிபடத் தொடங்கினர்.