உள்ளூர் செய்திகள்

பொல்லாதவருக்கு பொங்கல்

குறும்பு செய்யும் குழந்தையை 'பொல்லாப் பயல்' என திட்டுவதுண்டு. குழந்தைக் கடவுளான விநாயகரும் 'பொல்லாப் பிள்ளையார்' என பெயர் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்றை படித்தால் அதற்கான காரணம் புரியும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் கோயிலில் உள்ள விநாயகருக்கு தினமும் நைவேத்யம் செய்வது வழக்கம். ஒருமுறை வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் பூஜை செய்ய சிறுவனான நம்பியாண்டார் நம்பியை அனுப்பினார். பொங்கலை வைத்து விட்டு, அதை சாப்பிடும்படி விநாயகரை வற்புறுத்தினார் நம்பி. நேரம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் விநாயகர் சாப்பிடவில்லை. மனம் வருந்தி விநாயகர் மீது தலையை முட்டியபடி அழுதார்.உண்மையான பக்திக்கு கட்டுப்பட்ட விநாயகர் பொங்கலை விருப்பமுடன் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவில்லை. விநாயகரே சாப்பிட்டதாக நம்பி தெரிவிக்க யாரும் நம்பவில்லை. தகவலைக் கேள்விப்பட்ட மன்னர் ராஜராஜசோழனுக்கு உண்மையை அறிய ஆவல் எழுந்தது. பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து விநாயகருக்கு நைவேத்யம் செய்யுமாறு தெரிவித்தார். விநாயகர் அதை சாப்பிடாமல் தாமதிக்கவே, நம்பியாண்டார் நம்பி பக்தியுடன் 'இரட்டை மணிமாலை' பாடலைப் பாடினார். மனமிரங்கிய விநாயகர் தன் பக்தனின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் ஊரறிய சாப்பிட்டார். இந்த விநாயகரின் சிலை உளியால் செதுக்கப்படாதவர் என்பதால் 'பொள்ளாப் பிள்ளையார்' எனப்பட்டார். 'பொள்ளா' என்றால் 'செதுக்கப்படாத' என பொருள். அதுவே தற்போது 'பொல்லாப் பிள்ளையார்' என்றாகி விட்டது. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. துாரத்தில் திருநாரையூர் உள்ளது.