உள்ளூர் செய்திகள்

நகராத ரயில்

தம்மை நாடி வந்தோரின் கர்மவினையை நொடியில் மாற்றும் ஆற்றல் பெற்ற மகான் சேஷாத்ரி சுவாமிகள். திருவண்ணாமலை மகான்களில் மாறுபட்டவராய், தவசீலராய், சித்த புருஷராக விளங்கியவர் அவர். சுவாமிகளின் மீது வெளியூர் பக்தர்கள் சிலர் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஒருமுறை சுவாமிகளைத் தரிசித்த அவர்கள், கையோடு தங்கள் ஊருக்குக் கூட்டிச் செல்ல முடிவு செய்தனர். சுவாமிகள் மறுத்தும் கேட்கவில்லை. அவரை அப்படியே கட்டிப்பிடித்து, கையோடு கூட்டிக் கொண்டு போய் ரயிலில் ஏற்றினர். ரயிலும் புறப்பட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம், ஓடும் ரயிலில் இருந்து சுவாமிகள் குதித்தார். உடம்பெல்லாம் காயம். ரயிலும் நின்றது. கார்டும், டிரைவரும் ஓடி வந்து சுவாமிகளைக் குற்றம் சாட்டினர். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். அவரைக் கைது செய்வதற்காக, குண்டுக் கட்டாக மீண்டும் ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். அது நகரவில்லை. அவர் பலமுறை முயற்சித்தும் பலனில்லை. இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மக்கள் கூடினர். அதில் சேஷாத்ரி சுவாமிகளை நன்கறிந்த பக்தர் சிலரும் இருந்தனர். நடந்ததை அறிந்த அவர்கள் சுவாமிகளின் பெருமையை விளக்கிச் சொல்லி விடுவிக்க வேண்டினர். சுவாமிகளை வற்புறுத்திக் கூட்டி வந்த பக்தர்களையும் கண்டித்தனர்.டிரைவரும், கார்டும் தங்களின் தவறுக்காக வருந்தி சேஷாத்ரி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டனர். சுவாமிகளைக் கூட்டிக் கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். சேஷாத்ரி சுவாமிகள் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார். உடனே உரத்த குரலில் 'ஹா ஹா'வெனச் சிரித்தார் சுவாமிகள். டிரைவர் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். அது கிளம்பவில்லை. உடனே ரயிலை மெதுவாகத் தடவிக் கொடுத்த சேஷாத்ரி சுவாமிகள், 'ம்... ம்... போ, போ' என்றார். உடன் ரயில் தடையின்றி புறப்பட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் நடந்த அற்புத நிகழ்ச்சியின் மூலம் மகான் சேஷாத்ரி சுவாமிகளின் பெருமை ஊரெங்கும் பரவியது. பலரும் நாடி வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர்.