உள்ளூர் செய்திகள்

வாராதிருப்பாரோ... வழிகாட்டும் வள்ளல் அவர்

பக்தர் ஒருவரின் மகளுக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது சென்னை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்த சுவாமிகளிடம் பத்திரிகை சமர்ப்பித்து, 'அவசியம் பெரியவா... திருமணத்துக்கு வர வேண்டும்' என வேண்டினாள்.மகானிடம் இருந்து புன்னகை மட்டும் பதிலாக வந்தது. மீண்டும் கெஞ்சினாள். 'சரி, அவசியம் வரேன்' என்றார். சீடர்களும் 'பெரியவா எப்படி வருவார்?' என திகைத்தனர். மயிலாப்பூரில் இருந்து மஹாபெரியவர் காஞ்சிபுரம் புறப்படும் நாளிலும், 'திருமணத்திற்கு அவசியம் வரணும்' என நினைவுபடுத்தினாள்.திருமண நாளன்று அவளுக்கு மஹாபெரியவரைத் தவிர வேறு எதுவும் முக்கியமாகப் படவில்லை. 'மஹாபெரியவரை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்' என வாசலில் பூர்ண கும்பத்தோடு வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள்.மண்டபத்துக்குள் நடக்கிற திருமண சடங்குகளில் அவளின் கவனம் செல்லவில்லை. உறவினர்களிடம், 'பெரியவா வந்தவுடனே அவரோட உள்ளே வர்றேன்' என வாசலிலேயே நின்றாள். முகூர்த்த நேரம் நெருங்கவும் இனி வர வாய்ப்பில்லை என தெரிந்து மண்டபத்திற்குள் சென்றாள். திருமணம் நடந்து முடிந்த சில நாள் கழித்துக் காஞ்சிபுரம் மடத்திற்கு சென்றாள். சுவாமிகளை வணங்கி விட்டு, 'ஏன் பெரியவா கல்யாணத்துக்கு வரவே இல்லை? நீங்க வருவேள்னு அன்னிக்கு வாசல்லயே காத்திண்டிருந்தேன்' என பணிவுடனும் ஆதங்கத்துடனும் கேட்டாள்.'நான்தான் வந்தேனே...' என்றார் புன்னகையுடன். திடுக்கிட்டாள். 'இல்லையே பெரியவா... நான்தான் வாசல்லயே இருந்தேனே...' என்றாள். 'வாசல்ல நீ இருந்ததை நானும் பார்த்தேனே... அப்போ வாசல்ல ஒரு பசுமாடு வந்ததா?''ஆமாம்... பூர்ண கும்பத்தோடு நாங்க நிக்கறப்ப வந்துது... பெரியவா வரப் போற நேரத்துல இதென்ன இம்சைன்னு ஒருத்தர் சைகை காமிச்சு விரட்டப் போனார். அது நகரவே இல்லை. அப்புறம் அங்கு இருந்த வாழை மரத்தை இழுத்துச்சு. அடிச்சு விரட்டினோம்' என அவள் சொல்லிக் கொண்டே போனாள். மஹாபெரியவர் புன்னகையுடன், தான் வந்திருந்ததை அவள் உணர வேண்டும் என சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் முதுகைத் திருப்பி காவி ஆடையை (காஷாய வஸ்திரம்) லேசாக விலக்கினார்.வாழை மட்டையால் அடித்தது போல் செந்நிறத்தில் வரி வரியாக இருந்தது. அவள் துடித்துப் போனாள். 'பெரியவா... என்னை மன்னிச்சுடுங்கோ' என குரலெடுத்து அழுதாள். அழைத்தால் வராமல் போவாரோ கருணைக் கடல்...காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும். * குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள். * மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com