விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 9
உன்னதம் அருளும் உச்சிஷ்ட கணபதி கணபதியின் வடிவங்களிலேயே மிக அதிக அளவில் இன்று வரை வழிபடப்படுவதும், கடுமையான விதிமுறைகளைக் கொண்ட தனி பூஜை பத்ததியை உடையதுமான வடிவம் இதுதான். கேட்ட உடனேயே வரங்களை அள்ளித் தரும் சிறந்த வரப்பிரசாதி உச்சிஷ்ட கணபதி. வலக்கையில் ஜபமாலை, இடக்கையில் வீணை, பின் வலக்கையில் நீலோத்பல மலர், பின் இடக்கையில் நெற்கதிர், துதிக்கையில் வெண் முத்துகளைக் கொண்ட மாதுளம்பழம் ஆகியவற்றை ஏந்தியபடி, நீலநிறத்தில் காட்சியளிப்பவர் உச்சிஷ்ட கணபதி. உச்சிஷ்டம் என்ற சொல்லுக்கு உயர்ந்த தேஜஸ், சித்தாகிய வித்து, வீர்யம் என்று பொருள். இவ்வுலகின் தோற்றமும் ஒடுக்கமும் தானே என்பதை உணர்த்த கணபதி இத்தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். தியான சுலோகம் நீலாப்ஜம் தாடிமீ வீணா சாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம் | தததுச்சிஷ்ட நாமாSயம் கணேச: பாது மேசக: II நீலாப்ஜம் - கருநெய்தல் மலர் எனும் நீலோத்பல மலர் (இந்திர நீல மலர்) தாடி மீ - வெண் முத்துகளைக் கொண்ட மாதுளங்கனி வீணா - வீணை சாலீ குஞ்ஜ - சம்பா நெற்கதிர் அக்ஷசூத்ர - ருத்ராக்ஷ மணி ஜபமாலை இவற்றை ததத் - (துதிக்கையுடன் கூடிய ஐங்கரங்களில்) தாங்கியவரும் ஏசக: - இந்த உச்சிஷ்ட நாமாயம் - உச்சிஷ்டர் எனும் பெயருடையவரான கணேச: - கணபதி ஆனவர் பாது - (என்னை எப்பொழுதும்) காக்கட்டும் கருநெய்தல் என்ற நீலோத்பல மலர்: மூவுலகத்திலும் அரிய மலர்; அம்பிகை ஏந்தியுள்ள மலர். இறைவனின் ஐந்தொழில்களில் இது படைத்தலைக் குறிப்பது. நெற்கதிர்: வளமையைக் குறிக்கும். உணவளித்துக் காத்தலை காட்டுகிறது. வீணை: மனதை ஒருமுகப்படுத்துவதால், இது ஒடுக்குதலின் அடையாளம். ஜபமாலை: தானே இறைவன் என்பதை உணர்த்துகிறது. மறைத்தலின் அடையாளம். மாதுளம்பழம்: மருத்துவக் குணம் மிகுந்தது. பிறவிப் பிணியைப் போக்கவல்ல இறைவன் கணபதி என்பதை உணர்த்துகிறது. பலன்: மக்கட்பேறு, காரிய சித்தி, எதிரிகள் நாசம், விரும்பிய இன்பங்களை அடைதல் உள்ளிட்ட அனைத்து பலன்களும் இவரை வழிபட்டால் கிடைக்கும். அருள் தொடரும்வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்