ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
காஞ்சி மஹாபெரியவரின் ஞாபக சக்தி பற்றி வியக்காதவர்களே இல்லை. வயது ஆக ஆக ஞாபக சக்தி குறையும் என்பார்கள். ஆனால் சுவாமிகளுக்கு நினைவாற்றல் அதிகம்.பல வருடங்களுக்கு முன் சந்தித்தவரையும் பெயர் சொல்லி விசாரிப்பது அவரது இயல்பு. அன்று வயதான ஒரு தம்பதி மடத்திற்கு வந்திருந்தனர். அவர்களைக் கூர்ந்து பார்த்து, ''என்ன சபேசா... சவுக்கியமா? உன் பக்கத்தில் நிற்பவள் பார்யாள் (மனைவி) பங்கஜலட்சுமி தானே... நீயும் சவுக்கியமா'' எனக் கேட்டார். இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ''நான் பார்த்த போது உங்கள் பையன் சுவாமிநாதனுக்கு வயது ஐந்து இருக்கும். இப்போது நாற்பது வயதாகுமே... என்ன செய்றான்'' எனக் கேட்டார். '' சுவாமிகள் ஆசியால் அவன் பம்பாயில் (மும்பை) ஆடிட்டரா இருக்கான்'' என்றனர். ''உங்களுக்கு ஒரே பையன் தானே... கல்யாணம் ஆகியிருக்குமே... எத்தனை குழந்தைகள்'''' இரண்டு பையன்கள். இருவரும் படிக்கிறார்கள்'' ''அதுசரி. முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்பு உங்கள் வீட்டில் பிட்சை ஏற்ற போது, வாசலில் பெரிய வேப்ப மரம் இருந்துதே, இப்போதும் இருக்கா...'' எனக் கேட்டார். அவர்களும் பரவசத்துடன், ''அப்படியே இருக்கிறது, வீட்டைத் தான் கொஞ்சம் மாற்றியிருக்கிறோம்'' என்றனர். '' நான் வந்த போது மாடு இருந்ததே... வீட்டை மாற்றினாலும் மாட்டுக் கொட்டகை இருக்கிறதா? முன்பு போல மாட்டை பராமரிக்கிறீர்களா'' ''இப்போதும் இருக்கிறது. பசுக்களை பராமரித்து வருகிறோம்'' என்றனர்.''பசு இருக்குமிடத்தில் மகாலட்சுமி இருப்பாள். பசுவை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார். ''சுவாமிகளின் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது'' என தம்பதியினர் மனதிற்குள் வியந்தனர். அப்போது அவர்களிடம், ''நமக்கு பகவானின் ஞாபகம் அல்லவா எப்போதும் மனதில் இருக்க வேண்டும்? ஞாபக சக்தியின் பிரயோஜனமே அதுதான்'' என்றார் மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.