உள்ளூர் செய்திகள்

அசுர வதம் - 12

ஐந்து அசுரர்கள் வதம்ஊழிக்காலம் முடிந்தது. புதிய உலகில் உயிர்களைத் தோற்றுவித்த விஷ்ணு களைப்புடன் பாம்பணையில் துாங்கினார். அப்போது அவரது வியர்வையில் இருந்து வச்சிரமுட்டி, துாம்ரவக்கிரன், துாம்ராட்சன், சித்ரேசனன், பஞ்சசேனன் என்னும் ஐந்து அசுரர்கள் தோன்றினர்.'விஷ்ணு அழகுடன் இருக்க, அவரிடமிருந்து தோன்றிய நாம் மட்டும் பார்க்க விகாரமாக இருக்கிறோமே' என அசுரர்கள் கோபம் கொண்டு போரிடத் தொடங்கினர். போர் ஓராண்டுக்கு மேலாக நீடித்தது. “என்னிடமிருந்து தோன்றிய உங்களின் திறமை கண்டு மகிழ்கிறேன். வேண்டிய வரத்தைக் கேளுங்கள்” என்றார் விஷ்ணு. ''தங்களால் எங்களுக்கு அழிவு நேரக் கூடாது'' என அசுரர்களும் வரம் கேட்க விஷ்ணு வழங்கினார். இதன்பின் ஒவ்வொரு உலகமாகப் பயணித்த அசுரர்கள், பாதாள உலகை அடைந்தனர். குலகுருவான சுக்கிரனிடம் ஆசி பெற சென்றனர். ஆசிரமத்தில் அவர் இல்லை என சுக்கிரனின் மகளான சோமை தெரிவித்தாள். அவளின் அழகில் மயங்கிய அசுரர்கள், தங்களில் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டுமென அவளை வற்புறுத்தினர். கோபமடைந்த சோமை, “குலகுருவின் மகள் என்று தெரிந்தும் தவறான நோக்கமுடன் பேசிய உங்களின் பலம் சிறிது சிறிதாக குறையட்டும். இறுதியில் ஒரு பெண்ணால் தான் உங்களுக்கு மரணம் ஏற்படும்” எனச் சபித்தாள். அந்த நேரத்தில் சுக்கிரன் அங்கு வரவே ஓட்டம் பிடித்தனர். சாபத்தால் அசுரர்களின் உடல் மெலியத் தொடங்கியது. பரிகாரம் தேடி சிவனை நோக்கித் தவமிருந்தனர். காட்சியளித்த சிவன், ''பெற்ற சாபத்தை திரும்பப் பெற முடியாது என்பதால் நீங்கள் விரும்பும் வேறு ஏதாவது வரத்தைக் கேளுங்கள்; தருகிறேன்” என்றார்.''சுவாமி... எங்களின் அழிவு பெண்ணால் ஏற்படப் போவது உறுதி. ஆனாலும் அப்போது எங்கள் உடம்பில் இருந்து வெளியேறும் ரத்தத்தைத் தேவர்கள், மனிதர்கள் தங்களின் உடலில் அணிந்து அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை தாருங்கள்” என வித்தியாசமான வரத்தைக் கேட்டனர். சிவனும் வழங்கி விட்டு மறைந்தார். ஆனால் அசுரர்களாகிய நம் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தைத் தேவர்களும், மனிதர்களும் விரும்ப மாட்டார்கள். எனவே தங்களுக்கு அழிவே உண்டாகாது என மகிழ்ந்தனர். இந்நிலையில் பூலோகம், பாதாளம், தேவலோகம் என மூவுலகிற்கும் துணி நெய்து தருபவரான மநு என்பவர் வீடுபேறு அடைந்தார். அவருக்குப் பின் நெசவுப்பணிகளைச் செய்யத் தகுதியானவர் இல்லாததால் அப்பணி முற்றிலும் நின்றது. இந்நிலையில் அனைவரும் ஆடையின்றி இலை, தழை, மரவுரியை அணியும் அவலநிலை உருவானது. அனைவரும் கைலாயம் சென்று சிவனிடம் தேவர்கள் முறையிட்டனர். அவரும் பிரச்னைக்கு தீர்வு காண தியானத்தில் அமர்ந்தார். நெசவு செய்ய தகுதியானவரை உருவாக்குவதில் அவரது மனம் ஈடுபட்டது. அப்போது சிவனின் உடலில் இருந்து ஒளி ஒன்று புறப்பட்டு ஆண்மகனாக வடிவெடுத்து அவரை வணங்கியது. “என்னிடமிருந்து தோன்றிய நீ 'தேவலன்' எனப் பெயர் பெறுவாய். உலகிற்கு தேவையான ஆடைகளை உருவாக்கும் நெசவுப்பணியில் ஈடுபடு. அதற்குத் தேவையான நுாலிழைகளை விஷ்ணுவிடம் பெற்றுக்கொள். உன்னுடைய நெசவுப் பணியால் அனைவரும் கவலையின்றி ஆடைகள் அணியட்டும். பூவுலகில் ஆறுமுறை பிறந்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, ஏழாவது பிறவியில் என்னை வந்தடைவாய்” என ஆசியளித்தார். தேவலனும் நெசவுக்குத் தேவையான நுாலிழைகளைப் பெற விஷ்ணுவை தேடிச் சென்றார். தன் தாமரை தொப்புளில் இருந்து நுாலிழைகளை எடுத்துக் கொடுத்தார். தேவலனும் அதைப் பெற்றுக் கொண்டு பூலோகம் வந்து பணியாற்ற தகுந்த இடத்தை தேடி அலைந்தார். சம்புத்தீவில் ஆசிரமம் ஒன்று இருக்கக் கண்டார். சற்று ஓய்வெடுத்துக் கொண்டபின் பயணத்தைத் தொடரலாம் எனக் கருதி தங்கினார். அங்கிருந்த முனிவர்கள் ஐவர் வணங்கி தேவலரை வரவேற்றனர். “ நெசவுப் பணியில் ஈடுபட சிவனால் படைக்கப்பட்டவன் நான். அதற்கான நுாலிழைகளை விஷ்ணு கொடுத்தனுப்பினார். இப்போது அதற்குரிய இடம் தேடி வந்தேன். இளைப்பாறலாம் என இங்கு வந்தேன். இடம் கொடுத்து உதவுங்கள்” என்றார் தேவலன். முனிவர்களும், “எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்குங்கள்” என்றனர். தேவலன் நன்றி தெரிவித்து, அங்கிருந்த குடில் ஒன்றில் நுாலிழைகளை வைத்து விட்டு துாங்கினார். கண் விழித்த போது ஆசிரமம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. தன்னிடம் இருந்த நுாலிழைகள் குறித்த நினைவு வரவே அதைத் தேடி ஓடினார். காணவில்லை. தன்னை படைத்த சிவபெருமானை சரணடைந்த போது, “தேவலா...நீ நெசவு செய்ய வருவதை அறிந்த அசுரர்கள் மாயாசக்தியால் முனிவர்கள் போல காட்சியளித்தனர். அறியாமல் நீயும் ஏமாந்தாய். இப்போது அருகிலுள்ள மாய வனத்திற்குள் உள்ளனர். அவர்களிடம் நுாலிழைகளை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபடு'' என அசரீரி ஒலித்தது. மாயவனத்திற்குச் சென்ற தேவலன் அவர்களைச் சந்தித்து நுாலிழைகளை ஒப்படைக்க வேண்டினார். ''நெய்யும் துணிகளைத் தேவலோகத்தில் யாருக்கும் தரக் கூடாது. இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டால் நுாலிழைகளை தருவோம்” என்றனர். கவலையடைந்த தேவலன் மரத்தடியில் அமர்ந்து சிவனை தியானித்தார். காட்சியளித்த சிவன், “கவலைப்படாதே, சுக்கிராச்சாரியாரின் மகள் சோமையின் சாபத்தால் ஒரு பெண்ணால் அசுரர்கள் கொல்லப்படுவது உறுதி. எனவே நீ பார்வதியை வழிபடு'' என்று சொல்லி மறைந்தார். பார்வதியை வழிபட்டான் தேவலன். மனமிரங்கிய பார்வதி அசுரர்களை சூலாயுதத்தால் தாக்கினாள். அசுரர்களின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. வாகனமான சிங்கத்திடம் ரத்தத்தை தரையில் விழாமல் குடிக்குமாறு கட்டளையிட்டாள். அதன் பின் பார்வதி விஸ்வரூப வடிவெடுத்து உயர்ந்து நின்றாள். அசுரர்கள் கையில் இருந்த நுாலிழைகளை சூலாயுதத்தின் உதவியோடு கைப்பற்றினாள். கோபமடைந்த அசுரர்கள் கடுமையாக தாக்கினர். அசுரர்களில் ஒருவனை சூலாயுதத்தால் வயிற்றில் குத்தி அந்தரத்தில் துாக்கினாள். அசுரனின் வயிற்றுப் பகுதியிலிருந்து ரத்தம் வெளியேறியது. அது தரையில் விழாமல் இருக்க கையில் இருந்த நுாலிழைகளால் தடுத்தாள். அசுரனின் ரத்தத்தால் நுாலிழை முழுவதும் நனைந்தது. உடலிலிருந்து ரத்தம் முழுமையாக வெளியேறிய நிலையில் அவன் இறந்தான். அந்த அசுரனின் உடலை துாக்கி எறிந்தாள் பார்வதி. அதே முறையைப் பின்பற்றி பார்வதி தேவி, ஒவ்வொரு அசுரனையும் கொன்றாள். அவர்களின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் முழுவதும் நுாலிழைகளின் பெரும்பகுதியை நனைத்திருந்தது. அசுரர்களின் ரத்தம் படிந்த நுாலிழைகளை ஒப்படைத்து, “தேவலா... வரத்தின்படி அசுரர்களின் ரத்தம் கலந்த துணியை அனைத்து உலகினரும் ஆடைகளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதால், ரத்தக்கறையைக் குறையாகக் கருதாமல் நெசவு செய். பணி சிறக்க வாழ்த்துக்கள்'' என்று சொல்லி மறைந்தாள். தேவலனும் அழகிய நிறங்களில் துணிகளை நெய்து மூவுலகிற்கும் வழங்கினார். அனைவரும் அழகிய நிறங்களுடன் ஆடைகள் கிடைத்ததால் தேவலனை பாராட்டி பரிசளித்தனர். நாகலோக அரசனான அனந்தன் நெசவுப்பணி தொடர வேண்டுமென விரும்பினார். தன் மகளான சந்திரரேகையை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவரது சந்ததியினரே நெசவாளர்களாக உள்ளனர். -தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925