அசுர வதம் - 23
ஜ்வராசுரன் வதம்தட்சன் நடத்திய வேள்விக்குச் சிவபெருமானை அழைக்காததால், தட்சனின் மகளும் சிவபெருமானின் மனைவியுமான பார்வதி கவலை கொண்டாள். மனைவியின் சோக முகத்தைக் கண்ட சிவனுக்கு மூன்றாவது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அதில் இருந்து உயிர் ஒன்று தோன்றியது. தீப்பிழம்பு போல மின்னிய அது சற்று நேரத்தில் கரிய உருவமாக மாறியது. கண்கள் பிரகாசத்துடன் இருந்தன. தலை முடி, ரோமம் அனைத்தும் நிமிர்ந்து நின்றன. மீசை பச்சை நிறத்தில் இருந்தது. இடுப்பில் சிவப்பு நிறத்துணி அணிந்திருந்தது. சிவபெருமான் அதனிடம், “நீ பூலோகம் சென்று, மனிதர்களுக்கு உதவி செய்” என்றார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வெளியேறியது. பூமிக்கு வந்த அது மகிழ்ச்சியாக விளையாடிய குழந்தைகளைப் பார்த்தது. அசுரக் குணம் கொண்ட அதற்கு கோபம் வந்தது. தன்னிடம் உள்ள வெப்பத்தை எல்லாம் குழந்தைகளின் மீது பாய்ச்சியது. வெப்பத்தால் தாக்குண்ட அவர்கள் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, அம்மையால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளின் பெற்றோர் வைத்தியர்களின் உதவியை நாடினர். ஆனால் குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வதென தெரியாமல் பெற்றோர் கவலையடைந்தனர். அனைவரும் படும் துன்பம் கண்டு மகிழ்ந்த உயிரினம் எங்கும் நோயைப் பரப்பியது. பலர் உயிரிழந்தனர். முடிவில் நோயைப் பரப்புவன் ஒரு அசுரன் என்றும், அவன் பெயர் 'ஜ்வராசுரன்' (காய்ச்சலின் அரக்கன்) என்றும் அறிந்தனர். வங்காள மொழியில் காய்ச்சலை 'ஜ்வரா' (ஜுரம் - காய்ச்சல்) என்பர். அனைவரும் சிவபெருமான், பார்வதியை வழிபட்டு ஜ்வராசுரன் பிடியிலிருந்து உலகத்தைக் காக்குமாறு வேண்டினர். சிவபெருமான் பைரவராகவும், பார்வதி சீத்தலாதேவியாகவும் வடிவெடுத்து வந்தனர். கழுதை வாகனத்தில் வந்த அவளின் கைகளில் கிண்ணம், விசிறி, துடைப்பம், குளிர்ந்த தண்ணீர்ப் பானை இருந்தன. நோயுற்றவர்களை விசிறியால் வீசித் துாங்க வைத்தாள். பானையில் இருந்த குளிர்ந்த நீரைத் தெளித்து குளிர்ச்சியூட்டினாள். அதன்பின் நோயாளிகளின் உடம்பில் இருந்த வெப்பம் வெளியேறியது. அந்த வெப்பம் மீண்டும் வராதபடி துடைப்பத்தால் அடித்து விரட்டினாள். வெளியேறிய வெப்பம் எல்லாம் மீண்டும் அசுரனை அடைந்தது. அதனால் அவன் சீத்தலாவைத் தாக்க வந்தான். இதைக் கண்ட பைரவராக இருந்த சிவன் அசுரனைத் தாக்கத் தொடங்கினார். இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரையும் சீத்தலா காப்பாற்றினாள். தங்களைக் குணப்படுத்திய சீத்தலா என்னும் பார்வதிக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். அதன் பின் பைரவரும், அசுரனும் சண்டையிடும் இடத்திற்கு வந்தாள் சீத்தலா. அவளின் வருகையைக் கண்டதும் பைரவர் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர அசுரனின் மார்பில் சூலத்தால் குத்தினார். பைரவர், சீத்தலாவைச் சரணடைந்த அவன், “ பிறரை துன்புறுத்தி மகிழ்ந்த எனக்கு மரண தண்டனை சரியானதே” என உயிர் நீத்தான். கோடை காலத்தில் வரும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, அம்மை போன்ற வெப்ப நோய்கள் ஜ்வராசுரனை இன்றும் நினைவுபடுத்துகின்றன. இன்னொரு கதைசிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய கண்ணீரில் அசுரன் ஒருவன் தோன்றினான். அவனால் காய்ச்சல் பரவத் தொடங்கியது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் ஒருமுறை காய்ச்சலால் அவதிப்படவே, சக்கராயுதத்தை ஏவி அசுரனை மூன்று துண்டாக்கினார். அவற்றை ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தார் பிரம்மா. அப்போது அவனுக்கு இன்னும் ஒரு தலை, ஒரு கால் உண்டாயின. மூன்று முகம், மூன்று பாதம் கொண்ட அவன் 'ஜ்வராசுரன்' எனப் பெயர் பெற்றான். அசுரனால் உண்டான காய்ச்சல், அம்மை நோய்களைப் போக்க சீத்தலா தேவி, ஜ்வரேஸ்வரர் என்னும் பெயரில் பார்வதியும், சிவனும் பூமிக்கு வந்தனர். சீத்தலா தேவிசீத்தலா என்பதற்கு 'குளிர்விப்பவள்' என பொருள். வடஇந்திய கிராமங்களில் சீத்தலா வழிபாடு அதிகம் உள்ளது. பார்வதியின் அவதாரமான இவளை 'தாய்' என அழைக்கின்றனர். வசந்த் (பருவ கால தெய்வம்), தாகுரானி, ஜக்ராணி (உலக ராணி), கருணாமாயி (கருணை நிறைந்தவள்), மங்களா (நல்லவள்), பகவதி (தெய்வம்), தயாமாயி (கருணையும், பரிவும் கொண்டவள்) என பலவிதங்களில் வழிபடப்படுகிறாள். இவளை நாம் மாரியம்மன் என அழைக்கிறோம். -தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925