உள்ளூர் செய்திகள்

மாநில பெயரை மாற்றலாமே?

காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது ''தமிழகத்தின் எந்தப் பகுதியில் அண்மைக் காலத்தில் மகான்கள் அதிகம் இருக்கிறார்கள்?'' எனக் கேட்டார் பக்தர் ஒருவர். ''திருவண்ணாமலை என்பதில் சந்தேகமென்ன?'' என்றார் சுவாமிகள். அதையொட்டி பேச்சு திருவண்ணா மலையில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றித் தொடங்கியது. ரமணர், சேஷாத்ரிசுவாமி, யோகி ராம்சுரத்குமார் என சம காலத்தில் வாழ்ந்த மகான்கள் பற்றி சுவாமிகள் குறிப்பிட்டார். மனதில் எதையும் எண்ணாமல், நினைவற்ற நிலையில் வாழும் ஆற்றல் பெற்ற ரமணர் பற்றியும், ஒருமுறை வெளிநாட்டுக்காரரான பால்பிரண்டன் என்பவருக்கு ஏற்ற குருநாதர் ரமணரே எனத் தாம் வழிகாட்டியதையும் தெரிவித்தார். யோகி ராம்சுரத்குமார் ராம நாமத்தையே தொடர்ந்து ஜபிப்பவர். கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் இருபத்து நான்கு மணிநேரமும் ராமநாமம் ஜபிக்கப்படுவதால், அங்கு தங்கி ராம்சுரத்குமார் ராமநாமம் சொல்லலாமே என்று தான் மனதில் எண்ணியதாகவும், ஆனால் எல்லா திருத்தலங்களும் ஒன்றே என்பதால் திருவண்ணாமலையில் இருக்கவே ராம்சுரத்குமார் விரும்பியதை, அவர் தெரிவிக்காமலே தான் அறிந்ததையும் சொல்ல, வியந்தனர் பக்தர்கள். அதன் பின் சுவாமிகள், ''அண்மைக் காலத்தில் மகான்கள் அதிகம் தோன்றிய மாநிலம் எது?'' எனக் கேட்டார். கேரளா, ஆந்திரா, குஜராத் என ஒவ்வொருவரும் ஒரு மாநிலத்தைக் கூறினர். சுவாமிகள் சிரித்தபடி, ''மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பாண்டுரங்கரின் அடியவர்களான நாமதேவர், ஜெயதேவர், துக்காராம், ஜனாபாய், கோரா கும்பர், ராமதாசர், ஏகநாதர், சூர்தாசர் என நுாற்றுக்கணக்கான மகான்கள் தோன்றினர். அதனால் மகாராஷ்டிராவின் பெயரை மாற்றலாமா என்று கூடத் தோன்றுகிறது''''எப்படி மாற்றலாம் சுவாமி?''எனக் கேட்டார் ஒருவர். ''மகான்கள் பலர் தோன்றியதால் மகாராஷ்டிராவை ஏன் 'மகான் ராஷ்டிரா' என மாற்றக் கூடாது?'' என்று சொல்லி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார் சுவாமிகள்.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்