உள்ளூர் செய்திகள்

மனசுக்குள் மத்தாப்பூ

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹாபெரியவரின் பக்தர் ஒருவர் மடத்திற்கு செல்லும் வழக்கம் உள்ளவர். நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். அங்கு செலவு அதிகமாகுமே என்ற நிலையில் விருப்பமின்றி சென்றார். பணநெருக்கடியால் காதில் இருந்த கடுக்கனை விற்கும் நிலைக்கு ஆளானார். மஹாபெரியவரின் படத்தின் முன் நின்று, ''இப்படி கஷ்டப்படுறேனே... இதிலிருந்து விடுபட்டால் என் கடுக்கனை காஞ்சி மஹாபெரியவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்'' எனச் சொல்லி அழுதார்.மறுநாள் அலுவலகத்தில் மேலாளர் அவரிடம், 'உங்களை மீண்டும் உங்கள் ஊருக்கே மாறுதல் செய்கிறோம். அதற்கான செலவு தொகையும் தருகிறோம். இப்போதே கிளம்புங்கள்'' எனக் கூறினார். 'என் கஷ்டம் எல்லாம் தீர்ந்தது' என மஹாபெரியவருக்கு நன்றி சொல்லி விட்டு ஊருக்கு கிளம்பினார். ஓராண்டு கடந்தது. ஆனால் ஒருமுறை கூட காஞ்சிபுரம் செல்லவில்லை. திடீரென ஒருநாள் பக்தருக்கு காது வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்ற போது ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவர் கூறினார். சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பக்தர் மீண்டும் சோதித்தார். அங்கும், ''ஆப்பரேஷன் உடனடியாக செய்வது அவசியம். கடுக்கன் இல்லாமல் வாருங்கள்'' எனக் கூறினர். பக்தரின் மனதிற்குள், ''கஷ்டம் தீர்ந்தால் கடுக்கனை மஹாபெரியவருக்கு காணிக்கை தருவதாக வேண்டினோமே... பரவாயில்லை ஆப்பரேஷனுக்காக கடுக்கனை கழற்றிய கையோடு சுவாமிகளிடம் ஒப்படைச்சிடுவோம்'' என காஞ்சிபுரம் புறப்பட்டார்.இதற்கிடையில் வேதம் ஓதும் அந்தணர்கள் சிலர் காஞ்சி மடத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பிரசாதம் அளித்த போது அவர்களில் ஒருவரிடம், ''நீ மட்டும் காத்திரு; அப்புறம் போகலாம்'' என்றார் மஹாபெரியவர். சிறிது நேரத்தில் பக்தர் மடத்திற்குள் நுழைந்தார். கஷ்டம் தீர வேண்டிக் கொண்டது முதல் காது ஆபரேஷன் வரை அனைத்தையும் சொல்லி விட்டு கடுக்கனை தட்டில் வைத்து காணிக்கையாக ஒப்படைத்தார். அவருக்கு ஆரஞ்சு பழம் ஒன்றும், குங்கும பிரசாதமும் கொடுத்து அனுப்பினார் மஹாபெரியவர். பின் சீடரிடம் அந்தணரை அழைத்து வரச் சொன்னார். '' வேதம் ஜபிக்கிறப்போ எல்லோரின் காதிலும் கடுக்கன் இருக்கே... என் காதில மட்டும் வேப்பங்குச்சி செருகியிருக்கேன்னு வருத்தப்பட்டியே... இப்போ இந்த தட்டில் இருக்கிற கடுக்கனை சுத்தி பண்ணி மாட்டிக்கோ'' எனக் காட்டினார். மனசுக்குள் மத்தாப்பூ போல இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். மருத்துவமனைக்குச் சென்ற பக்தர் கொஞ்சம் கொஞ்சமாக காது வலி குறைவதை உணர்ந்தார். மருத்துவரிடம் அதை தெரிவித்த போது மீண்டும் சோதித்து விட்டு, ''இப்போதைக்கு பிரச்னை இல்லை. ஆப்பரேஷன் வேண்டாம். சொட்டு மருந்தைக் காதில் விட்டால் போதும்'' என்றார். பக்தரின் மனசெல்லாம் மஹாபெரியவரே நிறைந்திருந்தார்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.