உள்ளூர் செய்திகள்

மலைக்க வைத்த மஹாபெரியவர்

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகள் சுசீலா. ராஜம்மாவின் தம்பி பாலன். இவர் ஒரு நாத்திகர். ஒருமுறை அக்காவை பார்க்க சென்னைக்கு இவர் வந்த போது காஞ்சி மஹாபெரியவர் அங்கு முகாமிட்டிருந்தார். அவரை தரிசிக்க சுசீலா விரும்பினாலும், உடல்நலம் இல்லாததால் ராஜம்மாவால் செல்ல முடியவில்லை. தம்பியின் துணையுடன் மகளை அனுப்பினார். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அக்காவின் பேச்சுக்கு மதிப்பளித்து பாலனும் சம்மதித்தான். “அக்காவுக்காகத் தான் உன்னுடன் வருகிறேன். அங்கே கீழே மேலே விழுந்து வணங்குவதை எல்லாம் உன்னோடு வைத்துக் கொள்'' என்றான் பாலன். மஹாபெரியவா இருந்த முகாமிற்கு வீட்டில் இருந்தே நடந்து சென்றனர். அங்கு நீண்ட வரிசை காத்திருந்தது. எத்தனை நேரம் வரிசையில் நிற்க வேண்டுமோ என பாலன் நொந்து கொண்டான்.அப்போது பெரிய கார் ஒன்று அங்கு வந்தது. பணக்காரர் ஒருவர் வெள்ளிக்குடத்தை வைத்தபடி நிற்காமல் உள்ளே சென்றார். இதைப் பார்த்த பாலன் கோபத்துடன், ''கடவுள் பேரை சொல்லிக் கொண்டு பணம் பண்ணுகிறார்கள். வெள்ளிக் குடத்துடன் வந்தவனுக்கு நேராக நுழையும் உரிமை. பணம் இல்லாதவங்க கால் கடுக்க நிற்கத்தான் வேண்டுமா'' எனக் கத்தினான். நீண்ட நேரம் நின்ற பின் மஹாபெரியவரை நெருங்கினர். சுசீலா விழுந்து வணங்கி விட்டு பிரசாதம் வாங்கினாள். பாலன் லட்சியம் செய்யாமல் நடந்தான். அருகே வா என்பது போல ஜாடை காட்டினார் மஹாபெரியவர். கோபமாக நின்ற பாலனிடம், ''அந்த வெள்ளிக்குடம் எடுத்து வந்த பணக்காரர் எங்கே என்றுதானே உனக்குத் தெரியணும்'' என்று கேட்டுவிட்டு கையைக் காட்டினார். வரிசையில் வெள்ளிக்குடத்துடன் பணக்காரர் நின்றிருந்தார். 'இவரைப் போய் தப்பா நினைச்சிட்டேனே... வாய்க்கு வந்தபடி பேசிட்டேனே... ஆனா அவரோ என்னை பார்த்த மாத்திரத்தில மனசில நினைச்சதை புட்டு புட்டு வைச்சிட்டாரே?' என மலைத்து விட்டான் பாலன். காஞ்சி மஹாபெரியவரின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை உணர்ந்தான். மனதிற்குள் மின்னல் வெட்டியது போலிருந்தது. கண்ணீருடன் விழுந்து வணங்கி பிரசாதம் பெற்றுக் கொண்டான். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.