உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்-2 (6)

மந்த பாலரிஷி என்னும் முனிவருக்கு சாதகப் பறவைகள் வடிவில் நான்கு பிள்ளைகள்! அந்த நான்கு பறவைகளையும் அக்னி எதுவும் செய்யவில்லை.எதனால் அப்படி என்ற அர்ஜூனனின் கேள்விக்கு அக்னியே பதில் கூறினான். ''பார்த்திபனே! மந்த பாலரிஷி பெரும் தவசி. பல யோகங்களையும் செய்தவர். வேதத்தில் கரை கண்டவர். மானுட வாழ்வை முடித்ததும் விண்ணுலகை அடைந்தார். ஆனால், முக்தி உலகக் கதவும் மூடப்பட்டே இருந்தது. இவர் நிமித்தம் அது திறக்க வேண்டும். ஆனால், திறக்கவில்லை. இதனால், வெகுண்ட மகரிஷி எமலோகம் சென்று தன் வருத்தத்தை தெரிவித்தார். எமலோகத்தில் எமனோடு இருந்த தேவர்கள் மந்தபாலரிஷிக்கு பதில் அளித்தனர். ''மகரிஷி அவர்களே! நீங்கள் பெரிய தவசீலர். உங்களுக்குத் தெரியாததல்ல. சாஸ்திரப்படி நடந்தீர். பாவமேதும் செய்யவில்லை. ஆனால், திருமணம் கைகூடி புத்திரப்பேறு இல்லாமல் போய் விட்டது. சந்ததி என்று ஒன்று ஏற்பட்டு அந்த சத்புத்திரன் உங்கள் கர்மங்களை தொடர்ந்தாலே இங்கே மோட்சக்கதவு திறக்கும். அல்லாத பட்சத்தில் 'புத்' என்னும் நரகத்தை அடைந்து துன்புற வேண்டும். 'புத்' என்னும் நரகில் இருந்து பிதாவைக் காப்பவன் என்பதாலேயே ஆண் குழந்தைகளை 'புத்திரன்' என்கிறோம். பிரம்மச்சர்யமும் அதன் தொடர்பான சன்யாசமும் பூவுலகில் ஞானம் தரும். பெரும் புண்ணிய பயன்களையும் தந்திடும். அதே வேளையில் அந்த பயன்களை அனுபவித்திட திரும்பவும் பிறப்பைத் தரும். அவ்வாறு பிறவாமல் சொர்க்கத்தில் வசித்திட நம் பொருட்டு கர்மங்களைத் தொடர வாரிசுகள் முக்கியம். அவர்கள் செய்யும் பிதுர் கர்மங்களால் இங்கே தேக விடுதலை கிடைக்கும். இதுவே வாழ்வின் யதார்த்தம்,'' என்றனர். மந்த பாலரிஷியும் அப்போதே தன் பொருட்டு பிள்ளைகள் உருவாக விருப்பம் கொண்டார். வேகமாகவும், அதிகமாகவும் புத்திரப்பேறு உண்டாவது என்பது பறவை இனத்தில் தான்! எனவே, மந்தபாலரும் தன் தவசக்தியால் 'சார்ங்க பட்சி' வடிவம் எடுத்தார். 'ஜரிதை' என்னும் பெண் சார்ங்க பட்சியிடம் தொடர்பு கொண்டார். நான்கு புத்திரர்கள் உருவாயினர். இந்நிலையில் தான் நான் உங்கள் உதவியோடு காண்டவ வனம் முழுவதையும் எரித்து விட எண்ணவும், மந்தபால ரிஷி என்னை துதித்து தன் புத்திரர்களை ஏதும் செய்யக்கூடாது என்ற வரத்தையும் பெற்றார்,'' என்றான் அக்னி. அர்ஜூனனும், கிருஷ்ணனும் அக்னியால் பூவுலகில் ஒரு மனிதனுக்கு புத்திரப்பேறு என்பது எத்தனை அவசியமானது என்பதைப் புரிந்து கொண்டனர். இதன் பிறகு காண்டவ வனமும் எரிந்து முடிந்திட அக்னி பழைய பொலிவைப் பெற்றான். அப்படியே அர்ஜூனன் வரமாகக் கேட்ட அனுமன் கொடி பறக்கும் குதிரைகள் பூட்டிய ரதத்தையும், பாணங்கள் வற்றாத அம்பறாத்தூளியோடு காண்டீபம் என்னும் வில்லையும் வழங்கினான். அதே போல சக்ராயுதத்தை கிருஷ்ணனிடம் வழங்கி வணங்கி நின்றான். ''அவதார புருஷரே! உங்களால் உண்டானதே இப்போது என் மூலம் உங்களைத் திரும்ப அடைந்துள்ளது. இந்த மானுட ஜென்மத்தில் இந்த சக்கரம் கொண்டு தாங்கள் சாதிக்கப் போகும் விஷயங்கள் பல உள்ளன. அந்த திருவிளையாடலின் போது இதன் மகிமையை நானும் கண்டு மகிழ்வேன். என் குறை தீர்த்த உங்களுக்கு என்னால் ஆனதைச் செய்த நிறைவோடு விடை பெறுகிறேன்,'' என்று அக்னி புறப்பட்டான். மொத்தத்தில் அர்ஜூனனின் வனவாசம் அவனுக்குத் தந்தையாகும் வாய்ப்பை மட்டுமின்றி இப்படி ரதம், அஸ்திரம் அடையவும் வழி செய்தது. கிருஷ்ணனோடு அர்ஜூனனின் உறவு நட்பு நிலை கடந்து, மைத்துனன் என்ற உறவு நிலையை எட்டி, அதற்கும் மேலாக குரு சிஷ்ய பாவனை கொண்டதாகவும் மாறியது. கிருஷ்ணனும், அர்ஜூனனும் ஒத்த கருத்தோடும் மிகுந்த பற்றோடும் இருந்த இந்த வேளையில், காண்டவ வனம் எரிந்த போது கொல்லப்படாமல் மன்னிக்கப் பெற்ற மயன் என்பவன் அர்ஜுனனுக்கு நன்றி கூற வந்தான். அசுர குலத்தின் வழி வந்த மயனே விஸ்வகர்மா என்னும் பெயர் பெற்றவன். கலைப்படைப்புகளுக்கெல்லாம் அதிபதி. ஆலயங்கள், கோட்டங்கள், நகர நிர்மாணங்கள், மாட மாளிகைகள் எல்லாம் இவன் துணை இருந்தாலே, சிறப்பாக உருவாகி விடும். ஆகையால், நன்றியைக் காட்டும் விதமாக ஒரு எழில் மிகுந்த மணி மண்டபம் கட்டித் தருவதாக அர்ஜுனனிடம் கூறினான். ஆனால், அர்ஜூனன் மறுத்து விட்டான். ''உன்னைக் கொல்லாமல் விட்டதற்கான பயனை நான் பெறுவது என்பது ஒரு காரியத்தை எதிர்பார்த்துச் செய்ததற்கு சமமாகி விடும். அது எனக்கு இழுக்கைத் தரும். நீ எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். எப்போதும் என்பால் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தால் போதும்,'' என்று கூறி விட்டான்.ஆனால், மயன் கேட்பதாக இல்லை. கிருஷ்ணனிடம் தன் பிரார்த்தனையைத் தொடர்ந்தான். ''பிரபோ! தாங்கள் தான் அர்ஜூனனைச் சமாதானம் செய்து என் வேண்டுகோளை ஏற்கச் சொல்ல வேண்டும்,'' என்றான். கிருஷ்ணனோ மயனைப் பார்த்து, ''நீஅர்ஜூனனுக்குக் காட்ட விரும்பிய நன்றியைத் தர்மபுத்திரருக்கு காட்டு. இரண்டும் ஒன்று தான். இதுவரை நீ செய்த சபைகளிலேயே இது போல ஒரு சபை இல்லை என்று காண்போர் வியந்து பாராட்ட வேண்டும். அதை உருவாக்கிக் கொடு. அதுவே என் வேண்டுகோள்,'' என்றான் கிருஷ்ணன். மயனும் மகிழ்வோடு சபை அமைக்கத் தயாரானான். அர்ஜூனனின் வனவாசம் முடிந்து காண்டவ பிரஸ்தம் என்னும் தங்கள் நாட்டை அடைந்தான். வனப் பிரவேசத்தில் நேரிட்ட அனுபவங்களை தங்கள் சகோதரர்களிடம் பகிர்ந்து கொண்டான். கிருஷ்ணனின் கட்டளைக்கு ஏற்ப மயனால் ஒரு சபை உருவாகப் போவதையும் குறிப்பிட்டான். பாண்டவர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்திட, மயனும் பணியைத் தொடங்கினான். இந்த தருணத்தில் தான் மயன், பீமனுக்கு வலிமை மிகுந்த கதாயுதத்தையும், அர்ஜூனனுக்கு மகா சங்கு ஒன்றையும் பரிசாகத் தர நேர்ந்தது. கைலாச கிரிக்கு வடக்கே மைந்நாக பர்வதத்தை சேர்ந்த 'பிந்து சரஸ்' என்னும் பொய்கை அருகில் அழகிய சபை ஒன்று முன்பு உருவாக்கப்பட்டிருந்தது. ராமபிரானின் மூதாதையர்களில் ஒருவரான 'மாந்தாதா' என்னும் அரசன், அந்த சபையில் உக்ரமான கதாயுதம் ஒன்றையும், வருணனால் பயன்படுத்தப்பட மகாசங்கு ஒன்றையும் வைத்திருந்தான். அந்த கதாயுதம் ஆயிரம் கதாயுதங்களின் வலிமை உடையது. அந்த மகாசங்கு முழங்கினால் அது முழங்குமிடத்தில் வெற்றி நிச்சயம். இதையறிந்த மயன், பிந்து சரசிற்கு வந்து, அந்த கதாயுதத்தையும், மகா சங்கினையும் எடுத்துக் கொண்டதோடு, அங்கே நிர்மாணிக்கப்பட்டிருந்த சபையை அப்படியே பெயர்த்து எடுத்து வந்து காண்டவப் பிரஸ்தத்தில் நிறுவி, அதைத் தன் வலிமையால் கிருஷ்ணன் கூறியது போல சிறப்புக்கெல்லாம் சிறப்பு கொண்டது போல ஆக்கி கட்டி முடித்தான். பின் அதை தர்மர் வசம் ஒப்படைத்த போது, பீமனிடம் மாந்தாதாவின் கதாயுதத்தையும், அர்ஜூனனிடம் வெற்றிச் சங்கையும் ஒப்படைத்தான். - தொடரும் இந்திரா சவுந்தர்ராஜன்