உள்ளூர் செய்திகள்

லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்!

லட்சுமி கடாட்சம் பெறவே பலரும் அன்றாடம் பூஜை செய்கின்றனர். அதற்குரிய முறைகளைச் சொன்ன காஞ்சிப்பெரியவர், ஒரு பக்தர் தன் வீட்டில் சாஸ்திரிகள் மூலம் லட்சுமி பூஜை நடத்திய விவரத்தை கூற தொடங்கினார். பூஜை நடத்த வேண்டும்; ஆனால் செலவு ஏதும் செய்யக் கூடாது என்பது அவரது எண்ணம். லட்சுமி தாயாருக்கு உபசாரம் செய்ய வேண்டும் இல்லையா? புஷ்பம், சந்தனம், குங்குமம், தீபம், துாபம், நைவேத்தியம், வெற்றிலை, பாக்கு என எந்தப் பொருளும் வாங்கவில்லை. இருப்பதைக் கொண்டு பூஜை நடத்த முடிவு செய்தார் சாஸ்திரிகள். இல்லாத பொருளுக்கு பதிலாக 'அட்சதாம் சமர்ப்பயாமி' என சொல்லியபடி பூஜை செய்யலாம் என்ற அடிப்படையில், சந்தனம் இல்லையா.... சந்தனத்திற்கு பதிலாக அட்சதாம் சமர்ப்பயாமி, துாபம் இல்லையா, துாபத்திற்கு பதிலாக அட்சதாம் சமர்ப்பயாமி என பூஜை நடந்து கொண்டிருந்தது. சாஸ்திரிகளுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும் அல்லவா... அதற்கும் பக்தரின் மனம் இடம் தராததால் சற்று யோசித்தார். அதற்கான உத்தியை சாஸ்திரிகள் மூலம் தெரிந்து கொண்டு விட்டாரே? எது இல்லாவிட்டாலும் அதற்கு 'அட்சதாம் சமர்ப்பயாமி' சொல்ல வேண்டும்... அவ்வளவு தானே! சிறிது அட்சதையைத் தட்டில் வைத்து சாஸ்திரிகளிடம் கொடுத்து,'தட்சணார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி' என்றார் பக்தர். இதைக் கேட்ட அனைவரிடமும் சிரிப்பு எழுந்தது.எளிமையான எருக்கம்பூவைக் கூட, அன்புடன் கொடுத்தால் பகவான் ஏற்றுக் கொள்வான். வழிபாட்டின் போது, மனசையும் விருப்பமுடன் அர்ப்பணிக்க வேண்டும். எளிய வழிபாட்டையும் ஏற்று, செல்வத்தை வாரி வழங்குபவள் மகாலட்சுமி. ஆதிசங்கரர் பாடிய 'கனகதாரா ஸ்தோத்திரம்' கேட்டுப் பொன்மாரி பொழியச் செய்தவள் அவள். மாலையில் வீட்டில் விளக்கேற்றியதும் இந்த ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டால், லட்சுமி கடாட்சம் நிலைக்கும் என விளக்கம் தந்த பெரியவர் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.