முன்னோரை நினையுங்க
ரகுவிடம் நாளைக்கு ஆடிட்டிங் செய்ய ஆபிஸர் வாராங்க. உன் லீவை மறுநாள் எடுத்துக்க கூடாதா எனக் கேட்டார் மேலாளர். கண்டிப்பா லீவு வேணும் சார் என்றான். அலுவலக வேலையை விட அப்படி என்ன முக்கியம் எனக் கேட்டார். எங்க அப்பாவிற்கு திவச நாள் பக்கத்தில் இருக்கிற திருபுவனத்திற்கு போவேன் சார் என்றான். ஓ அதுவா புரோகிதரிடம் போய் புரியாத மந்திரங்களைச் சொல்லி பிண்டம் வைத்து முன்னோருக்கு திதி கொடுப்பீங்க. பிறகு வீட்டில் படையலிட்டு எல்லோரும் வழிபடுவீங்களே அது தானே. அது எப்படி அவங்க சாப்பிடுவாங்கனு உங்களுக்கு தெரியும் என குதர்க்கமாக கேட்டார் மேலாளர். அவரவர் நம்பிக்கை தான் சார் அது என்றான். எனக்கு புரிகிற மாதிரி சொல்லு என்றார் மேலாளர். கோல்கட்டாவிலுள்ள தலைமையகத்திற்கு ஒரு செய்தியை பேக்ஸ், இமெயில் மூலம் அனுப்பினால் அது எப்படி மறு நிமிடமே போய் சேருகிறதோ அது போலத்தான். இந்த திதி கொடுக்கும் நிகழ்ச்சி என்றான் ரகு. எனக்கு புரிஞ்சிருச்சு என சிறு புன்னகையுடன் தலையசைத்த மேலாளர், சரி மதியத்திற்கு மேலாவது வரலாமா என அன்பாக கேட்டார். கோபித்து கொள்ளாதீர்கள் அதுவும் முடியாது என்றான். என்ன சொல்ல வருகிறாய் என அவனைப்பார்த்து நேருக்கு நேராக கேட்டார். அப்பா நினைவாக அனாதை இல்லத்திலுள்ளவர்களுக்கு மதிய சாப்பாடு வழங்குவதாக வாக்கு கொடுத்து இருக்கேன் சார் என்றான். தொண்டுள்ளம் கொண்ட துறவிகள், யாருமற்ற அனாதைகளாக வாழும் முதியவர்கள், இவர்களுக்கான அன்றாட தேவைகள், நம் முன்னோர்களுக்கான திதி இந்த மூன்று கடமைகளையும் சரிவர செய்யனும் என்றான் ரகு. உனக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதையெல்லாம் சரியா செய்யமுடியுமா என யதார்த்தமாக கேட்டார் மேலாளர். வாங்கும் சம்பளத்தில் நடப்பு வாழ்க்கை, எதிர்கால சேமிப்பு, குடும்பத்தினரின் தேவை, தொண்டு செய்ய என பணத்தை நான்காக பிரித்து விடுவேன் சார் என்றான் ரகு. நீ பெரிய ஆளுதான் என அவனைப்பார்த்து அவர் சொல்லும் போது அவரது அலைபேசி ஒலித்தது. மறு முனையில் இருந்து நாளைக்கு வரேன்னு சொன்ன ஆடிட்டர் அவங்க முன்னோருக்கு திதி கொடுக்க காசி போகிறார். அதனால் நாளைய நிகழ்ச்சி கேன்சல் ஆகிவிட்டது என அவரது பி.ஏ., சொல்லி அழைப்பை துண்டித்தார். நாளைக்கு அப்படி என்ன விசேஷம் என கேட்க, முன்னோர்களுக்கு உகந்த நாளான ஆடி அமாவாசை என சொன்னான் ரகு. என் பெற்றோர்களுக்கு நானும் திதி கொடுத்து பல வருடம் ஆகி விட்டது. உன்னுடன் திருபுவனம் வருகிறேன் என சொன்னார் மேலாளர்.