சரணம் ஐயப்பா - 7
UPDATED : ஜன 07, 2022 | ADDED : ஜன 07, 2022
பூர்ண புஷ்கலா'புஷ்கலா..' எவ்வளவு அழகான பெயர். இந்தப் பெயருக்கு ஏராளமான நற்குணங்களை உடையவள், உத்தமமானவள்' என்று பொருள் சொல்வர். திருமணமாகப் போகும் ஒரு பெண்ணுக்கு ஐந்து வகை குணங்கள் இருக்க வேண்டும். அவை அழகு, அறிவு, பொறுமை, இரக்கம், தர்ம சிந்தனை ஆகியவை. இவற்றை 'கல்யாண குணங்கள்' என்பர். திருமணத்தின் முந்தையப் பெயர் கல்யாணம். கல்யாணம் என்பது ஒரு வகை விரதம். மணமகளாகப் போகிறவர்கள் இந்தக் கல்யாண குணங்களெல்லாம் தனக்கு கைகூட வேண்டுமென பார்வதிதேவியை வேண்டி அனுஷ்டிக்கும் விரதமே கல்யாணம்.அத்தகைய விரதத்தை மேற்கொண்டு நற்குணங்களைப் பெற்றவள் புஷ்கலா. அதன் காரணமாக தன் முன் வீரமே வடிவாக நிற்கும் தர்மசாஸ்தாவுக்கு மனைவியாகப் போகிறாள். தந்தையின் கட்டளையை ஏற்று சாஸ்தாவின் பாதம் பணிந்தாள் புஷ்கலா.சாஸ்தாவிடம்,“ஐயனே! எனக்கு வாழ்க்கை ஞானத்தைப் போதித்த தாங்களே மருமகனாக வேண்டும் என ஆசைப்படுகிறேன். என் மகள் புஷ்கலாவை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் பூபாலன்.சாஸ்தாவும் அந்த வேண்டுகோளை ஏற்றார். சாஸ்தா- புஷ்கலா திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அவர்கள் கைலாயம் சென்றனர். தன் பக்தையை காக்கச் சென்ற மகன், மருமகளுடன் திரும்பியது சிவபார்வதிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கைலாயத்தில் அந்த தம்பதிகள் சுகமாக வாழ்ந்தனர்.இது இவ்வாறிருக்க, மலைநாட்டில் இன்றைய கொச்சியை தலைநகராகக் கொண்டு பிஞ்ஜகன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். வேட்டையாடுவதில் இவனுக்கு அலாதி ஈடுபாடு. ஒருமுறை காவலர்கள் புடைசூழ காட்டுக்குச் சென்றான். வேட்டை மும்முரத்தில் காவலர்கள் பின்னால் வருகிறார்களா எனக்கூட கவனிக்காமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டான். பின்னால் திரும்பிப் பார்த்த போது அவன் தனிமையில் இருப்பது புரிந்தது. அப்போது அங்கிருந்த பூதங்கள் அவனை விரட்ட ஆரம்பித்தன. பூதங்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் சாஸ்தா வழிபாடு உகந்தது என்பதை மன்னன் அறிந்திருந்தான்.பயத்தில் இருந்த அவன்,“தர்மசாஸ்தாவே சரணம்” என ஓலமிட்டான். அந்த அவலக்குரல் சாஸ்தாவின் காதுகளில் விழுந்தது. தன் பக்தன் ஒருவன் இக்கட்டில் இருக்கிறான் என்பதை உணர்ந்த சாஸ்தா, சப்தம் கேட்ட இடத்தில் தோன்றினார். பஞ்சபூதங்களின் நாயகனான அவரைக் கண்டதும் பூதங்கள் அவரை வணங்கி அங்கிருந்து அகன்றன. பூதங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்த சாஸ்தாவை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் பிஞ்ஜகன். “ஐயனே! என்னை பூதங்களிடமிருந்து பாதுகாத்தீர்கள். அதற்கு நன்றிக்கடன் செய்வது எனது கடமை. நீங்கள் வீரத்தில் சிறந்தவர். ஒரு வீரத்திருமகனை திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது மகள் பூர்ணாவின் லட்சியம். அவளுக்கேற்ற மணமகனாக தாங்கள் இருப்பீர்கள் எனக் கருதுகிறேன். எனவே அவளைத் தாங்கள் திருமணம் செய்து அருள்புரிய வேண்டும்” என்றான்.சாஸ்தாவும் அந்த வேண்டுகோளை ஏற்றார். சாஸ்தா - பூர்ணா திருமணம் இனிதே நடந்தது. பூர்ணாவுடன் கைலாசம் சென்றார் சாஸ்தா. பெண்கள் எதை விட்டுக் கொடுத்தாலும் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தன் கணவன் புதிதாக ஒருத்தியைத் திருமணம் செய்ததில் புஷ்கலாவுக்கு விருப்பமில்லை. தன் தந்தை பூபாலனுக்கு தகவல் தெரிவித்து விட்டாள். அவன் அடைந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. ஆனால் அந்த ஆத்திரம் தான் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மகிஷியை அழிக்க காரணமாகப் போகிறது என்பதை பூபாலன் உணர்ந்திருக்கவில்லை.அவன் கைலாயத்துக்கு வந்தான். மருமகன் சாஸ்தாவை நோக்கி,“ நீ இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் என் மகளுக்கு துரோகம் செய்து விட்டாய். பெற்ற வயிறு எரிகிறது. இந்த வயிற்றெரிச்சலுடன் உனக்கு ஒரு சாபத்தை அளிக்கிறேன். நீ இனி தெய்வப்பிறவி என்ற அந்தஸ்தை இழந்து விடுவாய். பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாய். அங்கே உனக்கு திருமணமே நடக்காது. பிரம்மச்சாரியாகவே கடைசி வரை வாழ்வாய்” என சாபமிட்டான்.சாஸ்தா கோபம் கொள்ளவில்லை. மாமனாரின் கோபம் நியாயமானது என்பதை அவர் அறிவார். அவர் பூபாலனிடம்,“அரசே! தங்கள் சாபத்தை ஏற்கிறேன். நான் பூலோகத்தில் பிறப்பதற்கு முன்பாக நீங்கள் பூலோகத்தில் பிறப்பீர்கள். நான் பூலோகம் வந்ததும் என் வளர்ப்புத்தந்தையாக இருந்து பாசத்தை பொழிவீர்கள்” என்றார்.சாஸ்தாவின் வாக்குப்படி பூபாலன் பூலோகத்தில் பிறந்தான். அவனுக்கு ராஜசேகரன் என பெயரிடப்பட்டது. பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட குறுநில மன்னனாக இருந்தான். பந்தளம் அவனது தலைநகராக இருந்தது. இந்த வேளையில் கைலாயத்தில் பரமசிவன் சாஸ்தாவை அழைத்தார்.“மகனே! நீ பூலோகம் செல்லும் காலம் நெருங்கி விட்டது. மகிஷியை வதம் செய்ய வேண்டுமானால் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மானிடர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது விதி. ராஜசேகர மன்னனின் குடும்பத்துக்கு சேவை செய். 12 வயதானதும் ஜோதியாகி என்னுடன் கலப்பாய். ஆயினும் பூலோக மக்கள் உனது கருணையைப் பாராட்டி பல கோயில்கள் அமைப்பர். கலியுகம் முடியும் வரை அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி கொடு” என்றார். சாஸ்தாவும் தந்தையின் உத்தரவை மகிழ்ச்சியுடன் ஏற்றார்.பூலோகத்தில் பிறந்த ராஜசேகரன் தன் பட்டத்தரசியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. பிள்ளை இல்லை என்ற வருத்தம் அவர்களை வாட்டியது. இந்த சமயத்தில் பந்தளம் காட்டிற்கு வந்து ஒரு குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு அழுதபடியே படுத்திருந்தார். அப்போது ராஜசேகர மன்னன் அவ்வழியே வந்தான். குழந்தை இல்லாத அவனது காதில் குழந்தையின் அழுகை ஒலி கூட மதுரமாய் விழ அங்கே ஓடினான். கழுத்தில் மணி கட்டிய நிலையில் ஒரு குழந்தை படுத்திருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை.குழந்தை இல்லாத தனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்து குழந்தையை அரண்மனைக்கு துாக்கி வந்தான். அவனது மனைவிக்கு அதை விட ஆனந்தம். அந்த மகிழ்ச்சி அவளுக்கு மயக்கத்தை வரவழைத்தது. அரண்மனை வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் அரசியை சோதித்துப் பார்த்து விட்டு,“மகாராஜா! இந்த குழந்தை வந்த வேளை மிக நல்ல வேளை. ராணியார் கர்ப்பமாக இருக்கிறார்” என்றார்.ராஜசேகரனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தன் இல்லம் தேடி வந்து அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கிய அந்தக் குழந்தையை உச்சி மோந்தான். ராணியும் குழந்தை மீது பாசத்தை செலுத்தினாள். கண்டத்தில் (கழுத்து) மணியுடன் கிடைத்த அந்தக் குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயர் சூட்டினர். அவன் மாபெரும் வீரனாக வளர்ந்தான். பத்துமாதங்கள் கழித்து, ராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.--தொடரும்தி.செல்லப்பாthichellappa@yahoo.com