பேசும் தெய்வம் (10)
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், சிவசங்கரன் பிள்ளை, மரகதம் தம்பதியினர் வாழ்ந்தனர். தங்களின் குழந்தைக்கு 'நமச்சிவாயம்' எனப் பெயர் சூட்டினர். நமச்சிவாயத்திற்கு நான்கு வயதாகும் போது, பாபநாசம் உலகம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். குழந்தையை கீழே இறக்கி விட்ட சிவசங்கரன், கைகளை தலைக்கு மேல் கூப்பினார். மரகதமும் தன்னை மறந்து வணங்கினாள். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் குழந்தையை காணவில்லை. மரகதத்தின் அழுகை அதிகமாகியது. ''அழாதே! அம்மன் கிட்ட முறையிடலாம் வா!'' என்று மனைவியின் கையைப் பிடித்து வேகமாக நடந்தார். அம்மன் சன்னதியில் முறையிட்டார். சில விநாடி கூட ஆக வில்லை. ''இதோ! எங்க அம்மா! அப்பா! அம்மா...ஆ...!'' என்று கூவியபடி, வந்தான் குழந்தை நமச்சிவாயம். ''எங்கடாப்பா இருந்த?'' என்று சிவசங்கரனின் நா தழுதழுத்தது. '' ஒங்கள காணாம பயந்தே போயிட்டேன். அப்ப, ஒரு அம்மா தான் என்னத் துாக்கி வந்து இங்க விட்டா... இதோ! இந்த அம்மா தான்'' என்று அம்மனை காட்டினான். உலகம்மனின் அருளை பெற்ற நமச் சிவாயத்தை உச்சி முகர்ந்தனர் பெற்றோர். ''அம்பாள் காப்பாற்றிய குழந்தை இது'' என்று சொல்லிச் சொல்லி வளர்த்தனர். மாதம் தோறும் பாபநாசம் வந்து உலகம்மனை தரிசிப்பதை வழக்கமாக்கி கொண்டனர். திண்ணைப்பள்ளியில் படித்த நமச்சிவாயம், சிறந்த தமிழ்ப்புலவர் ஆனார். அவருக்கு மணம் முடித்தனர். புலவரின் முப்பதாவது வயதில் பெற்றோர் மறைந்தனர். அவர்களுக்குரிய இறுதி கடமைகளை முடித்த புலவர், சற்று மனம் தேறினார். உலகம்மனை கோயிலுக்கு அருகில் இருந்து தினமும் வழிபட எண்ணினார். எண்ணம் விரைவில் செயலானது; செங்கோட்டையில் இருந்த வீட்டை நுாறு ரூபாய்க்கும், ஒரு ஏக்கர் நன்செய் நிலத்தை நுாற்றைம்பது ரூபாய்க்கும் விற்றார்.இருநுாற்றைம்பது ரூபாயுடன் பாபநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் புறப்பட்டார். இருநுாறு ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி மனைவியுடன் குடியேறினார். தினமும் அம்மனை தரிசிப்பதும், துதிப்பதுமாக, நாட்கள் நகர்ந்தன. மீதியிருந்த ஐம்பது ரூபாய், எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும்! குறுநில மன்னர் ஒருவரின் ஆதரவால் புலவரின் குடும்பம் நடந்தது. மன்னர் அளித்த பணமும் தீரும் நேரம் நெருங்க, புலவரின் வறுமையை விரட்ட தயாரானாள் உலகம்மை.விக்கிரமசிங்கபுரம் அருகில் வாழ்ந்த நிலக்கிழார் ஒருவர், பெற்றோர், சகோதரனை இழந்து வாடினார். அவரது தாய் வடிவில் கனவில் தோன்றிய அம்மன் , ''மகனே...விக்கிரம சிங்கபுரத்தில் ஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவாயம் என்னும் கொண்ட பக்தர் இருக்கிறார். நம்முடைய நுாறு வேலி (617ஏக்கர்) நிலத்தில், பத்து ஏக்கரை அவருக்கு தானம் செய்'' என்றாள். பின் அவரது தந்தை வடிவில் தோன்றி, ''மகனே! விக்கிரம சிங்கப்புலவருக்கு உதவி செய்தால் இருபத்தொரு தலைமுறைக்கும் நன்மை விளையும்'' என்று கூறி மறைந்தாள்.கனவு கலைந்த நிலக்கிழாருக்கு வியப்பு தாங்கவில்லை. கடிகாரத்தைப் பார்த்தார், பொழுது விடிய இரண்டு மணி நேரம் இருந்தது. மறுபடியும் துாங்கினார். நிலக்கிழாரின் சகோதரர் வடிவில் தோன்றி, ''தம்பி! நமசிவாயப் புலவருக்குச் செய்யும் தானம், எனக்கு நன்மை தருவதோடு, உன் குடும்பத்தையும் வாழ வைக்கும்'' என்றார். விடிந்ததும் நமசிவாயப் புலவரை தேடிப் புறப்பட்டார். அவரை துாரத்தில் நின்றபடி பார்த்து விட்டு வீடு திரும்பினார்.அப்புறம் என்ன...இரண்டே நாளில் புலவர் பேரில் பத்து ஏக்கர் நன்செய் நிலம் பதிவு செய்ததோடு, 'ஆண்டுக்கு ஐம்பது வண்டி நெல்லும், மூவாயிரம் வெள்ளிக்காசுகளும் அனுப்பப்படும்' என்ற ஒப்புதல் பத்திரமும் அளித்தார். அன்று மாலையே ஐம்பது மூடை அரிசியும், மூவாயிரம் வெள்ளிக்காசுகளும் புலவரின் இல்லம் வந்து சேர்ந்தன. விஷயம் அறிந்த புலவர் மெய் சிலிர்த்துப் போனார், ''அம்மா! உலகம்மையே! அடியேன் மீது உனக்கு இவ்வளவு கருணையா...? என்னே நான் செய்த பாக்கியம்!'' என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பெற்றோர் செய்த புண்ணியம் பிள்ளைகளை தொடரும். தெய்வம் ஒருநாளும் அருள்புரிய மறக்காது; மறுக்காது என்பதை இந்த வரலாறு விளக்குகிறது. தொடரும்அலைபேசி: 97109 09069பி.என். பரசுராமன்