உள்ளூர் செய்திகள்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 29

சலனத்தில் ஆழ்ந்த சகாதேவன் துர்வாசர் வரப்போகிறார் என்று சொன்ன சீடன் தங்களின் எண்ணிக்கை ஐந்தாயிரம் என்றோ, துர்வாசரோடு நாங்கள் வருவது விருந்துண்பதற்காக என்றோ கூறவில்லை. இந்நிலையில் காலைக் கடன்களை முடித்து விட்டு அருவியிலும் நீராடி முடித்து மங்களகரமாக குடிலுக்குள் நுழைந்த பாண்டவர்களிடம் திரவுபதியும் துர்வாசர் வரப் போகிற விஷயத்தை மகிழ்வோடு சொன்னாள். அதைக் கேட்ட தர்மனின் முகம் மிக மலர்ந்தது. அர்ஜூனனும் கூட மகிழ்ந்தான். ஆனால் சகாதேவன் மட்டும் தன் முகத்தில் சற்று சலனத்தை எதிரொலித்தான். அதைக் கவனித்த நகுலன், ''சகோதரா எதனால் இந்த சலனம்?'' என்று கேட்டான். ''வரும் வழியில் நிறைய துர்சகுனங்களை உணர்ந்தேன். ஒரு பசுவின் மீது மரம் முறிந்து விழுந்ததால் இறந்து போயிருந்தது. குளம் ஒன்றில் குரங்கு ஒன்று விழுந்து தத்தளித்தது. அதைக் காப்பாற்ற இறங்கிய எனக்கும் காயம் ஏற்பட்டது. வரும் வழியில் எப்போதும் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் இந்த முறை பூக்கவில்லை. இப்படி கண்களில் பட்ட சகலமும் எதிர்மறையாக இருந்தது. அதனாலேயே இந்த சலனம்...''போகட்டும் அதற்கும் துர்வாசர் வருகைக்கும் என்ன தொடர்பு'''' ரிஷிகளில் துர்வாசர் மிகுந்த கோபக்காரர். அந்த கோபம் காரணமாக அவர் அந்த பரந்தாமனாகிய மகாவிஷ்ணுவை அவருக்கான வைகுண்டத்திலேயே சபித்தவர்''''அப்படியானால் அவரது கோபத்தை உத்தேசித்து தான் நீ அச்சப்படுகிறாயா''அர்ஜூனன் கேட்டான்.''ஏன் அவர் வருகை குறித்து உங்களிடம் எந்த சலனமும் இல்லையா'' திருப்பிக் கேட்டான் சகாதேவன். ''சகாதேவா... நாம் எச்சரிக்கையோடும், குருபக்தியோடும் வரவேற்போம். பாத பூஜை செய்வோம்'' தர்மன் தீர்மானமாக கூறினான்.''நாம் எல்லோரிடமும் அப்படித்தானே அண்ணா நடந்து கொள்கிறோம். அதனால் அது குறித்தெல்லாம் நான் ஏதும் எண்ணவில்லை. துர்சகுனங்கள் தான் ஏதோ ஒரு சோதனை வரப் போவதாக எனக்கு உணர்த்துகிறது'' சகாதேவன் குறிப்பிட்டான்.''அண்ணா... சகாதேவன் காலஞானி! அவன் கூறினால் சரியாகத் தான் இருக்கும். நாம் அவன் கூறியதை வைத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்றான் பீமன்.''பிரச்னைகள் புதிதில்லை. வனத்தில் வாழ்வது என்பதே ஒரு கொடிய விஷயம் தானே. ஒருபக்கம் சிங்கம், புலி. மறுபக்கம் உயிரோடு கிடைத்த விலங்குகளை எல்லாம் உண்ணும் மலைப்பாம்புகள். புதைகுழிகள், விஷச் செடிகள் என்று இந்த வனம் எல்லாவித ஆபத்துகளையும் கொண்ட ஒன்று தானே...இப்படிப்பட்ட ஆபத்துகளில் சிக்கி நாம் அழிந்து போக வேண்டும் என்று தானே துரியோதனனும் நம்மை வனவாசம் போகப் பணித்தான். இவற்றுக்கு நடுவில் நாம் இதுவரை வெற்றிகரமாக வாழ்ந்து வரவில்லையா... இதைவிடவா ஒரு பெரிய ஆபத்து நமக்கு வந்து விடப்போகிறது'' தர்மன் இதமான குரலில் கேட்டான்.''அப்படியே வந்தால் தான் என்ன... அதை நாம் சந்தித்து தானே தீர வேண்டும். சந்திப்போம்'' என்ற அர்ஜூனன் தன் வில்லை எடுத்து அதன் நாணினை இழுத்து விட அது அதிர்ந்து துடித்தது. திரவுபதி மவுனமாயிருந்தாள். எல்லோரும் பேசி முடிக்கவும், ''விவாதித்தது போதும். சாப்பிட வாருங்கள். உச்சிவேளை நெருங்குகிறது'' என்றாள். ''திரவுபதி நீ எதுவுமே சொல்லவில்லையே. சாப்பிட அழைக்கிறாயே'' கேட்டான் பீமன். ''சொல்ல என்ன இருக்கிறது. மூத்தவர் கூறியது போல சோதனைகள் நமக்கு புதியவை இல்லை. சந்தித்துத் தானே தீர வேண்டும்? ராஜசபையில் நான் துகில் உரியப்பட்டதை விடவா ஒரு பெரும் சோதனை வந்து விடப் போகிறது. அப்போது காப்பாற்றிய கண்ணன் என்றும் துணையாக இருக்கும் போது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை. சாப்பிட வாருங்கள்'' என்றாள்.அவர்களும் சாப்பிட அமர்ந்தனர். மாக்கோலமிட்ட பலகை மீது வாழை இலையிட்டு உணவு பரிமாற திரவுபதி தயாரானாள். அவர்களுக்காக சூரியன் வழங்கிய அட்சய பாத்திரமும் தயாராக இருந்தது. அந்த குடிலின் வடகிழக்கு மூலையில் மரப்பெட்டிக்குள் இருந்த அட்சய பாத்திரத்தை சூரியனை வணங்கி எடுத்தாள். ஒரு பொன்வட்டிலாய் அவள் கைகளில் மின்னியது. முதில் முக்கனிகள், தேன் வர பிரார்த்தித்தாள். அதன்பின் நெய், அன்னம், கீரையமுது, அப்பம், வடை, பனியாரம், சீயம், பச்சடி, துவையல் என சகலமும் பிரார்த்திக்க வந்தன. இறுதியாக பால் பாயாசம். அட்சய பாத்திரமே அதிரும் அளவுக்கு பீமன் புசித்து மகிழ்ந்தான். மற்றவர்கள் அளவாக உண்டனர். எல்லோரும் திருப்தியாக எழுந்த நிலையில் திரவுபதி தனக்கான உணவை அந்த ஐவரின் இலைகளிலும் தருவித்து அவர்கள் எச்சிலை தனக்கான அமுதமாய் கருதி உண்ணத் தயாரானாள். அதற்கு முன் அட்சய பாத்திரத்தை கழுவி மீண்டும் மரப்பெட்டிக்குள் வைத்து விட்டு தானும் உண்ணத் தொடங்கினாள்.ஒருவழியாக அன்றைய பகல் உணவு முடிந்தது. இனி மறுநாள் தான் முழுமையான உணவு. மாலையில் பழங்கள், பால் மட்டுமே உணவு. அட்சய பாத்திரமும் ஒரு பகல் பொழுதுக்கு ஒரு முறையே கேட்டதை எல்லாம் தரும். அதன்பின் அதை கவிழ்த்து வைத்து விட வேண்டும். சூரியன் அப்படி ஒரு நிபந்தனையுடன் தான் தர்மனிடம் அந்த பாத்திரத்தை வழங்கியிருந்தான். ஒருநாளில் ஒருமுறைக்கு மேல் அதை பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். எனவே திரவுபதியும் அதற்கேற்ப அதை பயன்படுத்தி வந்தாள். அன்றைய பயன்பாடு முடிந்த நிலையில் குடிலுக்கு வெளியே பாண்டவர் ஐவரும் வட்டமாக அமர்ந்து தாம்பூலம் தரிக்கத் தொடங்கினர். அப்போதும் சகாதேவன் சலனத்தோடு தான் இருந்தான்.''என்ன சகாதேவா துர்வாசர் குறித்த கவலை இன்னமும் தீரவில்லையா'' கேட்டான் பீமன்.''ஆம் அண்ணா... எப்போது வருவார் என அந்த சீடன் கூறாமல் சென்று விட்டான். அவர் வரும் போது நாம் எல்லோரும் இருக்க வேண்டும். ஒருவர் இல்லாவிட்டால் கூட அவர் கோபப்படக் கூடும்.அடுத்து அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்க வேண்டும். மலர் மாலை சூட்ட வேண்டும். அமர்ந்திட ஏற்ற ஆசனத்தை அளித்தாக வேண்டும். பாலும் பழமும் தயாராக இருக்க வேண்டும்''''சகாதேவா... நாம் அரண்மனை வாசிகள் அல்ல. குடிசையில் வாழும் பரதேசிகள். அப்படிப்பட்ட நம்மால் ராஜ வரவேற்பை அளிக்க முடியாது என அவருக்கும் தெரியும். இதோ இந்த வன்னி மரத்தின் அடிப்பீடமே அவர் அமர்ந்திட ஏற்ற ஆசனம். காட்டுப் பூக்களே அவர் மீது துாவிட நமக்கு உகந்தது. அவர் ஞானம் மிக்கவர். நம்மிடம் உள்ளார்ந்த பணிவையும், பக்தியையும் மட்டுமே அவர் எதிர்பார்ப்பார். நம்மிடம் அதற்குத்தான் ஒரு குறைவுமில்லையே'' தர்மன் அவ்வாறு கூறிய போது யாரோ நான்கு பேர் சற்றே மூச்சிறைக்க அவர்ளின் முன்பு வந்து வணங்கினர்.''நீங்கள்''''நாங்கள் துர்வாச மகரிஷியின் சீடர்கள்''''ஓ... மகரிஷி வந்து விட்டாரா''''வந்த படியே உள்ளார். உங்களிடம் சில செய்திகளைக் கூறவே வந்துள்ளோம். நாங்கள் மொத்தம் ஐந்தாயிரம் பேர். எங்கள் அவ்வளவு பேருக்கும் உணவளிக்க வேண்டுகிறோம். தங்களிடம் அட்சய பாத்திரம் இருப்பதால் அதன் உணவு மகாபிரசாதம் அல்லவா... துர்வாசரும் அட்சய பாத்திர உணவை உண்டு மகிழ சித்தம் கொண்டுள்ளார். அதற்காக இந்த வனத்தில் சாப்பிடும் கூடம் அமைக்க வேண்டும் அல்லவா... அதைக் கூட அட்சய பாத்திரம் வழங்கி விடுமாமே...''சீடர்களில் ஒருவர் சொல்லச் சொல்ல திரவுபதிக்கு மயக்கம் வராத குறை. சகாதேவனும் தான் அச்சப்பட்டது போல சோதனை ஏற்பட்டு விட்டதை எண்ணி தன் சகோதரர்களைப் பார்த்தான். -தொடரும்இந்திரா செளந்தர்ராஜன்