உள்ளூர் செய்திகள்

செல்வ வளம் தரும் வடக்கு நோக்கிய சிவன் கோவில்

தமிழகத்திலுள்ள சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கி இருப்பது மரபு. மேற்கு நோக்கியும் சில சிவன் கோவில்கள் உள்ளன. ஆனால் வடக்கு நோக்கிய நிலையில் குளித்தலை கடம்பவனநாதர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு குபேர திசையைக் குறிக்கும். சிவராத்திரியன்று கடம்பவன நாதரை தரிசித்தால் செல்வவளம் பெருகும்.தல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தங்களை துன்புறுத்துவதாக அம்பிகையிடம் புகார் கூறினர். அம்பிகை துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்ற வரத்தால் துர்க்கையுடன் சம பலமுடன் மோதவே சப்த கன்னியராக உருவெடுத்து அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் வனத்திற்குள் ஓடி காத்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்தகன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர்.தூம்ரலோசனனே முனிவரைப் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதிய சப்தகன்னியர் அவரை அழித்து விட்டனர். இதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அறியாமல் செய்த இப்பாவம் தீர சிவனை வேண்டி தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்ததுடன் அசுரனையும் அழித்தார்.சப்த கன்னியர்: கோவில்களில் சப்த கன்னியர் தனி சன்னிதியில் இருப்பர். ஆனால் இங்கு கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் சாப விமோசனம் பெற்றவர்களாக வீற்றிருக்கின்றனர். சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சப்த கன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை துர்க்கையாக கருதி வழிபடுகின்றனர். எனவே இங்கு துர்க்கைக்கு தனி சன்னிதி கிடையாது. பெண்கள் ராகு நேரத்தில் சிவன் சன்னிதியிலேயே எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.தட்சிண காசி: பாவம் போக்குவதில் காசிக்கு நிகரான தலம் என்பதால் இது தட்சிண காசி (தெற்கிலுள்ள காசி) எனப்படுகிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி உள்ளது. கோவிலுக்கு எதிரே காவிரி ஓடுகிறது. சப்த கன்னியருக்கு சிவன் தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவர் காவிரியில் அம்பிகையுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப் பகுதியில் உள்ள ஏழு சிவன் கோவில்களில் இருந்தும் சப்பரம் பவனி வரும். ஐப்பசியில் துலா ஸ்நான விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஊரின் அருகே ரத்தினகிரி, ஈங்கோய் மலை சிவன் கோவில்கள் உள்ளன. 'காலையில் குளித்தலை கடம்பர், மதியம் ரத்தினகிரி சொக்கர் கோவில் (8 கி.மீ.,), மாலையில் ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் (5 கி.மீ.,) என்ற வரிசையில் வழிபட்டால் குறைவிலாத பலன் கிடைக்கும். அம்பாள் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கி இருக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் நான்கு கால அபிஷேகம் உண்டு. சல்யூட் அடிக்கும் கடவுள்: பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல் வைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து பாசிப் பருப்பு பாயசம் படைத்து வழிபட்டால் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டு நடராஜர்: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் ஆறுமுகத்துடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர் என்ற பொருளில் இவரைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இக்கோவிலில் இரண்டு நடராஜர் உள்ளனர். ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் உள்ளனர். இருப்பிடம்: கரூரில் இருந்து 35 கி.மீ.,திறக்கும் நேரம்: காலை 6.00-1.00 மணி, மாலை 5.00 - 9.00மணி.தொலைபேசி: 04323-225 228.