சிவகங்கையில் ஒரு திருப்பதி
சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். தென்திருப்பதியான இங்கு 2018 மார்ச் 26ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. தல வரலாறு: 400 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்தவர் சேவுகன் செட்டியார், இவர் அரியக்குடியில் இருந்து திருப்பதி யாத்திரை செல்வது வழக்கம். இப்பகுதி மக்கள் இவரிடம் காணிக்கை கொடுத்து அனுப்புவர். வயதான பிறகும், ஒருமுறை காணிக்கை மூடையை சுமந்தபடி, திருப்பதி மலையேறும் போது, தடுமாறி விழுந்தார். அப்போது காட்சியளித்த பெருமாள், ''தள்ளாத வயதில் மலையேற வேண்டாம். உனக்காக அரியக்குடியில் எழுந்தருள்வேன்,” என கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் தோன்றிய பெருமாள், ''அரியக்குடியின் கிழக்குப்பகுதியில் சுயம்புமூர்த்தியாக இருக்கிறேன். அங்கு கோயில் எழுப்பி வழிபடுவாயாக'' என உத்தரவிட்டார். அதன்படி அந்த இடத்தில் 120 அடி உயர ராஜகோபுரம், 80 அடி உயர குடவரைக் கோபுரம் என பிரம்மாண்ட கோயில் உருவானது. இங்கு அலர்மேல்மங்கை தாயாருடன் ஸ்ரீனிவாச பெருமாள் அருள்பாலிக்கிறார். தென்திருப்பதி: சேவுகன் செட்டியாரின் முயற்சியால், ராமானுஜர் வழிபட்ட பெருமாள் சிலை ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டது. திருப்பதியிலிருந்து சடாரி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியகிரீஸ்வர் கோயிலில் இருந்து அக்னி வரவழைக்கப்பட்ட பின்னர் திருப்பணி தொடங்கப்பட்டது. இத்தலம் 'தென்திருப்பதி' எனவும் அழைக்கப்படுகிறது.மூலை கருடன்: இங்கு கருடாழ்வார் இருபுறமும் சிங்கத்துடன் ஈசான்ய மூலையில் (வடகிழக்கில்) வீற்றிருக்கிறார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்கும். ஆடிசுவாதியன்று 'மகா சுவாதி' நடக்கும். இது தவிர சன்னதி கருடன் ஒன்றும் உள்ளது. நினைத்தது நிறைவேற சிதறு தேங்காய் உடைக்கின்றனர். கும்பாபிஷேகம்: 2018 மார்ச் 26ல் காலை 6:08 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், 04565 - 231 299, 89397 91779, 99415 57703 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எப்படி செல்வது * மதுரையில் இருந்து 80 கி.மீ.,* காரைக்குடி - ராமேஸ்வரம் சாலையில் 4 கி.மீ.,விசேஷ நாட்கள் : சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரமோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் நேரம் : காலை 7:30 - 12:30 மணி ; மாலை 4:30 - 8:30 மணி அருகிலுள்ள தலம்: 15 கி.மீ.,யில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில்