உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் குன்றம்

காஞ்சி மஹாபெரியவரின் வாக்குப்படி அமைந்த மலைக்கோயில் சென்னை குமரக்குன்றம். இங்குள்ள முருகனிடம் குறைகளை சொன்னால் தீர்த்து வைக்கிறார். வாங்க நாமும் செல்லுவோம். சத் - சிவபெருமான், சித் - பார்வதி, ஆனந்தம் - முருகன் இம்மூவரும் இணைந்திருக்கும் வடிவமாகிய சச்சிதானந்தத்தை சோமஸ்கந்த வடிவம் என்பர். சிவன் கோயில்களில் இவரே உற்ஸவமூர்த்தியாக இருக்கிறார். இதில் சுவாமி அம்பாள் நடுவே முருகன் குழந்தையாக காட்சி தருவார். சென்னையில் இருக்கும் திரிசூலம், திருநீர்மலை இரண்டிற்கும் நடுவே குமரக்குன்றம் இருப்பதால் இதனை சோமாஸ்கந்தமலை என அழைப்பர். குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் அருள் செய்வார் என்பது பார்வதியின் வாக்கு. இப்பகுதிக்கு வந்த காஞ்சி மஹாபெரியவர் இம்மலையைப் பார்த்து இது முருகன் கோயிலாக உருவாகும் என சொல்லி அங்கிருந்த பக்தர்களுக்கு ஆசி அளித்தார். அதன்படியே புதருக்குள் இருந்த வேல் ஒன்றை கண்டெடுத்து அதை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டன. கருவறையில் கையில் தண்டம் ஏந்தி காட்சி தரும் அவரை சுவாமிநாதன், ஐஸ்வரிய முருகன் என அழைக்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சிவபெருமான் வடக்கு நோக்கி அருள் செய்கிறார். சுவாமியின் திருநாமம் சுந்தரேஸ்வரர், அம்பாளின் திருநாமம் மீனாட்சி, இங்குள்ள நடராஜருக்கு ஆண்டிற்கு ஆறுமுறை சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகிறது. தனிச்சன்னதியில் இருக்கும் சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. தலவிருட்சம் அரசமரம், தீர்த்தம் குமாரதீர்த்தம். சித்திரை மாதப்பிறப்பில் இம்மலைபடிகளுக்கு வழிபாடு நடைபெறுகின்றன. மலை அடிவாரத்தில் இடும்பன், காளிக்கு தனித்தனியாக சன்னதி உள்ளன.எப்படி செல்வது: குரோம்பேட்டையில் இருந்து 2 கி.மீ.,விசஷே நாள்: வைகாசி விசாகம் ஆடி கார்த்திகை, தைப்பூசம் மாசிமகம், பங்குனி உத்திரம்நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 93805 10587அருகிலுள்ள தலம்: பல்லாவரம் திருநீலகண்டர் சிவன் கோயில் 5 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 97828 96855