உள்ளூர் செய்திகள்

கன்னடத்து குலதெய்வம்

சிவன் பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்த தலம் நஞ்சன்கூடு. மைசூரு அருகிலுள்ள இங்கு நஞ்சுண்டையா என்னும் திருநாமத்துடன் சிவன் அருள்பாலிக்கிறார். கன்னட மக்களின் குலதெய்வம் இவர். தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதைக் கடைய கயிறாகப் பயன்பட்ட வாசுகிப் பாம்பு வலி தாளாமல் நஞ்சு உமிழ்ந்தது. தேவர்கள் செய்வதறியாமல் சிவனைச் சரணடைய, அவர் விஷத்தை உருண்டையாக்கி விழுங்கினார். இதையறிந்த பார்வதி, சிவனின் கழுத்தைப் பிடிக்க விஷம் தொண்டைக் குழியில் தங்கியது. கழுத்தில் விஷம் தங்கிய அவருக்கு 'நஞ்சுண்டையா' என்று பெயர் உண்டானது. சிவன் நஞ்சுண்ட கோலத்தை தரிசிக்க விரும்பிய கவுதம மகரிஷி அதே வடிவில் காட்சியளிக்கும்படி தவமிருந்தார். சிவனும் அவ்வாறே காட்சி தந்தார். அவர் காட்சி தந்த தலம், 'நஞ்சன்கோடு' எனப்பட்டு பின் நஞ்சன்கூடு என்றானது. சுவாமிக்கு 'நஞ்சுண்டய்யா' என்றும், அம்பிகைக்கு பர்வதாம்பாள் என்றும் பெயர் வழங்கப்படுகிறது. குல தெய்வம்: கன்னட மக்களின் குலதெய்வமாக நஞ்சுண்டையா திகழ்கிறார். குழந்தைக்குப் பெயரிடுதல், முடி காணிக்கை, அங்கப்பிரதட்சணம், துலாபாரம் என்று நேர்த்திக்கடன்கள் தினமும் நடக்கின்றன. வீட்டில் நடக்கும் எந்த விசேஷமானாலும் இங்கு முதல் காணிக்கை அளிக்கின்றனர். விஷ பயம், மரண பயம் போக்கும் இந்த சிவனுக்கு சுக்கு, நெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை' கலவை படைக்கப்படுகிறது. வாசல் நோக்கிய நந்தி: இங்குள்ள கருங்கல் நந்தியை தளவாய் விக்ரமாதித்தன் 1446ல் நிர்மாணித்தார். இது பக்தர்களை வரவேற்கும் விதத்தில், வாசலை நோக்கி உள்ளது. அலங்காரத்தில் இருப்பதால் 'அலங்கார நந்தி' எனப்படுகிறது. நாயன்மார் சன்னிதி சிறப்பானது. பிரசன்ன விநாயகர், நர்த்தனமுருகன், லிங்கோத்பவர், முருகேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் சந்நிதிகள் இங்குள்ளன. சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடுவில் 'தேவதேவன்' என்னும் பெருமாள் சன்னிதி உள்ளது. திறக்கும்நேரம்: காலை 6.00 - பகல் 1.00 மணி, மாலை 4.00 - இரவு 9.00 மணிஇருப்பிடம்:மைசூருவுக்கு தெற்கே 18 கி.மீ., தொலைபேசி: 08221 226 245.