மட்டபல்லி குகை நரசிம்மர்
பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப்பட்ட நரசிம்மர் ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மட்டபல்லி குகையில் கோவில் கொண்டிருக்கிறார். தல வரலாறு: பரத்வாஜரும், அவரது சீடர்களும் வழிபட்ட நரசிம்ம விக்ரஹம் மட்டபல்லி வனத்திலுள்ள குகையில் இருந்தது. காலப்போக்கில் இது யாருக்கும் தெரியாமல் போனது. ஒரு சமயம் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஸ்ரீஅனுமலா மச்சிரெட்டியின் கனவில் தோன்றிய நரசிம்மர், 'மட்டபல்லி குகையில் வீற்றிருக்கும் எனக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்'' என்று உத்தரவிட்டார். அத்துடன் மன்னருக்கு காட்சியும் அளித்தார். மன்னர் அவருக்கு கோவில் அமைத்தார். குறை ஒன்றுமில்லை: மூலவர் யோகானந்த நரசிம்மர் குகைப் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளார். குகையின் மேற்பகுதி பாறையாக இருப்பதால் பக்தர்கள் குனிந்தே செல்ல முடியும். பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் காட்சி தரும் நரசிம்மரின் அருகில் லட்சுமிதாயார் வீற்றிருக்கிறாள். மற்றொரு லட்சுமி சிற்பம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் தெளிவாக இல்லாததால் 1975ல் ராஜ்ய லட்சுமி தாயாரின் சிற்பம் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், உற்சவர்களின் சிலைகள் சுவாமியின் முன்புறம் உள்ளன. கருவறைக்கு முன்புள்ள முக்தி மண்டபத்தில் கோதாதேவி(ஆண்டாள்), பிருகு, அத்திரி, கஷ்யபர், வைகானச ஆச்சார்யலு ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. அழகான ஊஞ்சல் மண்டபம் இங்குள்ளது. கருடனும், ஆஞ்சநேயரும் நரசிம்மரை வணங்கும் விதத்தில் வீற்றிருக்கின்றனர். ஆன்மிக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் இந்த நரசிம்மரின் பெருமையை தனது, 'குறையொன்றுமில்லை' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.நோய் தீர வழிபாடு: தீராத நோய் உள்ளவர்கள் இங்கு 11 நாள் தங்கி கிருஷ்ணா நதியில் நீராடி ஒரு தடவைக்கு 32 முறை வீதம் அதிகாலை, மதியம், மாலை நேர பூஜை நேரத்தில் கோவிலை வலம் வந்து வழிபடுகின்றனர். இருப்பிடம்: விஜயவாடா- ஐதராபாத் சாலையில் 100 கி.மீ., கடந்தால் 'கோதாடா' என்னும் சிறுநகரம். இங்கிருந்து ஹுசூர் நகர் வழியாக மட்டபல்லிக்கு 40 கி.மீ., மட்டபல்லியில் பெரிய கடைகள் இல்லை. ஹுசூர் நகரில் ஓட்டல், கடைகள் உள்ளன.திறக்கும் நேரம்: காலை 6.00 - பகல் 12.00, மாலை 4.00- இரவு 7.30 மணிதொலைபேசி: 08683- 227 922.பக்தர்களுக்கு எச்சரிக்கை: கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள இந்த கோவிலில் பக்தர்கள் நீராட படித்துறை உள்ளது. இதன் ஆழமான பகுதியில் முதலைகள் இருப்பதால் நதியின் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பக்தர்கள் நீராட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.