உள்ளூர் செய்திகள்

நரசிம்ம லட்சுமி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு தாயார் நரசிம்மரை கைகூப்பி வணங்கும் நிலையில் காட்சி தருகிறாள். இவளுக்கு நரசிம்ம லட்சுமி என்று பெயர். தல வரலாறு: இரண்யன் என்னும் அசுரனுக்கு மகனாக பிறந்தாலும், பிரகலாதன் விஷ்ணு பக்தனாக விளங்கினான். மக்கள் அனைவரும் தன்னையே கடவுளாக வழிபட வேண்டும் என்று இரண்யன் கட்டளை இட்டிருந்தான். ஆனால், அந்த கட்டளையை பிரகலாதனே மதிக்கவில்லை. எனவே மகனைக் கொல்ல அவன் துணிந்தான். அவனைக் காக்க விஷ்ணு, நரசிம்ம மூர்த்தியாக தூணில் இருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்டு உக்கிரத்துடன் தோன்றினார். இரண்யனைக் கொன்று அவனது குடலை மாலையாக்கிக் கொண்டார். நரசிம்மரைக் கண்டு உலகமே நடுங்கியது. மார்க்கண்டேயர் லட்சுமியிடம், நரசிம்மரை சாந்தப்படுத்த வேண்டினார். லட்சுமியும் அவரைச் சாந்தப்படுத்தினாள். இதனடிப்படையில் லட்சுமி நரசிம்மர் கோவில் இத்தலத்தில் அமைக்கப்பட்டது. நரசிம்ம லட்சுமி: மூலவர் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில், இடது தொடை மீது தாயாரை தாங்கி இருக்கிறார். நரசிம்மரை சாந்தப்படுத்தும் விதமாக தாயார் வணங்கிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமிக்கு முக்கியத்துவம் என்பதால் இக்கோவில் 'நரசிம்ம லட்சுமி கோவில்' என்றும் அழைக்கின்றனர். தாயார் கனகவல்லி தனி சன்னிதியில் இருக்கிறாள். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜர் நின்ற கோலத்தில் உள்ளார். ரங்கநாதர், கோதண்ட ராமர், வேணு கோபால், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னிதிகளும் உள்ளன. சங்கு சக்கர ஆஞ்சநேயர்: இத்தலம் திந்திருணி வனமாக இருந்தது. 'திந்திருணி' என்றால் புளியமரம். 'திந்திருணி வனம்' என்பது மருவி திண்டிவனம் என்றானது. இந்த வனத்தில் வசித்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்னும் அரக்கர்கள் முனிவர்களைத் துன்புறுத்தி வந்தனர். அரக்கர்களிடமிருந்து தங்களைக் காத்தருளும்படி முனிவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். விஷ்ணு சங்கு, சக்கரத்தை ஆஞ்சநேயரிடம் வழங்கி அசுரர்களை அழிக்க அனுப்பினார். ஆஞ்சநேயரும் அசுரர்களைக் கொன்று அழித்தார். இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரம் ஏந்தியபடி நான்கு கைகளுடன் அருள்புரிகிறார். இந்தக் கோவிலில் மே 18 முதல் பத்து நாட்கள் நரசிம்ம ஜெயந்தி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. மே20ல் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு பூஜையும், 21ல் கருடசேவையும் விசேஷம்.இருப்பிடம் : விழுப்புரம் - சென்னை சாலையில் 40 கி.மீ.,திறக்கும் நேரம் : காலை 7.30 - மதியம் 12.00 மணி, மாலை 5.00 - இரவு 9.00மணிஅலை/தொலைபேசி: 99432 40662, 0414 - 722 5077