உள்ளூர் செய்திகள்

ஆயுள் நீடிக்க படிபூஜை

குழந்தைப் பருவம், திருமண பருவம், துறவற பருவம் என முக்கோலங்களிலும் முருகப்பெருமான் காட்சி தரும் அழகை, சேலம் மாவட்டம் வடசென்னிமலையில் காணலாம். ஆயுள் நீடிக்க இங்குள்ள 60 படிகளுக்கு பூஜை செய்யலாம். தல வரலாறு: இக்குன்றின் அடிவாரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன், அவர்களுடன் சேர்ந்து கொண்டான். சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென குன்றின் மீது ஏறினான். சிறுவர்களும் அவனை தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற சிறுவன், திடீரென மறைந்தான். ஊர் மக்களிடம் இச்சம்பவத்தை சிறுவர்கள் கூறினர்.சிறுவன் மறைந்த இடத்தில் சுயம்பு சிலை, பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன் தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர். பாலசுப்பிரமணியர் என பெயர் சூட்டினர்.குழந்தை முருகன்: முதலில் சுயம்புமூர்த்தி, தண்டாயுதபாணி சன்னதிகள் இருந்தன. பக்தர் ஒருவரின் கனவில் வந்த முருகன், குழந்தை வடிவாக இருக்க விரும்புவதாக கூறினார். அதன் பின் சுயம்புமூர்த்தி சிலைகளுக்கு பின்பகுதியில், பாலசுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.முக்கோல தலம்: பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த (குடும்ப) நிலையிலும் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். இம்மூவரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியன்று கிரிவலம் உண்டு. இம்மூன்று கோலங்களும் வாழ்க்கையின் உண்மையை விவரிக்கிறது. குழந்தையாக இருக்கும்போது, மகிழ்ச்சியாகவும் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் கலந்த கடமையில் உழல்கிறான். துறவற நிலையை அடையும்போது, எதன் மீதும் பற்றில்லாமல் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறான்.சிறப்பம்சம்: தண்டாயுதபாணி, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார். நடுமலையில் இடும்பன் சன்னதியும், அதனருகில் நெல்லிக்கனியை, முருகனுக்கு அவ்வையார் வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலையும் உள்ளது. இவ்விடத்தில், பக்தர்கள் வீடு போல கற்களை குவித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பாக்கியம் பெறலாம். சன்னதிக்கு செல்லும் 60 படிக்கட்டுகள், தமிழ் வருடங்களை குறிக்கின்றனர். ஆயுள் நீடிக்க இந்தப் படிகளுக்கு பூஜை செய்கின்றனர்.செல்வது எப்படி: சேலம்-கள்ளக்குறிச்சி சாலையில் 64 கி.மீ., துாரத்தில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ., துாரத்தில் கோயில். விசேஷ நாட்கள்: பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம்நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 6:00 மணிதொடர்புக்கு: 04282 - 235 201அருகிலுள்ள தலம்: 20 கி.மீ.,ல் ஆறகழூர் கரிவரதராஜர் கோயில்