சனீஸ்வரர் கோயில்கள்
● திருநள்ளாறு -சேதி நாட்டு இளவரசி தமயந்தியை தேவர்கள் மணம்புரிய விரும்பிய நிலையில், நிடத நாட்டு மன்னன் நளன் திருமணம் செய்தான்.பொறாமை கொண்ட தேவர்கள் சனீஸ்வரனின் உதவியை நாடினர். நளனின் துாய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, ஏழரை ஆண்டு பீடித்தார் சனீஸ்வரர். நளன் மனம் கலங்கவில்லை. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். நளனின் வேண்டுகோளுக்கு இணங்கி கோயிலில் தங்கினார். இவரது திசை தெற்கு. ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார்.எப்படி செல்வது: மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ.,தொடர்புக்கு: 04368 - 236 530● குச்சனுார் -மன்னர் ஒருவர் குழந்தை வரம் வேண்டி கடவுளை வழிபட்டார். அப்போது அசரீரி,'' உன் வீட்டுக்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும்'' என்றது. அதன்படி வந்த சிறுவனுக்கு 'சந்திரவதனன்' என பெயரிட்டு வளர்த்தார். அரசிக்கும் குழந்தை பிறக்க, 'சதாகன்' என பெயரிட்டார். எனினும் வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கு முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னர் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. தந்தை மீது அன்பு கொண்ட சந்திரவதனன், இரும்பால் சனியின் உருவம் செய்து, ' உத்தமரான என் தந்தைக்கு தரும் துன்பத்தை எனக்கு கொடு'' என்று வேண்டினான். சனீஸ்வரர் அவனது தியாகத்தைப் பாராட்டி, ஏழரை நாழிகை மட்டும் பீடித்து விலகினார். சந்திரவதனன் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதனால் குச்சனுார் எனப்படுகிறது. எப்படி செல்வது: தேனியிலிருந்து 30 கி.மீ.,தொடர்புக்கு: 94420 22281● சோழவந்தான் - மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் சுயம்புவாக (தானாக எழுந்தது) சனீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். 500 ஆண்டு பழமை மிக்க இக்கோயிலின் தலவிருட்சமாக மாவலிங்க மரம் உள்ளது. சனீஸ்வரர் மேற்குநோக்கி இருக்கும் தலம். இது விசாக நட்சத்திர பரிகார தலம். சனிதிசை, சனி புத்தி, ஏழரை, அஷ்டமச்சனியால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை எள் விளக்கு ஏற்றி, ஒன்பது முறை வலம் வருவர்.எப்படி செல்வது: மதுரையில் இருந்து 25 கி.மீ., தொடர்புக்கு: 97504 70701● ஸ்ரீவைகுண்டம்-துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில், சனி தலமாக விளங்குகிறது. இங்கு சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். சனி திசை, சனி புத்தி காலத்தில் இழந்த சொத்து மீண்டும் கிடைக்க வழிபாடு நடக்கிறது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு ஈடாக விளங்கும் இத்தலம் நவ கைலாய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.எப்படி செல்வது: திருநெல்வேலி-திருச்செந்துார் சாலையில் 30 கி.மீ.,● திருக்கொள்ளிக்காடு - சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதற்கு தகுந்தபடி பலன் கொடுப்பார். ஆனால், அவரால் கிடைக்கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது. மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினைத்து தவமிருந்தார். சிவன் தரிசனம் தந்து, சனீஸ்வரரை 'பொங்கு சனியாக' மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார். கலப்பை ஏந்தியிருக்கும் இவர், 'உழைப்பவருக்கே அருள்புரிவேன்' என உணர்த்துகிறார். நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. இந்தக் கோயில் மேற்கு நோக்கியிருப்பது மிகவும் சிறப்பு.எப்படி செல்வது: திருவாரூர் - திருத்துறைபூண்டி சாலையில் கச்சனம் வழியாக 28 கி.மீ., தொடர்புக்கு: 04369 - 237 454● கல்பட்டு - விழுப்புரம் அருகிலுள்ள கல்பட்டு கிராமத்தில், 21 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரமாண்டமான காக வாகனத்தின் மீது ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். எப்படி செல்வது: விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் 15 கி.மீ., துாரத்தில் மாம்பழபட்டு கிராமம். இங்கிருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ., தொடர்புக்கு: 04146 - 264 366