பழநியாண்டவர் வடிவத்தத்துவம்!
தந்தை வைத்த போட்டியில் கனி கிடைக்காததால் கோபித்த முருகன் மயில் மீதேறி பழநி வந்தார். மகனைச் சமாதானப்படுத்திய தாய், மீண்டும் கயிலைக்கு அழைத்தாள். ஆனால், முருகன் பழநியிலேயே இருக்க விரும்பினார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. குழந்தை வடிவமாக நின்றதால், 'குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார். பழத்திற்காக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், 'பழம் நீ' (நீயே ஞானப்பழம்) என்று ஆறுதல் வார்த்தை சொன்னார். இப்பெயரே 'பழநி' என மருவியது. கனிந்த பழம் எப்படி <உதிர்ந்து விடுமோ, அதுபோல சொந்த பந்தங்களையும், உலகப்பொருட்கள் தரும் இன்பத்தையும் விட்டு விலகினால் ஞானம் கைகூடும். அதனால் தான் முருகப்பெருமான் பெற்றோர், சகோதரர் மீதுள்ள பந்தத்தை அறுத்தார். உடுத்தும் உடை மீது கூட பற்றை அறுத்து, கோவணத்துடன் பழநியில் நின்றார். பந்தத்தையும், பற்றையும் துறந்தவர்களே தன்னை அடைய முடியும் என இக்கோலம் மூலம் உணர்த்துகிறார்.