பெற்றோரை போற்றுங்கள்
வயதான தந்தை ஒருவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அருகே அவரது மனைவி புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் துாரம் தள்ளி அவரது மகன் கணினி முன் வேலை செய்து கொண்டிருந்தார். ஜன்னல் அருகில் பறவை ஒன்று அமர்ந்தது. ''அது என்ன'' என மகனிடம் கேட்டார் தந்தை. திரும்பி பார்த்த மகன் ''அது காகம்'' என சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் தந்தை என்னது என கேட்க... மீண்டும் அவ்வாறே பதில் சொன்னார். மூன்றாவது முறையாக கேட்கவும் ''அது காகம் என சொன்னேனே உங்களுக்கு கேட்க வில்லையா'' என கத்தினார். இதை எல்லாம் கவனித்த தாயார் ஒரு டைரியை எடுத்து வந்தார். அதில் அவன் தந்தை எழுதிய குறிப்பை மகனிடம் காட்டினார். அதில் இன்று வீட்டின் முற்றத்தில் வந்து நின்ற பறவை என்னது எனக் கேட்டான் இரண்டு வயது மகன். அவனுக்கு காகம் என்று ஒரு முறை.. அல்ல இருபது முறை பதில் சொன்னேன். அதற்கு காரணம் அவனது மழலை மொழியே. அவன் மீது அன்பு தான் அதிகமானது. அவன் வெகுளித்தனமாக கேட்டது எனக்கு பிடித்திருந்தது என அதில் எழுதியிருந்தார் தந்தை. அதை அவன் படிக்கும் போதே ''பெற்றோரை கண்கலங்காமல் பாதுகாப்பவர் இறைவனுக்கு விருப்பமானவர்'' என நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஞாபகம் வந்து அவனது கண்களில் கண்ணீர் பனித்தன.