நாவடக்கம் அவசியம்
ஹஜ்ரத் நுாஹ் அலைஹிஸ்ஸலாம் என்பவர் நபியாக இருந்தார். இவரது பெயரில் 'நுாஹ்' என வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. 'நுாஹா' என்றால் 'அழுது புலம்புபவர்' என பொருள். எதற்காக அழுதார் தெரியுமா...ஒருநாள் நுாஹ் செல்லும் வழியில் விகாரமான தோற்றமுடன் நாய் ஒன்று வந்தது. உடனே அவர், 'கோர வடிவம் கொண்ட நாயே! விலகிச் செல்' எனக் கத்தினார். இறைவன் அந்த நாய்க்குப் பேசும் சக்தியைக் கொடுத்தான். ''என் தோற்றத்தை கண்டு வெறுப்பு அடையும் நீங்கள் அழகான தோற்றமுள்ள நாயை படையுங்கள் பார்க்கலாம். அவன் நினைத்தால் என் கோரமான உருவத்தை அழகாக மாற்றி விடுவான். ஓ நுாஹே! நாவடக்கம் அவசியம். உங்களுக்கு நீங்களே களங்கம் உண்டாக்காதீர்கள்'' என்றது நாய். இந்த உபதேசத்தால் மனம் திருந்திய நுாஹ் பல வருடம் அழுதார். இதனால் அவருக்கு இப்பெயர் வந்தது. இவருக்கு கீழ்க்கண்ட சிறப்புகள் வழங்கப்பட்டன. * இவரே இரண்டாவது ஆதம். காரணம் இவரது காலத்தில் இருந்து புதிய வழித்தோன்றல் ஆரம்பமானது. * இறை மறுப்பு கூடாது என முதன் முதலில் பிரசாரம் செய்தவர். * திருந்தாத மக்களை சாபமிட்டு அழித்தார். * உலக முடிவு ஏற்பட்டு தீர்ப்பு சொல்வதற்காக எழுப்பப்படும் முதல் மனிதர் நபி (ஸல் - அம்). இரண்டாவதாக எழுப்பப்படுபவர் இவரே. * இவர் நீண்ட ஆயுள் பெற்றிருந்தார். ஆயிரம் வருடங்களைக் கடந்தும் இவரின் பற்கள் விழவில்லை. முடி நரைக்கவில்லை. * நாள் ஒன்றுக்கு 700 'ரக்அத்' தொழும் வழக்கம் உள்ளவர்.