நல்லவன் நானே...
புதிய வீடு கட்டிய நாசர் விருந்து ஒன்றை நடத்தினான். அதில் பங்கேற்ற பக்கத்து வீட்டுக்காரர், ''தம்பி. நீங்க எங்க வேலை பார்க்குறீங்க. ஹலால் (அனுமதிக்கப்பட்ட) வழியில்தானே சம்பாதிக்கிறீங்க'' என பலரும் பார்க்கும்படி கேட்டார். அவனுக்கு என்னவோ போலாகி விட்டது. கோபத்தை அடக்கியபடி, ''ஆமாம். முதலில் சாப்பிடுங்க. அப்புறம் நாம் பேசலாம்'' என்றான். சாப்பிட்டு முடித்ததும் பெரியவரை தனியாக அழைத்து தன் எதிர்ப்பை தெரிவித்தான். அதற்கு அவர், ''நான் மார்க்கத்தை நேசிப்பவன். ஹராமான எந்த உணவுப் பொருளும் என் வயிற்றுக்குள் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார். ''உங்கள் மனஉறுதியை பாராட்டுகிறேன். ஆனால் உங்களிடமும் குறை இருக்கிறது. நல்லவன் நானே. மற்றவர்கள் அயோக்கியர்கள் என்பது போல பேசுகிறீர்கள். இதை திருத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே நாயகம் சொல்லும் அறிவுரையை கேளுங்கள். 'முஸ்லிம் சகோதரரின் வீட்டிற்குச் சென்றால் அவர் தரும் உணவை சாப்பிடுங்கள். அவர் தரும் பானங்களை மகிழ்ச்சியுடன் பருகுங்கள். தவறாக எண்ணி துருவி துருவி கேள்வி கேட்காதீர்கள்' என்பதே அது. ஒருவர் தவறான வழியில் சம்பாதிப்பது தெரிந்தால் அவர் அளிக்கும் விருந்தை புறக்கணிப்பதில் தவறில்லை'' என்றார். தவறை உணர்ந்து மனம் திருந்தினார் பக்கத்து வீட்டுக்காரர்