உள்ளூர் செய்திகள்

பகிர்ந்து கொடு

மக்களுக்கு சத்திய நெறியை போதிக்க வந்த நபிமார்களில் ஒருவரே இப்ராஹிம் நபி. அவர் செய்த தியாகத்தை நினைவு கூரும் திருநாளே பக்ரீத். இப்ராஹிம் நபிக்கு ஸாரா, ஹாஜிரா என இரு மனைவிகள். அவருக்கு நீண்ட நாளாக குழந்தை இல்லை. 85வது வயதில் ஹாஜிரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் இஸ்மாயில் நபி. அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு குழந்தை பிறந்தது. பெயர் இஸ்ஹாக் நபி. ஒருநாள் இப்ராஹிம் நபி கனவு கண்டார். அதில் இறைவன், 'உம் மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலியிடு' எனக் கட்டளையிட்டான். நபிமார்களுக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல. அது அவனிடம் இருந்து வரும் கடிதங்கள். இக்கட்டளையை தன் மகன் இஸ்மாயிலிடம் தெரிவித்தார்.அதற்கு அந்த குழந்தை, 'உடனே அக்கட்டளையை நிறைவேற்றுங்கள். நான் அதற்கு காத்திருக்கிறேன்' என்றார். என்னவொரு நம்பிக்கை பாருங்கள். பிறகு இப்ராஹிம் நபி தன் மகனை அழைத்துக் கொண்டு மினா என்னும் மலையின் அடிவாரத்திற்கு வந்தார். குழந்தைப் பாசம் தடுக்காமல் இருக்க தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டார்.பிறகு கூரிய கத்தியால் மகனின் கழுத்தை அறுக்க முயன்றார். அந்த நேரத்தில் வானவர் ஜிப்ரீல் தோன்றி பலியைத் தடுத்தார். அப்போது அங்கு ஒரு செம்மறி ஆடு நின்றிருந்தது. அதன் நிறம் வெண்மையும், கருமையும் கலந்ததாக இருந்தது. 'இஸ்மாயிலுக்கு பதிலாக இந்த ஆட்டை அறுத்துப் பலியிட்டு அனைவருக்கும் பகிர்ந்து கொடு' என இறைக்கட்டளை வந்தது. இதற்கு நன்றி தெரிவித்தார் இப்ராஹிம் நபி.