உள்ளூர் செய்திகள்

கருப்பு மேகம்

ஒழுக்கம், நேர்மையை கைவிட்டு தீயவராக வாழ்ந்த ஆது சமுதாயத்தினர் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. இதை சரிசெய்ய மெக்காவில் உள்ள கஅபதுல்லாஹ்வில் நின்று துஆ (பிரார்த்தனை) கேட்க 70 பேரை அனுப்பினர். அவர்களும் இங்கு வந்து வேண்டினர். அப்போது வெண்மை, சிவப்பு, கருப்பு நிறங்கள் கொண்ட மூன்று மேகக்கூட்டங்கள் அங்கு வந்தன. 'இந்த மேகங்களில் ஏதேனும் ஒரு நிற மேகத்தை தேர்ந்தெடுக்கவும்' என அசரீரி ஒலித்தது. கூட்டத்தினர் ஆலோசித்த பிறகு மழை அதிகம் பொழியும் என நினைத்து கருப்பு நிற மேகத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த மேகம் விரைவாக பஞ்சம் ஏற்பட்ட பகுதிக்கு சென்றது. இதைக் கண்ட ஹஜ்ரத் ஹூத் (அலை) பதறியபடி, 'இந்த மேகம் வரப் போகும் வேதனையின் அடையாளம் அல்லவா' என்றார். இவரைப் போல் ஒரு மூதாட்டியும் மேகத்தை பார்த்து மூர்ச்சையடைந்து விழுந்தாள். ஆது மக்கள் அவரது மூர்ச்சையைத் தெளிய வைத்து காரணத்தைக் கேட்டனர். ''இந்த கருநிற மேகத்திற்குள் மறைந்திருக்கும் பயங்கரக் காற்றை கண்டேன். அந்தக் காற்றைச் சுற்றி நரக நெருப்பின் ஜுவாலைகள் ஆயிரக்கணக்கில் நாக்கை நீட்டிக் கொண்டிருக்கின்றன. மனித உருவில் உள்ள சில பயங்கரத் தோற்றம் உள்ளவர்கள் அந்தக் காற்றை நம் பக்கம் இழுத்துக் கொண்டு வருகின்றனர்'' என்றார்.