சாமர்த்தியசாலி
வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது கழைக்கூத்தாடி ஒருவன் நடந்து கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்த ஒருவர், ''இங்கு யாருக்காவது குந்தீஷ் மொழி தெரியுமா'' எனக் கேட்டார். நண்பர்கள் விளையாட்டாக முல்லாவைக் காட்டி, ''இவருக்குத் தெரியும்'' என்றனர். அந்த நபர், ''எங்கே குந்தீஷ் மொழியில் ஏதாவது ஒரு சொல்லைச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார். சிரித்துக் கொண்டே, 'ஆஷ்' என்றால் சூடான சூப்' என்றார் முல்லா. உண்மையில் அவருக்கு இந்த சொல்லைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ''ஆறின சூப்பை எப்படி சொல்ல வேண்டும்'' எனக் கேட்டார் அந்த நபர். இவருக்கோ அந்த மொழியே தெரியாததால் சமாளிக்கும் விதமாக, ''குந்தீஷ் பேசுவோர் சூடான சூப் மட்டும் குடிப்பர். அதனால் ஆறிய சூப்புக்கு அதில் வார்த்தையே இல்லை'' என நடையைக் கட்டினார் முல்லா. எந்த சூழலையும் சமாளிப்பவனே சாமர்த்தியசாலி.