உள்ளூர் செய்திகள்

சாமர்த்தியசாலி

சாமர்த்தியமாக பேசும் முல்லாவை ஊரே புகழ்ந்தது. இதையறிந்த மன்னர் அவரை சோதிக்க அரண்மனைக்கு வரச் சொன்னார். ''நீங்கள் பேசுவதில் வல்லவராமே. ஏதாவது ஒரு விஷயத்தை இப்போது சொல்லுங்கள். அது உண்மையாக இருந்தால் உங்களின் தலை வெட்டப்படும். பொய் என்றால் துாக்கில் இடப்படுவீர்கள்'' என்றார் மன்னர். உண்மை, பொய் என எதைச் சொன்னாலும் உயிர் போவது உறுதி என்ற இக்கட்டான சூழ்நிலை. அவையில் இருந்தவர் அனைவரும் முல்லாவையே பார்த்தனர். சிரித்தபடி, ''அப்படியானால் மன்னா... தாங்கள் என்னை துாக்கிலிடுவீர்கள் தானே!'' எனக் கேட்டார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். என்ன செய்வது என புரியாமல் விழித்தார். முல்லா சொன்னது உண்மை என்றால் அவரது தலை வெட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் பொய்யாகி விடும். பொய் என்றால் அவர் துாக்கில் இடப்பட வேண்டும். இல்லாவிட்டால் உண்மையாகி விடும். இரண்டுமே செய்ய முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. முல்லாவின் சாமர்த்தியம் கண்டு பரிசளித்தார் மன்னர்.